“இளைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கதை!”: ‘கண்ணப்பா’ விழாவில் சரத்குமார்

“இளைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கதை!”:  ‘கண்ணப்பா’ விழாவில் சரத்குமார்

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பரின் கதாபாத்திரத்தில், தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம், கண்ணப்பா.

முகேஷ் குமார் சிங், இயக்கத்தில், சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்‌ஷய்குமார் தோன்றுகின்றனர்.

இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன் 27-ம் தேதி வெளியிடுகிறது.இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறும்போது, ‘‘கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கைக் கதையை ஏற்கெனவே கன்னடத்தில் ராஜ்குமார், தெலுங்கில் கிருஷ்ணம் ராஜு உருவாக்கி நடித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம், விஷ்ணு மன்சுவின் பார்வையில் உருவாகி இருக்கிற கதை.

சாதாரண வேடனாக இருந்த ஒருவன், எப்படி சிவபக்தன் ஆகிறான் என்று கதை செல்லும். தெய்வ நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களின் போராட்டம் முதல் பாதியில் இருக்கும். நம்பிக்கை இல்லாத ஒருவர் சிவபக்தராக மாறுவதுதான் மையக்கரு.

இந்தப் படத்தின் சில காட்சிகளை 120 நாட்களுக்கு மேல் நியூசிலாந்து நாட்டில் படமாக்கி இருக்கிறார்கள். அது பெரிய விஷயம். இந்தப் படத்தின் பின்பகுதியில் வருகிற கடைசி ஒரு மணி நேரம் பிரம்மாண்டமாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக இருக்கும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய படமாக இது இருக்கும். சரித்திர, இதிகாசத்தில் இருக்கிற சில கதைகளை இப்போதிருக்கும் தலைமுறைக்கு நாம் சொல்ல மறந்துவிடுகிறோம். அதைச் சொல்லும் படமாக, இப்படி ஒரு சிவபக்தர் இருந்தாரா என்று கேட்கும் அளவுக்கு இந்தப் படம் இருக்கும்” என்றார்.

நிகழ்வில்  நடிகர் சம்பத்ராம் பேசுகையில், “ இந்த படம் நிச்சயமாக நூற்றுக்கு நூறு வெற்றி படமாக இருக்கும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸியின் இசை மிக சிறப்பாக இருந்தது. ஐதராபாத்தில் அவரது பணி பேசப்பட்டது, சரத் சார் கூட பாடல்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக்கொண்டார்” என்றார்.படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில், “இந்த படத்தில் மூன்று டிராக்குகள் இருக்கிறது. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய ஒருவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், காதல் கதை மற்றும் ஒரு கிராமத்தை கைப்பற்ற நடக்கும் யுத்தம், என்று மூன்று டிராக்குகள் இருப்பதால் சிலருக்கு படம் நீளமாக இருப்பது போல் தோன்றும், ஆனால், அந்த உணர்வே உங்களுக்கு ஏற்படாத வகையில் படம் கிரிப்பாக இருக்கும்.

இந்த படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, கதையை மிக சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கிறது. கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இறுதியில் நீங்கள் நிச்சயம் கண்கலங்குவீர்கள்” என்றார்.விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “ ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட நாம் காலகாலமாக கேட்டு வந்த கதைகளை நாம் திரையில் பார்க்கும் போது, அது அவர்களை தொடர்புபடுத்திக் கொள்ளும். இந்த கண்ணப்பா படத்தை பொறுத்தவரை சிவபக்தி மற்றும் கடவுள் பக்தி உடையவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்டமான காட்சி அமைப்பு என படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

இதில், சரத்குமார் சார் மிக சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வேடம் என்ன என்பது டிரைலரில் தெரிகிறது. ஆன்மீகவாதியாக நடித்திருக்கிறார். அவர் தசரதன் படத்தில் கடவுள் பக்தி இல்லாதவராக நடித்திருப்பார், ஆனால் இதில் கடவுள் பக்தி உடையவராக நடித்திருக்கிறார். இந்த படம் பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

Related Posts