“பூமிகா என்றதும் என் வீட்டில் கேட்ட கேள்வி…”: ஜெயம் ரவி ஓப்பன் டாக்!

“பூமிகா என்றதும் என் வீட்டில் கேட்ட கேள்வி…”: ஜெயம் ரவி ஓப்பன் டாக்!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ் . பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். அக்கா-தம்பி சகோதர பாசத்தை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ”பிரதர் திரைப்படம் நல்லதொரு டீசன்டான மூவி.‌ லீனியர் நரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் பிரதர் உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர். இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம்.

இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் பூமிகாவின் பிறந்தநாள் வந்தது, அதற்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தை நடித்த நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது. கடுமையாக உழைப்பில் உருவான திரைப்படம் இது.

சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாமை சிறுவயதில் இருந்தே தெரியும். பேராண்மை படத்தில் மரத்தின் மீது ஓடும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்க தயங்கிய போது.. அவர் அவர் அந்த மரத்தின் மீது ஓடி காண்பித்து நம்பிக்கையை உண்டாக்கினார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

கலை இயக்குநர் கிஷோர் எந்த ஒரு சிக்கலான தருணத்தையும் எளிதாக கையாளக்கூடிய திறமை மிக்கவர்.

என் அப்பா எடிட்டர் மோகன் நிறைய ஃபேமிலி டிராமா ஜானரிலான படங்களை எடிட் செய்திருக்கிறார். அப்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு கடினம் என எனக்குத் தெரியும். அதனால் இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு ஒரு திறமையான எடிட்டர் தேவை. இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு பயிற்சி வேண்டும் அனுபவம் வேண்டும். அது எல்லாம் இப்படத்தை தொகுத்த ஆசிஷுக்கு இருக்கிறது. அவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு.

நட்டி சார் ஒரு யூனிக்கான ஆக்டர். இவரை புரிந்து கொள்ளவே முடியாது ஹீரோவா..? வில்லனா ..? கேரக்டர் ஆர்டிஸ்டா..? இல்ல காமெடி பண்ண போறாரா..? என புரிந்து கொள்ள முடியாது . ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் ஒரு அவருடைய தனித்துவமான நடிப்பு திறமை இருக்கும். அவருடைய ஒளிப்பதிவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது அவருடன் இணைந்து பணியாற்றும் போது தான் தெரிய வருகிறது.

பூமிகா- அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் . அவரை திரையில் எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத ஒரு முகம். என்னுடைய குடும்பத்தினருக்கு அவரை மிகவும் பிடிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய ரசிகர்கள். இந்தப் படத்தில் பூமிகாவிற்கு தம்பியாக நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அனைவரும் ‘பூமிகா உனக்கு அக்காவா’ என்று கேட்டனர்.   இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். அவருடைய நடிப்பு திறமை இப்படம் வெளியான பிறகு பேசப்படும்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வி டி வி கணேஷ் எப்போதும் ஜாலியாக இருப்பார். சில நேரத்தில்.. என்னிடத்தில் சில கோணங்களை சுட்டிக்காட்டி இதில் இப்படி நடித்துப் பார் என ஆலோசனை வழங்குவார். அது ஒரு புது விஷயமாக இருக்கும். அதனால் இந்த படத்தில் சில புதிய விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன்.. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹாரிஸ் ஜெயராஜ் என்னுடைய படங்களுக்கு ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளர். ‘எங்கேயும் காதல் ‘ ‘தாம் தூம்’ ஆகிய படங்களில் எல்லா பாடல்களையும் ஆல்பமாக ஹிட் கொடுத்தவர்.‌ அதேபோல் இந்தப் படத்தையும் ஹிட்டாக்கிருக்கிறார்.‌

என்னுடைய ரசிகர்கள் நான் நடனம் ஆட வில்லை என வருத்தப்பட்டார்கள். மேலும்‌ நான் ஏ சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன் என்றும் வருத்தப்பட்டார்கள். அவர்களுக்காகவும் இந்த படத்தில் நடனமாடி இருக்கிறேன். யூ சான்றிதழ் பெற்ற படம். இது. எதிர்காலத்தில் டான்ஸ் இருக்கிற படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மக்கா மிஷி’ பாடல் ஹிட் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த படத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஒரு எமோஷனலான பாட்டு இருக்கிறது. இந்தப் பாட்டு .. படம் வெளியான பிறகு ஹிட் ஆகும்.

இயக்குநர் ராஜேஷ் அவர்களுடைய திறமைக்கு அவர் இன்னும் கூடுதல் உயரத்தை அடைய வேண்டும்.‌ அவர் எமோஷனை அழகாக சொல்வார்.‌ அவர் எஸ் எம் எஸ் படத்தில் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய திரைக்கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இரண்டொரு காட்சிகள் நடிக்கும் நடிகர்களுக்கு கூட நல்லதொரு வாய்ப்பை வழங்கி இருப்பார்.

இந்தப் படத்தில் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஹீரோயின் பிரியங்கா அழகான க்யூட்டான பெண்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு காட்சியில் இருக்கிறார் என்றாலே அனைவரது கவனத்தையும் கவர்ந்து விடுவார். டயலாக் சொல்லும்போதும் சிறப்பாக பேசுவார்.

இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக் கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்,” என்றார்.

Related Posts