“இறைவன் மிகப் பெரியவன்! எனக்கொன்னும் தெரியாது!”: அமீர் அறிக்கை
, சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு டில்லியில் கைது செய்தது. இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டவர் ஜாபர் சாதிக் என்பவர். அவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். போதைப் பொருள் விவகாரத்தை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையே, இயக்குநர் அமீரை வைத்து, இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் விவகராத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இது குறித்து தற்போது இயக்குநர் அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர குறிப்பிட்டு இருப்பதாவது..
“மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!
கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.
எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.
அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்.
“இறைவன் மிகப் பெரியவன்”
அன்புடன்,
அமீர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
