கண்ணப்பா: திரைப்பட விமர்சனம்

கண்ணப்பா: திரைப்பட விமர்சனம்

பெரிய புராணம் சொல்லும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான, கண்ணப்ப நாயனாரின் கதையை, இன்னும் கொஞ்சம் கற்பனை சேர்த்து சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கிறார்கள்.

காட்டுப் பகுதியில் ஐந்து ஊர்களில் பழங்குடியினர் வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் பகை.

இதில் ஒரு ஊரின் தலைவரின் மகன் – இளவரசன் – திண்ணன். அந்த ஊர் வழக்கப்படி காளிக்கு தனது நண்பன் பலி கொடுக்கப்பட்டதைப் பார்த்ததில் இருந்து அவனுக்கு கடவுள் என்றாலே வெறுப்பு.

அந்தப் பகுதியில் இருக்கும் வாயு லிங்கத்தை அபகரிக்க ஒரு பெரும்படை வருகிறது. அதை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை.

இதற்கிடையே நரபலி கூடாது என குரல் கொடுத்ததால் நாயகனை, ஊரில் இருந்து விலக்கி வைக்கிறார்கள். இன்னொரு ஊர்த் தலைவியின் மகளுடன் காதல். அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு தனியே வாழ்கிறார் திண்ணன்.

அந்தப் பெண்ணை கவர ஒருவன் திட்டமிடுகிறான்.

காதலியை திண்ணன் காப்பாற்றினாரா, எதிரிகளிடம் இருந்து வாயு லிங்கத்தை பாதுகாத்தாரா, அவர் கண்ணப்பராக மாறியது எப்படி என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படமே கண்ணப்பா.கண்ணப்பராக மாறும் திண்ணனாக விஷ்ணு மஞ்சு நடித்து உள்ளார். கழுகு ஒன்று குழந்தையைத் தூக்கிச் செல்ல… அதை வீழ்த்தி குழந்தையைக் காப்பாற்றும் அறிமுகக் காட்சியிலேயே ரசிக்கவைக்கிறார். இறந்துவிட்ட தாயின் மீது காட்டும் பாசம், அப்பாவின் மீதான மரியாதை, ஊர் மக்கள் மீதான நேசம், நாயகியிடம் வெளிப்படுத்தும் காதல், எதிரிகளை துவம்சம் செய்யும் மூர்க்கம் என அசத்துகிறார் நாயகன் விஷ்ணு மஞ்சு. ( பார்ப்பதற்கு நம்ம ஊர் நடிகர் சந்தானம் போலவே இருக்கிறார்!)

அவரது காதல் மனைவியாக, தீவிர சிவன் பக்தை நெமிலியாக வருகிறார் நாயகி ப்ரீத்தி முகுந்தன். நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அத்தனை கவர்ச்சி.

“கண்ணப்பரின் மனைவி பழங்குடி இனத்தவர். ஆனால் படத்தில் அவரை சிகப்பான ஆளாக காண்பித்து இருக்கிறார்கள்” என்று எதிர்ப்பு எழுந்தது. இப்படி கவர்ச்சி ஆட்டம் போட்டதற்கு ஏதும் எதிர்ப்பு வருமா என தெரியவில்லை.

திண்ணனின் தந்தையாக சரத்குமார் நடித்து உள்ளார். மகன் மீதான பாசத்தைவிட ஊரின் நலனே முக்கியம் என அவர் எடுக்கும் முடிவு… பிறகு அவரது முடிவு… எல்லாமே நெகிழ வைக்கின்றன. வழக்கம் போல சிறப்பாக நடித்து இருக்கிறார்.

ருத்ராவாக வரும் பிரபாஸ் சிறப்பாக நடித்து உள்ளார். மாறுவேட சிவபெருமானாக வரும் மோகன்லால் நடிப்பும் அற்புதம். ஆனால் அவர் பேசும் மலையாளத் தமிழ்தான் இடறுகிறது. தூய தமிழில் யாரையாவது டப்பிங் செய்யச் சொல்லி இருக்கலாம்.

வாயு லிங்க்தை பூஜை செய்யும் பரம்பரை அர்ச்சகராக மோகன்பாபு, பரமசிவன் – பார்வதியாக வரும் அக்சய் குமார் – காஜல் அகர்வால், வில்லனாக வரும் அர்பித் ரங்கா, ஒரு பட்டி (ஊர்) தலைவராக சம்பத் ராம் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்து இருக்கிறது.

மணிசர்மா, ஸ்டீவன் தேவசியின் இசை படத்துக்கு பலம். அதே நேரம் காதல் பாடல் ஒன்று தற்போதைய சினிமா பாணியில் இருக்க… கண்ணப்பரும் நெமிலியும் சினிமா டான்ஸ் ஆட… ஒரு பக்கம் காமெடியாக இருந்தாலும் ரசிக்கவைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு அருமை. நியூஸிலாந்தின் காட்டுப் பகுதியை – அதன் பசுமையை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.

ஆண்டனியின் படத் தொகுப்பு, கச்சிதம். மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை.

எதிர்பாராத விதமாக, கண்ணப்ப நாயனாரின் முன் பிறவிக் கதையையும் சேர்த்து இருப்பது ரசிக்க வைக்கும் ட்விஸ்ட்.

அசைவ ( பக்தி) அரசியல், கோயிலுக்குள் தீண்டாமை என சம காலத்தில் நிலவும் அநீதிகளை எதிர்த்து ஒரு புராணக் கதை மூலம் நீதி சொல்ல முயன்ற முகேஷ்குமார் சிங் பாராட்டுக்கு உரியவர்.அதே நேரம்…

வேடர் குலத்தைச் சேர்ந்த நாகன் – தத்தை ஆகியோருக்கு குழந்தைப்பேறு இல்லை. முருகனிடம் வேண்டி நிற்க… திண்ணப்பன் பிறக்கிறான். இப்படித்தான் சொல்கிறார் சேக்கிழார். ( பெரியபுராணத்தில்..)

இதை படத்தில் குறிப்பிடவில்லை. தவிர மகாபாரத அர்ஜூனனின் அடுத்த பிறவிதான் கண்ணப்பா என்கிறார்கள்.

கண்ணப்பர் வழிபட்டதாக சொல்லப்படும் வாயு லிங்கம் இருந்த இடத்தில்தான் காளஹஸ்தி கோயில் கட்டப்பட்டது. கட்டியவர் ராஜேந்திர சோழன். அவருக்குப் பிறகும் பல சோழ மன்னனர்கள் அந்தக் கோயிலுக்கு தொடர்ந்து கொடை அளித்து பாதுகாத்தனர்.

போகட்டும்…

தமிழ்நாட்டில் பர்கூர், சத்தியமங்கலம்/ கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடகாவில் கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளிலும் ‘லிங்காயத்து (ஜங்கம)’ என்ற சாதியினர் வாழ்கின்றனர். இவர்கள், தங்களைக் குறிப்பிடும் சாதிப் பெயர் தவறு என்றும், தாங்கள், ‘பேடகம்பன’ என்ற சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் தங்களை கண்ணப்ப நாயனாரின் சந்ததி என்கிறார்கள். சுமார் அறுபதாயிரம் மக்கள் தொகை கொண்ட இவர்கள் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். வறுமை காரணமாக கல்வி அறிவு பெற்றவர்களும் இல்லை.

தங்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க போராடி வருகிறார். அவர்களுக்காக படக்குழு குரல் கொடுக்கட்டும். பிரபலமானவர்கள் குரல் கொடுத்தால் நல்லது நடக்கலாம்.

ரேட்டிங்:  2.9/5

– டி.வி.சோமு