இளையராஜாவுக்கு குட்டு வைத்த மைக் மோகன்!

இளையராஜாவுக்கு குட்டு வைத்த மைக் மோகன்!

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்க, விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், வெள்ளி விழா மோகன் நாயகனாக நடிக்கும் படம் ஹரா.

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

டீசர் வெளியீட்டு விழா & டீசர்:

விழாவில் நடிகர் மோகன் பேசியது கவனத்தை ஈர்த்து உள்ளது. அதாவது, தற்போது எக்கோ ஆடியோ நிறுவனத்துக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாடலின் உரிமை தயாரிப்பாளருக்கா, இசை அமைப்பாளருக்கா என வழக்கு நடந்து வருகிறது.

“பாடலுக்கு இசை அமைக்க தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்ற பிறகு இசை அமைப்பாளருக்கு பாடலில் எந்த உரிமையும் இல்லை” என்பது எக்கோ நிறுவனத்தின் வாதம்.

இளையராஜாவோ,  “இசையமைப்பாளரான நானே மிகப் பெரியவன். எனக்கே உரிமை” என வாதாடி வருகிறார்.

இந்த நிலையில்தான் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. மேடையில் பேசிய பலரும், “இளையராஜாவும் மோகனும் எத்தனையோ இயக்குநர்களை- தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளனர்” என பேசினர்.

இதற்கு பதில் அளிப்பது போல பேசிய நடிகர் மோகன், “நான் எப்போதும் திரைத்துறையில் இருவருக்கு மட்டுமே நன்றி கூறுவேன். அதாவது இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும். கப்பலுக்கு கேப்டன் போல திரைப்படத்தை இயக்கும் இயக்குநர்தான் முதன்மையானவர். அடுத்து தயாரிப்பாளருக்கு நன்றி கூறுவேன். அவர்தான் கப்பல்.

அதன் பிறகுதான் நடிகர்கள் உள்ளிட்ட மற்றவர்கள்.

இளையராஜா இசை ஞானி என்பதில் சந்தேகம் இல்லை. அவர் 1500 பாடல்களுக்கு இசை அமைத்து இருப்பார். ஆனால் அவற்றில் வெற்றி பெறும் படங்களின் பாடல்கள்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

அதாவது பாடலின் இசைக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பை பாடலின் காட்சிகள் ஏற்படுத்துகின்றன. அதைச் செய்பவர்கள் இயக்குநர்களே.

என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியது தான் காரணம்” என்றார் மோகன்.மேலும் அவர் பேசும்போது, “எனக்கென  மார்க்கெட்  வந்த பிறகு, என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன்.  இது தெய்வம் எனக்கு அளித்த பிச்சை.

புதுமுக இயக்கநர்களுக்கு  வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்தேன்.

அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம்”என்று பேசினார் மோகன்.அவர் தன்னடக்கத்துடன் பேசினாலும், இசையை வைத்து மட்டும் ஒரு படம் ஓடிவிடாது.. இயக்குநர்களின் திறமையே காரணம் என்பதை பட்டவர்த்தனமாக தெரிவித்து விட்டார்.

அந்த வகையில் நிஜத்திலும் மோகன் ஹீரோதான்.

 

Related Posts