“சென்சாரில் AAA சர்டிபிகேட் !”: ‘கருப்புப்பெட்டி’ நாயகன் கே.சி.பிரபாத் அதிர்ச்சி பேட்டி

அங்காரகன், தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் தோன்றிய, கே.சி.பிரபாத், பில்லா பாண்டி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அவர் கதை நாயகனாக நடித்திருக்கும் கருப்பு பெட்டி திரைப்படம் அக்டோபர் 18 அன்று தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நாயகியாக தேவிகா வேணுவும் சரவணசக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் தோன்றுகின்றனர்.
மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்ய, அருண் இசை அமைத்துள்ளார். எஸ்.தாஸ் இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில், கருப்புப்பெட்டி படத்தின் கதை நாயகன் கே.சி.பிரபாத்தை சந்தித்து பேசினோம்.திரையுலகுக்கு வந்தது எப்படி?
நான் சினிமா ஆசையில் 17 வயதிலேயே சென்னைக்கு ஓடிவந்துவிட்டேன். ஆனால், அப்போது சினிமாவுக்குள் நுழையவே முடியவில்லை. அதனால் திரும்ப ஊருக்குப் போய்விட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு வருசநாடு படப்பிடிப்புக்காக அந்தப் படக்குழுவினர் எங்கள் ஊருக்கு வந்தார்கள். அப்போது அப்பட இயக்குநர் சூரியபிரகாஷ் உடன் ஏற்பட்ட நட்பு மீண்டும் நுழையக் காரணமாக இருந்தது.
கருப்பு பெட்டி படம் உருவானது பற்றி?
நான் புலிக்குத்திபாண்டி படத்தில் நடித்த போது வேலராமமூர்த்தி அவர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவருடைய நண்பர் இப்படத்தின் இயக்குநர் தாஸ். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் ஏற்கெனவே பில்லாபாண்டி படத்தைத் தயாரித்திருந்ததால் அவர் சொன்ன கதையை ஒரு ஹீரோவை வைத்து தயாரிக்கலாம் என நினைத்தேன். அதை அவரிடம் சொன்னபோது, நான் உங்களைப் பார்த்ததும் இந்தக் கதைக்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என நினைத்து இந்தக் கதையைச் சொன்னேன் என்றார். எனக்கோ ஆச்சரியம். நான் ஹீரோவா நடிச்சா யாரு பார்ப்பாங்க? என்றேன். அவர் எனக்கு நம்பிக்கையளித்து நடிக்க வைத்தார்.
உங்கள் கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள்?
படத்தில் நான் ஒரு சாதாரண மனிதன். வீட்டைத் தாண்டினால் வேலை. அது முடிந்தால் வீடு என்றிருக்கும் நல்ல மனிதன் வேடம். இரவானால் எனக்கு ஒரு கனவு வரும். அதனால் பல சிக்கல்கள். அவை என்ன? அதன் முடிவு என்ன? என்பதுதான் படம். படப்பிடிப்பு திட்டமிட்டபடி சரியாக நடந்து முடிந்தது. பில்லாபாண்டி, தேவராட்டம்,புலிக்குத்தி பாண்டி,அங்காரகன்,யாமம் உட்பட பல படங்களில் நடித்த அனுபவம் இந்தப்படத்தில் நடிக்க உதவியாக இருந்தது.
இப்போது வரை படம் பார்த்தவர்கள் கூறியவை பற்றி..?
நம் நண்பர்களை விடுங்கள். இப்படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் மிகவும் பாராட்டிப் பேசினார்கள். இந்தப் படத்துக்கு டிரிபிள் ஏ கொடுக்கலாம் ஆனால் உங்கள் புத்திசாலித்தனமான ப்ளெயினால் யு ஏ கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதுவே மிகப்பெரிய பாராட்டுதானே.
அப்படியானால் இது வயது வந்தோருக்கான படமா?
அடல்ட் கண்டெண்ட் உள்ள படம். இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேசமயம், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் நாகரிகமாக எடுத்திருக்கிறோம். இது எல்லாத் தரப்பினருக்குமான படமாக இருக்கும்.
பட வெளியீடு குறித்து..?
அக்டோபர் 18 அன்று படம் ரிலீஸ்ஆகிறது என்பது அனைவருக்கும் தெரியும். நான் டிஸ்ட்ரிபியூசன் கம்பெனியும் வைத்திருக்கிறேன். தமிழ்நாடு முழுக்க உள்ள ஏழு ஏரியாக்களிலும் எனக்கு நெருக்கமான டிஸ்டிரிபியூட்டர்ஸ் இருக்கிறார்கள். அதனால் ஏற்கெனவே நான் தயாரித்த பில்லா பாண்டி படத்தை நாங்களே டிஸ்ட்ரிபூசன் செய்தோம்.
இந்தப் படத்தையும் நாங்களே வெளியிடுகிறோம்.
கருப்பு பெட்டிக்கு எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது..?
சுமார் நூறு முதல் நூற்றைம்பது திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. அனைவரும் பாருங்கள்.ஆதரவு தாருங்கள்.
தொடர்ந்து நடிக்கவிருக்கும் படங்கள் பற்றி.?
யாமம் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் காமா படத்திலும் வில்லனாக நடிக்கிறேன். அடுத்து கருப்புபெட்டி படத்தைப் பார்த்தவுடன் இந்த இயக்குநர் ஏற்கெனவே சொன்ன மூன்று கதைகளை அடுத்தடுத்து எடுக்கவிருக்கிறோம்.அவற்றிலும் நடிப்பேன்.
யாமம் படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டதே. இப்போது நலமா?
ஆமாம் ,திடீரென நடந்துவிட்ட அதிர்ச்சி அது. அதன்பின் சிகிச்சை எடுத்துக் கொண்டு இப்போது ஓய்வில் இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன்.
வேறு ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டமும் இருக்கிறதா?
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்துக்கும் கதைதான் ஹீரோ. அந்தக் கதைக்கு என்னென்ன தேவையோ அவற்றைச் செய்து படம் தயாரிப்பேன்.அதேபோல என்னுடைய டிஸ்டிரிபியூசன் கம்பெனி மூலம் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் படங்களை ரிலீஸ் செய்யும் திட்டமும் இருக்கிறது.