மூத்த பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி காலமானார்!
தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும், 85 ஆண்டுகாலம் தமிழ்த் திரைப்படத் துறைக்குச் சேவையாற்றியவருமான திரு. பொம்மை சாரதி (வயது 93) காலமானர்.
பெங்களூருவில் உள்ள தீபஸ்ரீ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 18.11.2026 அன்று அதிகாலை 01.25 மணியளவில் காலமானார். வயது மூப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இயற்கை எய்தினார்.
தமிழ்த் திரைப்படப் பத்திரிகைத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய திரு. பொம்மை சாரதி, ஆரம்பக் காலத்தில் ‘பேசும்படம்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, டால்டன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான ‘பொம்மை’ மற்றும் ‘மங்கை’ இதழ்களின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டார். மேலும், முரசொலி குழுமத்தின் ‘குங்குமம்’, ‘சுமங்கலி’ ஆகிய இதழ்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அச்சு ஊடகத்தைத் தாண்டி, பூமாலை வீடியோ இதழிலும் அதன், கிரியேட்டிவ் கன்சல்டன்ட்டாக சிறப்பாக பணியாற்றினார். இந்த விசூவல் இதழ்தான் பின்னாட்களில் சன் டிவியாக மலர்ந்தது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினரில் மகள்களாக லட்சுமி மற்றும் லாவண்யா ஆகியோரும், மருமகன்களாக சங்கர் மற்றும் அருண் பரமேஸ்வரன் ஆகியோரும் உள்ளனர். மேலும், அனன்யா அருண், ஸ்ருதி வி. சங்கர், சோனா வி. சங்கர் ஆகிய பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
அவரது மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறுதிச் சடங்குகள் மற்றும் தகவல தொடர்புகளுக்கு லாவண்யா (+91 9900856350) என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

