டீ-ஏஜில் இருப்பவர்கள் ஃபேஷியல் செய்யலாமா?
பெண் குழந்தைகள் என்றாலே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கொஞ்சம் அக்கரை கூடுதலாகத்தான் இருக்கும். 13 முதல் 19 வயது வரையிலான டீ-ஏஜ் பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உடல் ரீதியாகவும், குறிப்பாக முகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.
இந்த மாற்றங்கள் இயற்கையானவை என்றாலும், சில சமயம் சருமத்தில் கவலை தரும் சில விளைவுகளை உண்டாக்கலாம். முகப்பருக்கள், அதிகப்படியான எண்ணெய் பசை, மற்றும் முகத்தில் தேவையில்லாத முடி போன்ற பிரச்சனைகளுக்கு டீ-ஏஜ் பெண் குழந்தைகள் ஃபேஷியல் செய்து கொள்ளலாமா? இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து விரிவாகக் கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் எஸ். சுமதி.
டீ-ஏஜ் முக அழகு மற்றும் சரும மாற்றங்கள் என்ன?
இந்தப் பருவத்தில் சுரக்கும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன்கள் செபாசியஸ் சுரப்பிகளைத் தூண்டி அதிகப்படியான எண்ணெய்யைச் சுரக்கச் செய்கின்றன. இது துவாரங்களை அடைத்து முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை உருவாக்குகிறது.
அதிகப்படியான எண்ணெய் பசை (Oily Skin): நெற்றி, மூக்கு மற்றும் சின் பகுதி (T-Zone) அதிகமாக எண்ணெய் வழியும் தன்மையைப் பெறும்.
சரும நிறமாற்றம் மற்றும் மந்தமான தோற்றம்: ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வெயில் படுவதால் முகம் சில சமயங்களில் சோர்வாகவும், நிறம் மாறியும் காணப்படும்.
உடலியல் வளர்ச்சி:தாடைகள் உறுதியடைவது, முக அமைப்பு முழுமையடைவது போன்ற இயல்பான வளர்ச்சி மாற்றங்களும் இக்காலத்தில் தான் நடக்கும்.
ஆகவே, இந்தப் பருவத்தில்தான் சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தி பராமரிப்பு செய்ய வேண்டும். டீன்-ஏஜ் (13–19 வயது) இருப்பவர்கள் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஆனால், பெரியவர்கள் பயன்படுத்தும் கெமிக்கல் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் (Anti-aging) ஃபேஷியல்களைத் தவிர்த்து, இளம் சருமத்திற்கு ஏற்ற மென்மையான (Gentle) ஃபேஷியல்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அழகுக்கலை நிபுணர் எஸ்.சுமதி
டீன்-ஏஜ் பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய ஃபேஷியல் என்ன?
சருமத்தைப் பராமரிக்க மசாஜ் மற்றும் கிளீன்-அப் செய்வது மிகவும் நல்லது. ஆயிலி ஸ்கின் (Oily skin) உள்ளவர்களுக்கு மூக்கின் பக்கவாட்டில் பிம்பிள்ஸ் வரக்கூடும். ட்ரை ஸ்கின் (Dry skin) உள்ளவர்களுக்குத் தோல் மிகவும் வறண்டு காணப்படும்.
பெரியவர்களுக்குக் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பேக்குகளை இவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. சின்ன டீ-ஏஜில் இருப்பவர்களுக்கு தக்காளி ஜூஸ் அல்லது பப்பாளி ஜூஸுடன் சர்க்கரை சேர்த்து இயற்கையான முறையில் கிளன்சிங் செய்வோம்.
ஸ்க்ரப் போட்ட பிறகு 3 முதல் 4 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்துவிட்டுத் துடைக்க வேண்டும்.
அதன்பிறகு ஸ்டீம் (Steam) கொடுத்து, முகத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் (Black heads) மற்றும் ஒயிட் ஹெட்ஸ் போன்றவற்றைச் சுத்தமாக அகற்ற வேண்டும்.
ஸ்டீம் கொடுத்த பிறகு ஐஸ் கியூப் (Ice cube) கொண்டு ஒத்தடம் கொடுத்தால் திறந்திருக்கும் துவாரங்கள் (Pores) மீண்டும் மூடிக்கொள்ளும்.
ஹெர்பல் பேக்குகளுக்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன?
வெள்ளரிக்காய், பப்பாளி போன்றவற்றை அவரவர் சருமத்திற்கேற்றவாறு பயன்படுத்தலாம். சிலருக்கு ட்ரை ஃப்ரூட்ஸ் (Dry fruits) வகைகளை அரைத்துப் பேஸ்ட் போலத் தடவலாம். ரோஸ் வாட்டர் நனைத்த துணியை முகத்தின் மீது வைத்து, அதன் மேல் இந்தப் பேக்கைப் போட்டு 15 நிமிடங்கள் கழித்து எடுத்தால் முகம் ஃப்ரெஷ்ஷாகவும் பிரைட்டாகவும் இருக்கும். இதனால் எந்தவிதப் பக்க விளைவுகளும் ஏற்படாது.
முகத்தில் பிம்பிள்ஸ் இருக்கும்போது மேக்கப் போட்டால் என்ன பிரச்சனை ஏற்படும்?
டீ-ஏஜ் குழந்தைகளுக்கு முகத்தில் பிம்பிள்ஸ் இருக்கும்போது அப்படியே மேக்கப் போட்டால், அது முகத்தில் ஒத்தையாகவும் (Patchy), எண்ணெய் வழிவது போலவும், சீரற்ற நிலையிலும் தோன்றும். இதற்காகவே இந்த ஹெர்பல் கிளீன்-அப் முறையைப் பரிந்துரைக்கிறோம். இதைச் செய்த பிறகு பார்த்தால் முகம் பிரகாசிக்கும்.

டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு உதட்டுக்கு மேல் உள்ள முடிகளை எப்படி அகற்றுவது?
இது இயல்பானதுதான். 10-ஆம் வகுப்பு படிக்கும் சில பிள்ளைகளுக்கு உதட்டுக்கு மேல் (Upper lip) முடிகள் இருக்கும். ரொம்ப மெலிதாக இருப்பவர்களிடம், சிறு வயதிலேயே த்ரெட்டிங் அல்லது வேக்ஸிங் செய்தால், அந்த முடி வளரும்போது இன்னும் திக்காக வளர ஆரம்பிக்கும். நாளடைவில் அது குறைய நீண்ட காலம் எடுக்கும். எனவே, வேக்ஸிங் செய்வதைத் தவிர்த்துவிட்டு லேசர் (Laser) முறையைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு லேசர் முறை பாதுகாப்பானதா?
புருவத்தில் கண் நரம்புகளில் லேசர் செய்யக்கூடாது. ஆனால் மற்ற பகுதிகளில் தேவையற்ற ஹேர் ரிமூவலுக்கு லேசர் முறையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் எஸ். சுமதி.

