‘ஆசிய ஆஸ்கார்’ விருது பெறுகிறார் நடிகர் குருசோமசுந்தரம்!

ஆசிய ஆஸ்கார் என வர்ணிக்கப்படும், ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் ” விருதைப் பெறுகிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.  

ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்த நடிகர் குரு சோமசுந்தரம், தொடர்ந்து  பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர்  உள்ளிட்ட படங்களில் நடிப்பில் முத்திரை பதித்தார். சமீபத்தில் வெளியான மாமனிதன் படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்.இந்நிலையில்,  2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ அவருக்கு அளிக்கப்பட உள்ளது.

சிங்கப்பூரை தலமையகமாகக் கொண்டு இயங்கும்  அமைப்பு கடந்த 2018 முதல் விருதுகளை வழங்கி வருகிறது. ஆசியாவைச் சேர்ந்த 16 நாடுகளில்  இருந்து சிறந்த திரைப்படங்கள், தொடர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. இதை ஆசியர் ஆஸ்கர் என்று பலரும் அழைக்கிறார்கள்.

இந்நிலையில்,  ‘மின்னல்முரளி’ படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக குரு சோமசுந்தரத்துக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கான விழா வரும் டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.

 

Related Posts