இறை 75 :”திருமந்திரத்தில் முப்பொருள்” : நூல் வெளியீடு

இறை 75  :”திருமந்திரத்தில் முப்பொருள்” : நூல் வெளியீடு

தஞ்சை பா.இறையரசன் அவர்களின் பவள விழாவும்  ஏர் எழுபது என்னும் அரிய நூல் அறிமுகமும், “திருமந்திர முப்பொருள்”நூல் வெளியீடும்  சென்னை முகப்பேர் மேற்கு பி.ஆர். அரங்கில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் இனிதே நடைபெற்றது.திருப்பனந்தாள் கல்லூரியில் முதல்வராக இருந்த முனைவர் சு.இராமனின் “திருமந்திரத்தில் முப்பொருள்”  நூலைத் திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் வெளியிட
பேராசிரியர் இராமன் பிள்ளைகள் திரு.மஞ்சுநாதன்,  திருமதி. தேவி அசோக் பேரப்பிள்ளைகள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

திரு.சு.ப.வீ.வாழ்த்திப்பேசும்போது,  தமக்கும் தஞ்சை இறையரசன்  அவர்களுக்கும் திரு. இராமன் அவர்களுக்கும் இடையிலான நட்பின் சிறப்புகளைக் குறிப்பிட்டுப் பேசினார். ஏற்புரை வழங்கிய முனைவர் திரு. இராமன் மகன் மஞ்சு நாதன் தந்தை ஆய்வு நூல் நூலாய் வருவதற்குக் காரணமாயிருந்த முனைவர் இறையரனுக்குத் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நாள் செம்மொழி நிறுவன உதவித் தலைவர் முனைவர் இ.சுந்தர மூர்த்தி தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில் தெ.பொ.மீ. தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஆகியோருடைய ஆசிரியர் மாணவர் உறவு நிலை பற்றிக் கூறி அத்தகு உறவு நிலையோடு தஞ்சை இறையரசன் மற்றும் அவர் தம் மாணவர் உறவு நிலை இருப்பதாகக் கூறினார்.

வலைத் தமிழ் நிறுவனத் தலைவர் திரு பார்த்தசாரதி தமிழ் எழுச்சிப் பேரவையின் தமிழ்ப் பணி குறித்துப் பேசியதோடு இறையரசன் அவர்களைப் பாராட்டியும் பேசினார்.
ஏர் எழுபது நூல் அறிமுகம் நடைபெற்றது .

தமிழ் எழுச்சிப் பேரவையின் புரவலர் பொன்னியின் செல்வன் படக் கதை (காமிக்ஸ்) நிறுவனத் தலைவர் திரு.சரவண ராசா பொன்னுசாமி விழாவின் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்
தமிழ் எழுச்சிப் பேரவையின் தலைவர் வரலாற்று அறிஞர் தஞ்சை கோ.கண்ணன்,
வருமானவரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் திரு.செந்தாமரைக் கண்ணன் , கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குநர் திரு. வ.செயபால் இஸ்ரோ விஞ்ஞானி பாண்டுரங்கன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இறையரசனாரின் முன்னாள் மாணவர்கள் இந்நாள் ஆசிரியர்கள்  திருமதி .ஆனைவாரி செயந்தி ஆனந்தன், இந்திராணி, தஞ்சை கல்லூரிப் பேராசிரியர் முனைவர் தமிழடியான், காவல்துறை முன்னாள் அதிகாரி பாலசுப் பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மொழி பெயர்ப்பு விருது பெற்ற கானவன், மதிவாணன், செல்வி நிலா, மருத்துவத் தொண்டில் இந்திய விருது பெற்ற மருத்துவர் ரேணுகா இராமகிருட்டிணன்,  நன்னன்குடி திருமதி வேண்மாள், மணிவாசகர் பதிப்பக குருமூர்த்தி, தினமணி முன்னாள் உதவி ஆசிரியர் மஞ்சுளா, மூத்த இதழாளர் இராசதுரை, இயற்கை ஆர்வலர் பத்திரிகையாளர் மரிய பெல்சின், பேராசிரியர் பாரதிதாசன் உள்ளிட்ட
பல்வேறு துறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் அவர் தம் குடும்பத்தினர்.
பத்திரிகை, ஊடக நண்பர்கள் எனத் திரளானவர்கள் பங்கேற்று வாழ்த்தியும் வாழ்த்து பெற்றும் சென்றனர்.

முனைவர் தஞ்சை இறையரசனார் மகன்  திரு அறிவுடை செந்தில் தம் ஏற்புரையில் தம் தந்தையின் முதல் நூல் “குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் ” என்றும் தாய் மொழித் தமிழில் பேசுங்கள் என்றும் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள் என்றும் பேசினார்.

 செய்தி: புலவர் க. பொன்னுசாமி.

Related Posts