’ஐடென்டிட்டி’ : திரைப்பட விமர்சனம்
பெண்களுக்குத் தெரியாமல் அவர்கள் ஆடை மாற்றும் காட்சியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பவரை, அவரது இடத்திற்கே சென்று எரித்து கொலை செய்கிறார் மர்ம நபர் ஒருவர். அந்த கொலையாளியை நேரில் பார்த்துவிடுகிறார் திரிஷா. கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி வினய். அவர், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து அவர்களை அப்படியே வரையும் திறன் படைத்த டோவினோ தாமஸின் உதவியை நாடுகிறார். அதன்படி, திரிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து டோவினோ தாமஸ் வரைகிறார்.
அப்போது அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது.
அதிலிருந்து படம் முடியும் வரை, திக் திக்தான்.
வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து கவனம் ஈர்க்கும் நாயகன் டோவினோ தாமஸ், ஹரன் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் அதீத திறன் படைத்தவராக, ஸ்டைலிஷான லுக்கில் சிறப்பாக நடித்திருக்கிறார். தனித்துவமான மேனரிசம் மூலம் ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் கதாபாத்திரத்தின் மீது திருப்பிவிடுகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார்.
காதல், டூயட் பாடல் உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத நாயகியாக திரிஷா. ஆனால் படத்துக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்து உள்ளார். கொலையை பார்த்த அதிர்ச்சி… கொலையாளியை நேரடியாக பார்த்தும் சொல்ல முடியாத நிலை… என அற்புத நடிப்பு.
ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் வினய், அடுத்தடுத்த காட்சிகளில் எடுக்கும் அவதாரங்கள் எதிர்பாராத அதிர்ச்சிகளை அளிக்கிறது. சிறப்பு!
அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், ஆர்ய, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜின் கேமரா கிரைம் திரில்லர் ஜானர் படத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, விமானத்தில் நடைபெறும் சண்டைக்காட்சி, கார் சேசிங் உள்ளிட்டவைகளை பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது பாராட்டுக்களைப் பெறுகிறது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு மற்றும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருப்பதோடு, பல இடங்களில் காட்சிகளுக்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறது.
கிரைம் திரில்லர் ஜானரில் தொடங்கும் கதை இரண்டாம் பாதியில் வேறு ஒரு ஜானரில் பல கிளைக்கதைகளோடும், பல்வேறு காதாபாத்திரங்களோடும் பயணித்தாலும், அனைத்தையும் நேர்த்தியாக தொகுத்து பார்வையாளர்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.
ஒரு கொலை, அதை செய்வதர் யார் என்பதை கதையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு, அதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சிகளையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும்படி வடிவமைத்திருக்கும் இயக்குநர்கள் அகில் பால் – அனஸ் கான், பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எதாவது ஒரு திருப்பத்தின் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்கள்.
கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ், கொலையாளியை பார்த்தவர், கொலை செய்தவர், இவர்களை தாண்டிய ஒரு குற்றவாளி என அனைவரையும் ஒரே இடத்தில் பயணிக்க வைத்ததோடு, ஒன்றாக பயணிக்க வைத்து அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் மூலம் பார்வையாளர்களை பதற்றமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும் இயக்குநர்கள், இரண்டாம் பாதியில் கிரைம் திரில்லர் ஜானரையும் தாண்டி, ஏர் மார்சல், இந்திய பாதுகாப்பு படை, விமான போக்குவரத்து முறை, சாட்சி பாதுகாப்பு திட்டம் மற்றும் அதற்கான ஒரு அதிகாரி, அதை வைத்து நடத்தப்படும் அடையாளம் தொடர்பான மோசடி, என பல புதிய விசயங்கள் மூலம் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்.
மொத்தத்தில், ’ஐடென்டிட்டி’ அசத்தலான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்.

