விஜய நடிகரா மட்டும் பாருங்க!: ரசிகர்களுக்கு லோகேஷ் கூறும் நல்ல செய்தி!

விஜய நடிகரா மட்டும் பாருங்க!: ரசிகர்களுக்கு லோகேஷ் கூறும் நல்ல செய்தி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக  நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில்  விஜய் பேசும், (‘தே.ப.’) என்ற தகாத வார்த்தைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் கேட்டார். நான்தான் கதைக்கு தேவை என அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன். இதற்கு முற்றிலும் நானே பொறுப்பு ஏற்கிறேன்.

ட்ரெய்லரில் அந்த இடத்தில் தேவைப்பட்டதால் வைத்தேன். திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும்” என்றார்.

இந்த விளக்கமே போதுமானதுதான்.  அதற்குப் பிறகு அவர் கூறியதுதான் கவனிக்க வேண்டியவை.

“குறிப்பிட்ட அந்த வார்த்தையை  விஜய் பேசியதாக நினைக்காதீர்கள். அது தவறு.  லியோ படத்தில் வரும் பார்த்திபன் எனும்  கதாபாத்திரம்தான் அந்த வார்த்தையை பேசுகிறது” என்று கூறி இருக்கிறார்.

அதாவது, “படத்தில் விஜயை விஜயாக பார்க்காதீர்கள். அந்தந்த கதாபாத்திரமாக பாருங்கள்” என்று அர்த்தம்.

திரைப்படங்களில் விஜய் நடிக்கும் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டுதான் நிஜத்தில் அவரை ‘தலைவராக’ ஏற்று, ‘முதலமைச்சர்’ வரை கற்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள், அவரது ரசிகர்கள்.

அதனால்தான் படங்களில் அவர் பேசும் வசனங்கள், வாயசைக்கும் பாடல்களை எல்லாம் அவரே பேசுவதாக நினைக்கிறார்கள். அதற்கேற்பவே க்கு வைத்து அவரும் பேசுகிறார், பாடல்களுக்கு வாயசைக்கிறார்.  திரைப்படத்தையம், தற்போதைய அரசியல் சூழலையும் மனதில் வைத்து, தனது திரை நிகழ்ச்சிகளில் கலந்துகட்டி அடிக்கிறார். இவற்றையெல்லாம் வைத்துத்தான் அவரை அரசியல் தலைவராக பார்க்கிறார்கள் அப்பாவி ரசிகர்கள்.

இந்த நிலையில் லோகேசின் வார்த்தைகள்,, “விஜயை அந்தந்த படத்தில் வரும் காதாபாத்திரமாகவே பாருங்கள். அவர் ஒரு பிம்பம். நிஜமல்ல” என்று அர்த்தமாகிறது.

“நடிகர நடிகரா பாருங்க” என திரைப்பட இயக்குநர் ஒருவரே சொல்லி இருக்கிறார். இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல.. விஜய் ரசிகர்களுக்கும் பொருந்தும்.

பிம்பங்களை நிஜமென நம்பும் – விஜய் உள்ளிட்ட நடிகர்களின் –  அப்பாவி இளைஞர்கள் அனைவருக்குமான  செய்தி இது.

உணர்வாகளா?

– டி.வி.சோமு