“எதற்கும் தயார்!”: கவர்ச்சி பபிதா அதிரடி!
நாயகன் படத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலுக்கு ஆடிய, பாக்யராஜின் சின்னவீடு படத்தில் நடித்த, பபிதாவை யாராலும் மறக்க முடியாது.
விஜய்யின் ‘ரசிகன்’, படத்தின் பாடலான ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி..’யில் பபிதாவின் டான்ஸ் பேசப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
“120 படங்கள் நடிச்சிட்டேன். பாக்யராஜுடன் ‘சின்ன வீடு’, விஜயகாந்துடன் ‘கூலிக்காரன்’, டி.ராஜேந்தருடன் ‘ஒரு தாயின் சபதம்’, கார்த்திக்குடன் ‘ நட்பு’, ’பூவே பூச்சூடுவா’ (இரண்டாம் நாயகி) என பல மொழிகளும் நடிச்சிருக்கேன்.
‘நாயகன்’ல நான் நடனமாடியெதெல்லாம் பெரும் பாக்கியமாக நினைக்கறேன். ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.என்னுடைய அப்பா ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்னாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது.சினிமா இப்ப நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கு. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலையெல்லாம் மாறிவிட்டது.
என் ரத்தத்தில் நடனம் என்பது ஊறியிடுச்சு. இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச் சொன்னாலும் நடனமாட ரெடியா இருக்கேன். வில்லியாக நடிக்கச்சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியமே தவிர கேரக்டர் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.” என்கிறார் பபிதா