திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரனுக்கு விருது! கண்டுகொள்ளாத திரையுலகம்!

திரைப்பட வரலாற்றாளர் தியோடர் பாஸ்கரனுக்கு, Film heritage foundation என்கிற அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
Film heritage foundation என்கிறஅமைப்பின் நிறுவனர் சிவேந்திர் சிங் துங்காபுர். அரச குடும்பத்தை சார்ந்த இவர், (உலக அளவில் மார்ட்டின் ஸ்கார்சசி போல) திரைப்படங்களை ஆவணப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு உள்ளார். இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கும் பல்வேறு திரை ஆவணங்கள், திரைப்படங்களை அறிவியல் முறையில் மீட்டெடுக்க தொடர்ச்சியாக பயிற்சிப்பட்டறைகளை இந்த அமைப்பினர் நடத்தி வருகிறார்கள்.
அத்தகைய உயர்ந்த அமைப்பு, தியோடர் பாஸ்கரனின் திரை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி உள்ளது.
திரைத்துறை பற்றிய பாஸ்கரனின் முதல் கட்டுரை 1972ல் வெளியானது. வங்காள மொழி இயக்குனர் சித்தானந்த தாஸ்குப்தாவின் டான்ஸ் ஆஃப் சிவா என்ற ஆவணப்படத்தைப் பற்றிய அந்த கட்டுரை, ”சிவ தாண்டவம்” என்ற தலைப்பில், கசடதபற இதழில் வெளியானது.
பின் பாஸ்கரனை, அவரது நண்பரும் அமெரிக்க வரலாற்று ஆய்வாளருமான சார்லஸ் ஏ. ரயர்சன் அவரைத் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டினார். பாஸ்கரன், தமிழ்நாடு வரலாற்றுக் கழக ஒத்துழைப்புடன் இரண்டாண்டுகள் உழைத்து, 1974ல் தன் திரைத்துறைஆய்வைத் தொடங்கினார்.
மேலும் திரைப்படங்களைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள 1975ல் திரைப்பட பகுப்பாய்வு வகுப்பொன்றில் சேர்ந்தார். அங்கு அவருக்குப் பாடம் கற்பித்த பேராசிரியர் பி.கே. நாயர் அவரை புனேயிலுள்ள தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில் நியமித்தார். இரண்டாண்டுகள் அங்கு பல பழைய திரைப்படங்களைப் பார்த்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1976ல் கல்கத்தா திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.
இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி தான் எழுதிய கட்டுரையை 1977ம் ஆண்டு அலிகாரில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இக்கட்டுரையும் வேறு சிலவும் சேர்ந்து 1981ல் தி மெசேஜ் பியரர்ஸ் (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன.
சென்னை மாகாணத்தில் பிரித்தானிய ஆட்சிக்குப் பெரிதாக எதிர்ப்பு இல்லை என்று அப்போது பரவலாக நிலவிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் இப்புத்தகம் அமைந்திருந்தது. அதுவரை பயன்படுத்தப் பட்டிராத பல தரவுகளையும், ஆதாரங்களையும் பயன்படுத்தி தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரித்த இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.
பாஸ்கரனின் இரண்டாவது நூல், “பாம்பின் கண்” என்று பொருள்படும், தி ஐ ஆஃப் தி செர்பன்ட் (The Eye of the Serpent) 1996ல் வெளியானது. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுக நூலான இதற்கு சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை விருது வழங்கப்பட்டது.
இவை தவிர ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல நூல்களை பாஸ்கரன் எழுதியுள்ளார். அவரது கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுமக்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
திரைப்படங்கள் பற்றி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் விரிவுரை ஆற்றியுள்ளார்.
பெங்களூரிலுள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடூயுட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (மேற்கல்விக்கான தேசிய கல்விக்கழகம்) என்ற ஆய்வுக்கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
2000ம் ஆண்டு கம்பன் கழகத்தின் கி.வா.ஜ பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் (ஆன் ஆர்பர்) தமிழ்த் திரைப்படங்கள் பற்றி கற்பித்தார். 2003 ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். 1998-2001 காலகட்டத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனராகப் பணியாற்றினார். தற்பொழுது அந்நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார் இப்படி பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
திரைத்துறையை ஆவணப்படுத்துவதில் சிறந்த ஆளுமையாக விளங்கும் தியோடர் பாஸ்கரனுக்கு விருது கிடைத்ததை, நட்சத்திரங்கள் யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை… தமிழ்த் திரையலகினர் கண்டுகொள்ளவில்லை என்பது ஆச்சரியமான வருத்தம்.
பாஸ்கரன் 2010ம் ஆண்டு வெளிவந்த அவள் பெயர் தமிழரசி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
– டி.வி.சோமு