வட்டி: ரஜினிக்குத் தெரியாத ஆன்மிக ரகசியம்!

ன்மிக அரசியல் செய்யப்போவதாக கூறும் நடிகர் ரஜினிகாந்த், வட்டிக்கு விட்டு பணம் வசூலித்ததாக  தெரிவித்துள்ளார்.

வட்டி வாங்குவது குறித்து மதங்கள் கூறும் ஆன்மிகக் கருத்துக்கள் என்னவென்று பார்க்கலாமா?

இந்து சமயபுராணங்களில் ஒன்றான, கருட புராணம், விஷ்ணுவும் கருடனும் பேசுவது போன்று அமைந்துள்ளது. இதில்,  மறு பிறவி பற்றி கூறுவதோடு, இப்பிறவியில் எப்படி வாழ வேண்டும் என்றும்,  அப்படி வாழாதவர்களுக்கு கிடைக்கும் தண்டனை குறித்தும் கூறுகிறது. 

“பிறரை ஏளனம் செய்தவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்:  விஷம் வைத்து பிறரை கொல்பவர்கள் தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்புறுவர்: பெண்ணை காம நோக்குடன் பார்ப்பவர் கண் நோயால் அவதியுறுவர்.” என்றெல்லாம் சொல்லும் கருடபுராணத்தில், வட்டி குறித்து கூறப்பட்டிருப்பது என்ன தெரியுமா?

”அதிக வட்டி வசூலிப்பவர், சுயரோகத்தால் துன்பப்படுவர்”  என்கிறது.

கிறிஸ்தவர்களின் புனித நூலான, பைபிளும் வட்டி குறித்து கூறுகிறது.

அதில்,

ஏசாயா 24 : “இந்த நாட்டிலுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் துடைத்துவிடுவார். அந்த நேரத்தில், பொது ஜனங்களும், ஆசாரியர்களும் சமமாக இருப்பார்கள். அடிமைகளும், எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். பெண் அடிமைகளும் அவர்களது பெண் எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். வட்டி வாங்கினவனும், வட்டி கொடுத்தவனும் சமமாக இருப்பார்கள்..” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வட்டிக்கு விட்டவரும், வாங்கியவரும், ஆண்டான் – அடிமையாக இருந்ததையே குறிப்பிடுகிறது.

அதே நேரம், “இந்து மற்றும் கிறித்துவ மதங்கள் அதிக வட்டி வாங்குவதைத்தான் தவறு என்கின்றன,” என்போரும் உண்டு.

ஆனால் இஸ்லாமிய மதம், வட்டிக்கு விடுவதையே பாவச்செயல் என்கிறது.

‘வட்டியை உண்போர் சைத்தானால் தீண்டப்பட்டவர் போல பைத்தியமாகவே எழுவர். வட்டி வாங்குகிறவன் வீட்டு நிழலில் நிற்பதே குற்றம். வட்டி வாங்குவது விபசாரம் செய்வதை விடக் கொடியது,” என்கிறது இஸ்லாமிய மதம்.

Related Posts