“கபடி கார்த்திகாவை ஏமாற்றினேனா?”: ஆவேச மன்சூர் போராட்ட அறிவிப்பு!
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா தங்க பதக்கம் வென்றார்.
இதைத் தொடர்ந்து கார்த்திகாவை நேரில் அழைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். கபடியை களமாகக் கொண்டு ‘பைசன்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை அளித்தார்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் அவரிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
மேலும், கார்த்திகாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஊக்கத்தொகையும் வீடும் வழங்க வேண்டும் என மன்சூர் அலிகான் வலியுறுத்தினார்.
அதோடு, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 பவுன் தங்கம் பரிசாக வழங்குவதாகவும் அறிவித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, ” 1936ல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்கில் மட்டும் கண்காட்சி போட்டியாக கபடி சேர்க்கப்பட்டது. மற்றடி ஒலிம்பிக் போட்டியில் கபடி கிடையாது. பிறகு எப்படி மன்சூர் அலிகான் தெரிவித்தார்” என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து அவரிடமே கேட்கலாம் என tamilankural.com இதழ் சார்பாக, மன்சூர் அலிகானை தொடர்பு கொண்டோம்.
அவர், “நீண்ட காலமாகவே ஒலிம்பிக்கில் கபடியை சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கிறது. வரும் 2036ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்படும் என்றும ஒரு தகவல் உள்ளது. இதன் அடிப்படையில், கார்த்திகாவும் அந்த வருட ஒலிம்பிக் போட்டியில் வெல்வதுதான் லட்சியம் என்றார். அதை மனதில் வைத்தே நான் கூறினேன். ஏதோ நான் ஏமாற்ற அறிவிப்பு கொடுத்தது போல கேட்கிறீர்களே4
ஆசிய போட்டியில் கபடி இருக்கிறது அல்லவா… அதில் கார்த்திகா வென்றாலும் அவரது திருமணத்துக்கு நூறு பவுன் நகை பரிசளிப்பேன்.
எனக்கு இரண்டு மகள்கள் இருந்தாலும், கார்த்திகாவும் என் மகள்தான். அவருக்கு 100 பவுன் அளிப்பேன் என்பது உறுதி. அதற்கான வாய்ப்பை ஆண்டவன் வழங்குவான்” என்றார்.
மேலும், “பல நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது. நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டு. இதை ஏன் ஒலிம்பிக்கில் சேர்க்கவில்லை… அதற்கான முயற்சியை ஒன்றிய அரசு முழு மூச்சாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பேன்” என்று நம்மிடம் தெரிவித்தார்.
– டி.வி.சோமு

