கங்குவா: விமர்சனம்
2024-ம் ஆண்டு: காவல் துறையிடம் பணம் வாங்கிக்கொண்டு, குற்றவாளிகளை ரகசியமாக தேடிப் பிடித்துக் கொடுக்கும் (பவுன்ட்டி ஹண்டர்) வேலையைச் செய்கிறார் பிரான்சிஸ்.
இந்திய எல்லைப்பகுதியில் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ரகசிய பரிசோதனைக் கூடத்தில்தப்பிக்கும் சிறுவனை ஒரு கும்பல் துரத்துகிறது..
இந்த நிலையில் பிராசிஸூம் ஸெட்டாவும்சந்திக்கிறார்கள்.
1070-ம் ஆண்டு: பெருமாச்சி தீவின் இளவரசன் கங்குவா. அந்த தீவை கைப்பற்ற ரோமானியர்கள் பெரும்படையோடு வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக, பக்கத்துத் தீவில் இருக்கும் அரத்தி குல அரசன் ருத்திரன் கங்குவாவின் பெருமாச்சி மீது படையெடுத்து வருகிறான்.
இதற்கிடையே துரோகம் செய்யும் ஒருவனை கங்குவா கொல்ல… அவனது மகன் அநாதையாகிறான். அந்த சிறுவனை தன் பொறுப்பில் எடுத்து வளர்க்கிறான் கங்குவா.
அந்தக்கால கங்குவா – சிறுவன்… இந்தக்கால பிரான்சிஸ் – சிறுவன்…இருவருக்கிடையேயான தொடர்பு என்ன… முடிவு என்ன என்பதுதான் கதை.
இந்தக்கால இளைஞன் பிரான்சிஸாக வரும் சூர்யாவின் பேச்சு, உடல் மொழி எதுவும் ரசிக்கவைக்கவில்லை. செயற்கைத்தனம்.
ஆனால் அந்தக்கால இளவரசனாக வரும் கங்குவா சூர்யா அசத்துகிறார். அசாத்திய திறமையுள்ள போர் வீரனாக அதிரடியாக சண்டை செய்வது.. அதே நேரம் அநாதையாகும் சிறுவனிடம் அன்பு காட்டுவது என ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டுகிறார் கங்குவா சூர்யா.
வில்லன் ருத்ரனாக வரும் பாபி தியோல் மிரட்டுகிறார்.
நாயகி திஷா பதானி சில காட்சிகள் வந்து எரிச்சலூட்டுகிறார். அதே அலைவரிசையில் வந்து டார்ச்சர் செய்கிறார்கள் கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்.
குழந்தை நட்சத்திரமாக இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேயோன், கவனிக்க வைக்கிறார். கோபப்படும் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் அவரிடம் இயக்குநர் வேலை வாங்கி இருக்கலாம்.
மிகச் சில காட்சிகளிலேயே வந்தாலும் கருணாஸ், போஸ் வெங்கட் ஆகியோர் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.
பரந்த கடல், தீவுகள், காடு, மலை, அருவி என அற்புதமான கற்பனை உலகை கண் முன் நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி. கலை இயக்குநர் (அமரர்) மிலனும் சிறப்பாக உழைத்து இருக்கிறார். குறிப்பாக மண்டை ஓடு தோரணம், யானைத் தந்த தூண் உள்ளிட்டவைகளைச் சொல்லலாம்.
ஹரிஹர சுதனின் சி.ஜி.யும் பிரமிக்க வைக்கிறது. யானை, பாம்பு வரும் காட்சிகள் கூடுதல் பிரமிப்பு.
டி.எஸ்.பி.யின் இசையில் . ‘ஆதி நெருப்பே’, ‘தலைவனே’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் துள்ளல். (பல இடங்களில், அதீத சத்தம்தான் மைனஸ்.)
கொன்றவர்களின் கைகளை வெட்டி எடுத்து கணக்கு காட்டும் காட்சியில், கருணாஸ் செய்யும் காரியம்… சிறுவனுக்கும் கங்குவாவுக்குமான பாசப்பிணைப்பு, பெண்கள் சண்டையிடும் காட்சி, இறுதிக் காட்சியில் இன்றைய – அன்றைய பரபரப்பான சண்டைக் காட்சிகள் என்று முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.
இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பாக திரைக்கதை அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தவிர, மனதில் ஒட்டாத ஆரம்பகட்ட (கோவா) காட்சிகள், சிறுவர்களை வைத்து என்ன ஆராய்ச்சி.. ஏன் ஒரு சிறுவன் தப்பிக்கிறான் போன்றவற்றை விரிவாகச் சொல்லாதது, கதாபாத்திரங்கள் எல்லாம் கத்துவது, இரைச்சலான இசை… என படத்தில் மைனஸ்கள் உண்டுதான்.
ஆனாலும் சூர்யாவின் நடிப்பு, ஒளிப்பதிவு, சிஜி, இசை, கலை என கங்குவா அளிக்கும் பிரமிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய படம்.
– டி.வி.சோமு

