கட்ஸ்: திரைப்பட விமர்சனம்

கட்ஸ்: திரைப்பட விமர்சனம்

நாயகன் பிறக்கும் நேரத்திலேயே அவரது தந்தை சில நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவர் வளரும் போது அவரது தாயும் கொலை செய்யப்படுகிறார்.  இப்படி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த நாயகன் எப்படியோ படித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார்.  மனைவி, ஒரு பெண் குழந்தை என வாழ்கிறார். அப்போது அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.  இதனால் மதுவுக்கு அடிமையாகிறார். இந்த நேரத்தில் தனது மனைவியை கொலை செய்யது யார் என்கிற உண்மையை அறிகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

நாயகனா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் மற்றும் அவரது தந்தை விவசாயி பெத்தனசாமி  என இரு வேடங்களில் நடித்து இருக்கிறார் ரங்கராஜ்.  அதுவும் நாயகன் வேடத்தில் இரண்டு கெட் அப்கள்.  அவரது துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும்.அநாதை பிள்ளைகள் மீது காட்டும் பாசம், மனைவியிடம் வெளிப்படுத்தும் நேசம், மனைவி இறந்தவுடன் கதறித் துடிப்பது என தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அளித்து இருக்கிறார் ரங்கராஜ். அதே போல பிளாஷ்பேக் காட்சியில் தந்தை வேடத்திலும் வித்தியாசம் காண்பித்து கவனத்தை ஈர்க்கிறார்.

பெரிய மீசை மிரட்டும் தோற்றத்தில்  அரிவாளோடு வந்து சண்டை போட்டு ரசிக்க வைக்கிறார். அதே போல கள்ளுக்கடையில் ஆட்டம் போட்டு ஈர்க்கிறார்.

இவரது தந்தை வேடத்துக்கு  ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ருதி நாராயணன்.  அசல் கிராமத்து பெண்மணியாக வந்து கவர்கிறார். அதே போல, மகன் வேடத்துக்கு  ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் நடிப்பு வழக்கம்போல் கவர்கிறது. ஆனால் ஓய்வு பெற்ற காவலர்போல இருக்கிறார்.  மற்ற கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் சாய் தீனா,  பிர்லா போஸ்,  ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

மனோஜின் ஒளிப்பதிவு, ஜோஸ் பிராங்கிளினின்  இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு பலம்.

ரஞ்சித்தின் படத்தொகுப்பு கச்சிதம்.

நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கி இருக்கிறார். வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும், அதில் காதல், விவசாயத்தின் முக்கியத்தும் என பல விசயங்களை கலந்து சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்.

 

 

Related Posts