ஹார்டின்: ஒரு  காதல் பயணம்!

ஹார்டின்: ஒரு  காதல் பயணம்!

இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா கூட்டணியில் வெளிவந்துள்ள படம் ‘ஹார்டின்’.

இன்றைய இளைஞர்களின் காதல், பழைய காயங்கள்,  விபத்து,  பழைய நினைவுகள் அழிந்து போவது, முக்கோண காதல் என சுவாரஸ்யப் படுத்த முயன்று இருக்கிறார் இயக்குநர்.

ராஜஸ்தானில் ஹோட்டல் நடத்தும் சனந்த், அங்கு ஐடி பணியில் இருக்கும் இமயாவைக் காதலிக்கிறார். திருமணத்திற்காக ஊர் திரும்பும்போது ஏற்படும் விபத்தில், சனந்த்திற்கு சில கால நினைவுகள் மறைந்துவிடுகின்றன. தான் காதலித்த இமயா மற்றும் ராஜஸ்தான் நினைவுகள் அழிந்துபோக, பழைய கல்லூரி காதலி மடோனா செபாஸ்டியனைத் தேடி ஊட்டி செல்கிறார். இமயாவும் அவருடன் செல்ல, இறுதியில் சனந்த் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாதி ரொம்பவே நிதானமாக நகர்கிறது. காதல் காட்சிகளில் செயற்கைத்தனம் இல்லாமல், அந்த மென்மை ரசிக்கும்படி இருக்கிறது. ஜெய்ப்பூரின் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஆனால், கதாபாத்திரங்களின் வலியை அல்லது உணர்வுகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக காட்டியிருக்கலாம்.

இடைவேளைக்கு பிறகு படம் வழக்கமான  பாணிக்குத் தாவிவிடுகிறது. கதாநாயகிகளுக்கு இடையே ஏற்படும் சின்னச் சின்ன உரசல் காட்சிகளில் அந்த அளவுக்கு ‘பஞ்ச்’ இல்லை. பல இடங்களில் உணர்ச்சிகள் பார்வையாளர்களைக் கடந்து செல்லத் தவறுகின்றன.

நாயகன் சனந்த் தனது அமைதியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

நாயகி இமயா, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.

மடோனா செபாஸ்டியன் ஸ்டைலாக வந்து, சில உணர்ச்சிகரமான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

 ராஜேஷ் முருகேசனின்  பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு பலம்.  முகேஷின் ஒளிப்பதிவும் படத்தின் பிளஸ் பாயிண்ட்.

மொத்தத்தில், ‘ஹார்டின்’ ஒரு அழகான முயற்சி. காதலை மென்மையாகச் சொல்லியிருக்கிறார்கள், ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பும், ஆழமான காட்சிகளும் இருந்திருந்தால் கண்டிப்பாக மனதில் நின்றிருக்கும். காதல் படங்களை ரசிப்பவர்கள் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

Related Posts