‘கோட்’: ‘காந்தி மது குடிக்கலாமா?’: ‘காந்திகள்’ என்ன சொல்கிறார்கள்!

விஜய் நடிக்கும், ‘கோட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில், ‘காந்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய், மது அருந்துவது போன்ற காட்சி வருகிறது.
படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், “காந்தி மது குடிப்பது போன்ற காட்சி இருக்கிறதே..” என, tamilankural.com சார்பாக கேட்டேன்.அதற்கு அவர், “மகாத்மா காந்தி என்றும் மகாத்மா தான். அவர் வேறு. இந்த கதாபாத்திரம் வேறு. என் நண்பன் பெயரும் காந்தி தான். அவன் என்னென்ன செய்கிறான் தெரியுமா… அதை வெளியில் சொல்ல முடியாது. அவ்வளவு கெட்டவன் அவன். அதற்கும் இதற்கும் முடிச்சு போடாதீர்கள்” என்றார் கொஞ்சம் கோபமாக.
“சரி.. வெங்கட்பிரபுவின் நண்பரான ‘காந்தி'(!) ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்குத் தெரிந்த – அதாவது அனைவருக்கும் தெரிந்த – காந்தி பெயரில் உள்ள பிரபலங்களிடம் – குறிப்பிட்ட காட்சி குறித்து கேட்போம்” என்று முடிவு செய்தேன். ஒவ்வொருவரிடமும் பேசினேன்.
அவர்கள் கருத்துக்கள் கீழே..டாக்டர் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். (ஓய்வு)
காந்தியின் மகன் ஹரிலாலே, அதீதமாக டிரிங்க்ஸ் அருந்தி, மரணத்தைத் தேடிக்கிட்டார். இந்த நிலையில சினிமாவுல ஒரு கேரக்டருக்கு காந்தி பெயர் வச்சது… அந்த கேரக்டர் டிரிங்ஸ் அடிக்கிறது.. இதெல்லாம் சாதாரண மேட்டர். காந்தி என்கிற பெயர் ஒருத்தரைத்தான் குறிக்கும்னு சொல்ல முடியாதே!
காந்தி கண்ணதாசன், கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன், கண்ணதாசன் பதிப்பக நிறுவனர்
“காந்தி அவர்களுக்கு உலகம் முழுதும் உயர்வானதொரு இமேஜ் இருக்கு. அவரோட சிலை, உலகின் பெரும்பாலான நாடுகள்ல உண்டு. தங்களது மகன், காந்தியைப் போல உத்தமனாக வாழ வேண்டும் என்றுதான் அந்த பெயரை பெற்றோர் வைக்கிறார்கள். அப்படியும் தனிப்பட்ட மனிதர்கள் ஒழுக்கத்தை மீறி நடப்பது சாதாரண விசயம்தான்.
ஆனால் மிகப்பெரிய ஊடகமான திரைத்துறையில் இப்படி காந்தி பெயரை தவறாக பயன்படுத்தலாாமா.. இயக்குநர் வெங்கட் பிரபுவின் செயலால் காந்திக்கு எந்த இழிவும் இல்லை. வெங்கட் பிரபுவுக்குத்தான் இழிவு.
ஒரே விசயம்.. வேறு ஒரு தலைவர் பெயரை, கதாபாத்திரத்துக்கு வைத்து மது அருந்தவது போல காண்பிக்கும் தைரியம் வெங்கட் பிரபுவுக்கு உண்டா?”பிரவீன் காந்தி, திரைப்பட இயக்குநர்
மகாத்மா காந்தி வெளிநாடு செல்லும்போது, அவரது பாட்டி மூன்று சத்தியங்கள் வாங்கிக்கொண்டார். அதில் ஒன்று, மது அருந்தக் கூடாது என்பது. அதனால் காந்தி மது அருந்தவில்லை.
எந்த ஒரு மனிதனின் பழக்க வழக்கங்களும் அவனே தீர்மானிப்பது அல்ல. சுற்றுச் சூழல்.. பெற்றோர்.. வாழ்க்கை முறை இப்படித்தான். காநதியின் வாழ்க்கை முறை அவரை மது அருந்தாதவராக வைத்து இருந்தது.
இப்போது எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. இன்று காந்தி இருந்தால்.. ஏன் கடவுளே வந்தாலும்.. டாஸ்மாக் மதுக்கடைகளை கடக்கும் போது மனம் தடுமாறத்தான் சய்யும்.
மீண்டும் சொல்கிறேன்.. ஒரு மனிதனின் குணாதிசயங்களை தீர்மானிப்பது பெற்றோரும் வளர்ப்பும்தான்சுதா காந்தி, வழக்கறிஞர்
காந்தி என்கிற பெயரில் (கதாபாத்திரத்தில்) நடித்துள்ள விஜய், ‘மது இனிமே அருந்தமாட்டேன்’ என்கிற காட்சியும் வருகிறது. தவிர, படம் வந்த பிறகுதான் காட்சியின் முழு அர்த்த்தை புரிந்துகொள்ள முடியும்.
என்னுடைய கருத்து என்னவென்றால், விஜய் உள்ளிட்ட மாஸ் நடிகர்களை பலரும் ஆராதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹீரோக்கள் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பது முறைதானா என்பதை சிந்திக்க வேண்டும். அதிலும் விஜய், அரசியலுக்கு வந்திருக்கிறார்.. கட்சி பெயரை அறிவித்து இருக்கிறார்.. இப்படிப்பட்ட நிலையில் இளைஞர்களை திசை திருப்பும்படி மதுக் காட்சிகளில் நடிக்கலாமா என்பதுதான் என் கேள்வி.
அவரது அரசியல் அறிவிப்புக்குப் பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தல் வந்தது.. ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி குறித்து.. ஆளும் பாஜக குறித்து எந்த விமர்சனமும் அவர்.. வைக்கவில்லை.. மோடிக்கு பயந்தவர்தான் விஜய்..
ஆகவே அவரது நடிப்பு – காட்சிகள் குறித்து எதையும் எதிர்பார்க்கலை.. கருத்து சொல்ற அளவுக்கும் இல்லை…
ராஜீவ்காந்தி, பத்திரிகையாளர்
“காந்தி கதாபாத்திரம் மது அருந்தலாமா என்பது வேறு விசயம். ஆனால் விஜய் மாதிரி பிரபல நடிகர் – அதுவும் கடைசி படத்துக்கு முந்தைய படத்திலும் – இப்படி மது அருந்தும் காட்சியில் நடிக்க வேண்டுமா என்பதே கேள்வி.
படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு. அவரது படங்களில் மது காட்சிகள் சஜகஜம்தான். ஆனால் கோட் படத்தின் காட்சிகளை, விஜயிடம் நிச்சயம் விவரித்து இருப்பார். குறிப்பிட்ட காட்சி எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாதவர் அல்ல விஜய். ஆகவே அவர் தவிர்த்து இருக்கணும். அதாவது சமூக அக்கறை இருந்திருந்தால் குறிப்பிட்ட காட்சி வேண்டாம் என மறுத்திருக்கணும்.
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.
காந்தியை முடிந்தஅளவுக்கு புறக்கணிக்க, ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது. “ஆங்கிலத்தில் வெளியான காந்தி வாழ்க்கை வரலாற்று படத்துக்குப் பிறகுதான் அவரை உலகுக்குத் தெரியும்” என மனதறிந்து பொய் சொன்னார், ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி.
பாஜக ஆளும் மாநிலத்தில் அரசு பள்ளியில், விடுதலை தினத்தன்று சாவர்க்கர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். ஆக மிக மோசமாக, காந்தியை – அவரது புகழை – மூடி மறைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது ஒன்றிய பாஜக அரசு.
இந்த நிலையில், காந்தியின் பெயரை இழிவு செய்யும் விதமாக, தனது படத்தில் விஜய் காட்சி வைத்திருக்கிறார் என்றால், அவர் பாஜகவின் பி.டீம்தான் என்கிற விமர்சனம் மேலும வலுப்பெறும்.
ஏற்கெனவே ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த, மக்கள் விரோத சி.ஏ.ஏ. சட்டம் குறித்த அறிக்கையில், அது ஏதோ மாநில அரசின் சட்டம் போல, “சிஏஏவை தமிழ்நாட்டில் அமல் படுத்தக்கூடாது” என்றார் விஜய்.
ஆகவேதான் சொல்கிறேன்.. பொதுவாகவே மது காட்சிகள் விஜயின் பெயரை கெடுக்கும்.. அதோடு குறிப்பிட்ட இந்த காட்சி, பாஜகவின் பி டீம் என்கிற விமர்சனத்தை வலுப்படுத்தும். இவற்றை விஜய் தவிர்ப்பது அவரது அரசியலுக்கு நல்லது.”தனது கட்சி பெயரில், காந்தியை வைத்திருக்கும், காந்திய மக்கள் கட்சி தலைவர்
தமிழருவி மணியனிடம் பேசினேன். அவர், “விஜய்ஏதோ கட்சி துவங்க போறாரு… ஆரம்பிக்கட்டு்ம் பார்க்கலாம்.. படம் வரட்டும்.. ” என்றவர், “இப்போ நான் யோகாசனத்துல இருக்கேன் பிறகு பேசுறேன்” என்றார். பிறகு இரு முறை அலைபேசியபோது, அழைப்பை ஏற்கவில்லை. மூன்றாவது முறை முயன்றபோது, அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அவர் கருத்து தெரிவித்தால் வெளியிட தயாராக இருக்கிறோம்.
– டி.வி.சோமு