Game Changer Review: என்ன சொல்கிறார் இந்த ‘முதல்வன்’?

Game Changer Review: என்ன சொல்கிறார் இந்த ‘முதல்வன்’?

ஷங்கர் பாணியிலான ‘சமூக நீதி’ படம்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆட்சியர் ராம் நந்தன் நேர்மையும் துணிச்சலும் கொண்டவர்.  அவரது நேர்மையான நடவடிக்கையால் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான மோபிக்கு எதிரி ஆகிறார். இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் சத்தியமூர்த்தியை பார்வதி என்கிற முதிய பெண்மணி சந்திக்க…  மாரடைப்பில் மரணமடைகிறார் முதலமைச்சர்.

அடுத்த முதல்வராக மோபி தயாராகிறார். அந்த நேரத்தில்,  மறைந்த சத்தியமூர்த்தியின் கடைசி விருப்பம் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகிறது.அதனால் ஒரு பூகம்பம் வெடிக்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே மீதிக்கதை.

மாவட்ட  ஆட்சியர் ராம் நந்தனாக ராம் சரன். மிடுக்கான தோற்றம், எடுப்பான பேச்சுஎன ரசிக்க வைக்கிறார். ஹெலிகாப்டரில் பறந்தபடியே, தண்டவாளத்தில் தலை வைத்திருக்கும் வில்லன்களின் கையில் கட்டப்பட்ட கயிறை அகற்றுவது போன்ற காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

அதே நேரம், பிளாஷ்பேக் காட்சியில் மக்களுக்காக போராடும்… திக்கித் திணறி பேசும் அப்பண்ணாவாக நடிப்பில் அசத்துகிறார்.

வழக்கமான சினிமா அரசியல்வாதி பாத்திரம்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அவரது அண்ணனாக வரும் ஜெயம் ரவி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.  பிளாஷ்பேக்கில் இளமையாகவும், பிறகு வயதான பெண்மணியாகவும் வந்து அசத்துகிறார் அஞ்சலி.  நாயகியாக வந்து டூயட் பாடுகிறார் கியாரா அத்வானி.சைட் சத்யா கதாபாத்திரத்தில் சுனில் கவர்கிறார்.

மற்றபடி பிரம்மானந்தம், வெண்ணிலா கிஷோர், நவீன் சந்திரா போன்ற நடிகர்கள் வந்துபோகிறார்கள்.

பாடல்களிலும் பின்னணி இசையிலும் அசத்துகிறார் தமன். குறிப்பாக ‘அருகு மீத’, ‘கொண்ட தேவர’ பாடல்கள் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன. ஷமீர் முகமது, ரூபன் கூட்டணியின் படத்தொகுப்பு, இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் கேமரா, வண்ணங்களை அள்ளித் தந்திருக்கிறது.  ஃப்ளாஷ்பேக் பகுதிகளில் கூடுதலாக ஈர்க்கிறது.

மோசமான அரசியல்வாதி அவரை எதிர்த்து நிற்கும் (சாமானிய!) ஆட்சியர் என்கிற நூல் பிடித்துச் சென்றிருக்கிறார் ஷங்கர். அவரது பழைய படங்களின் வாசனை ஆங்காங்கே அடிக்கிறது. ஆனாலும் ரசிக்கலாம்.

 

Related Posts