“டைம் கொடுத்து அடிங்க!”: கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ.!

இன்று முதல் தமிழ்நாட்டில் கடும் மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், “கொஞ்சம் ‘ time ‘ கொடுத்து அடிங்க..” என்று மழையிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார் ஒரு எம்.எல்.ஏ.
பொதுவாகவே அக்டோபர் மாதங்களில், வடகிழக்குப் பருவமழை காலகட்டத்தில் நல்ல மழைப்பொழிவும் இருக்கும். சிலமுறை பெருமழை பெய்து பாதிப்புகளையும் ஏற்படுத்தும்
தற்போது அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் வானிலை, கனமழை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முதல் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.
இந்நிலை வரும் 19ம் தேதி வரை தொடரலாம். இதற்கிடையேசூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மொத்தத்தில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.
அன்றாடம் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, அரசுக்கு அறிக்கை தருவதற்கு வசதியாக, சில நடவடிக்கைகளை நீர்வளத்துறை எடுத்துள்ளது.
அதன்படி, வடகிழக்குப் பருவமழை முடியும் வரை அவசர காரணங்களைத் தவிர, நீர்வளத் துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பணிபுரியும் மாவட்டங்களைவிட்டு, மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நீர்நிலைகளுக்கு வரும் நீர்வரத்து, வெளியேற்றும் நீர் விவரங்களை, ஒரு நாளைக்கு நான்கு முறை, முதல்வர், தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எங்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது, எங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது என்ற விவரங்களை கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், 24 மணி நேரமும் அதிகாரிகள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் எச்சரிக்கைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள TN-Alert செயலி தயார் நிலையில் இருப்பதாகவும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான என்டிஆர்எஃப்- பிரிவினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் அரசு தெரிவித்து உள்ளது. எந்தப் பகுதிகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறதோ, அங்கு தேசிய பேரிடர் மீர்புப் படையினரை முன்கூட்டியே அனுப்ப இருப்பதாகவும் மாநில அரசு கூறியிருக்கிறது.
சென்னையில் 10,000 பேரும், தமிழகம் முழுதும் 65,000 தன்னார்வலர்களும், மீட்புப் பணிகளில் ஈடுபடத் தயாராகவுள்ளனர்.
சென்னையைச் சுற்றி உள்ள பகுதிகளில் 10 சென்டிமீட்டருக்குக் குறையாமல் மழை பெய்யும். சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆகவே, இப்பகுதியில் உள்ள ஏரிகளில் நீரை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வெள்ள பாதிப்பு ஏற்படாதவறு, தீவிர முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த – சென்னை ஆயிரம் விளக்கு பகுதி – சட்டமன்ற உறுப்பினரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான மருத்துவர் எழிலன் நாகநாதன், மழை எச்சரிக்கை குறித்த செய்தியை பகிர்ந்து “கொஞ்சம் ‘ time ‘ கொடுத்து அடிங்க..” என்று மழையிடம் கோரிக்கை வைத்து முகநூலில் பதிவிட்டு உள்ளார்.
பெருமழையைக் கண்டு அஞ்சாமல், மனத்துணிவுடன் எதிர்கொள்ளும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு, வைரலாகி வருகிறது.