“ஜி.டி.நாயுடுவை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்!”: ஜி.டி.என். நாயகன் மாதவன்!

“ஜி.டி.நாயுடுவை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்!”: ஜி.டி.என். நாயகன் மாதவன்!

டிரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, புரட்சிகர தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று திரைக்கு வருகிறது.

நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட முக்கிய கருத்துகள்:

  • நடிகர் முரளி: “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆகஸ்ட் 7 அன்று அனைவரும் திரையரங்குகளில் கண்டு மகிழுங்கள்.”

  • ஜி.டி. ராஜ்குமார்: “அரவிந்த்தான் ஜி.டி. நாயுடுவின் கதையைச் சினிமாவாக்கும் விதையைப்போட்டு, கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார். கதையை பாட்காஸ்ட்டாகக் கொண்டுவந்த கிருஷ்ணாவின் தீவிர ஆராய்ச்சியைப் பார்த்து என் பெற்றோர் படமாக்க ஒப்புக்கொண்டனர். இத்திரைப்படத்தில் 70% உண்மை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஆழமான தேடல்கொண்ட மாதவன் சாருக்கும் சத்யராஜ் சாருக்கும் நன்றி.”

  • நடிகை அதிதி பாலன்: “ஜி.டி. நாயுடு பற்றி விரிவாக விவரிக்கும் பத்மாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அவர் எப்படிப்பட்ட மாபெரும் கண்டுபிடிப்பாளர் என்பதை இக்கதையின் மூலம் அறிந்துகொண்டேன்.”

  • நடிகை துஷாரா விஜயன்: “நான் இதுவரை நடித்ததிலேயே இது மிகவும் வேறுபட்ட கதாபாத்திரம். சத்யராஜ் சாருடன் மீண்டும் இணைந்ததும், அதிதி பாலனுடன் இணைந்து நடித்ததும் மகிழ்ச்சியளிக்கிறது.”

  • அரவிந்த்: “ஜி.டி. நாயுடுவின் ஆச்சரியமிக்க வாழ்க்கை வரலாற்று கதை வெறும் பயோபிக் ஆக இல்லாமல், கமர்ஷியல் சுவாரஸ்யங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கதையைக் கேட்டதுமே மாதவன் சார்தான் இதற்கு பொருத்தமானவர் என்று முடிவுசெய்தோம்.”

நடிகர் சத்யராஜ்: “கோவைக்காரரான எனக்கே ஜி.டி. நாயுடு மியூசியத்தைப் போய் பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் எழுந்தது. ராமய்யா பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தமிழராகவோ இந்தியராகவோ மட்டும் சுருக்கிவிட முடியாத உலகளாவிய மேதையான அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் மிகப்பெரிய வெற்றியடையும்.”

  • பாடகர்/நடிகர் விஜய் யேசுதாஸ்: “முக்கியத்துவம் வாய்ந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். திரையரங்கில் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.”

  • தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன் & விஜய் மூலன்: “‘ராக்கெட்டரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மாதவன் கொண்டுவந்த இந்தச் சிறப்பான கதையில் இணைந்துள்ளோம். அப்படத்தைப் போலவே இதுவும் பெரும் வெற்றியடையும்.”

  • இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார்: “சமானிய மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட மாமனிதரைப் பற்றிய படம் இது. இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.”

நடிகர் மாதவன்: “ஜி.டி. நாயுடு என்ற மாமேதையைப் பற்றி மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் வழியே கொண்டுசேர்க்கப் போராடும் அதிதியின் கதாபாத்திரம்போல, அவரது புகழை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பொறுப்புணர்வோடு செயல்பட்டுள்ளோம். என்மீதும் கதையின்மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.”

Related Posts