ஃப்ரீடம்: திரை விமர்சனம்: அதிர்ச்சி, மிரட்டல், நெகிழ்ச்சி!

ஃப்ரீடம்: திரை விமர்சனம்: அதிர்ச்சி, மிரட்டல், நெகிழ்ச்சி!

1995ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 43 விடுதலைப்புலிகள் இயக்கத்தவர் 43 பேர், 47 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டி தப்பித்தனர். அவர்களில் 21 பேர் சில வாரங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

இந்த உண்மைச் சம்பவத்தை ரத்தமும் சதையுமாக, கண்முன நிறுத்துகிறது ஃப்ரீடம்.

சிங்கள அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்கு படகில் வருகிறார்கள். அங்கு அகதி முகாமில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் மாறன். அவர் வருவதற்கு முன்பாகவே அவரது மனைவி அங்கு வந்து விடுகிறார்.

இது நடப்பது 1991ல்!

அப்போது, இந்திய முன்னாள் பிரதமர் ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்படுகிறார். இதைச் செய்தவர்கள் ஈழப்போராளிகள் என இந்திய அதிகாரிகள் கருதுகிறார்கள். உடனே, அகதி முகாம்களில் அடைபட்டிருப்பவர்களில், பலரை குறிப்பிட்டு அவர்களை வேலூர் கோட்டை சிறைக்கு இழுத்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு சித்திரவதைகள் நடக்கின்றன. அவர்கள், மேலதிகாரிக்கு அனுப்பும் புகார் கடிதங்கள் அங்கேயே எரிக்கப்படுகின்றன. இதை அறிந்து ஒரு அகதி தற்கொலை செய்துகொள்கிறார்.

இதையடுத்து அகதிகளில் ஒருவரான மாறன் கொதித்தெழுந்து, அங்கிருக்கும் காவல் அதிகாரியை தாக்குகிறார். அதன் பிறகு கொடுமைகள் இன்னும் அதிகரிக்கின்றன.

இறுதியில் அங்கிருந்து தப்பிவிட திட்டமிடுகிறார்கள். அதற்காக சுரங்கம் தோண்டி, வெளியில் சென்று விடுகிறார்கள்.

அவர்களை பிடிக்க காவல்துறை விரைகிறது. பிடிபட்டவர்களில் நாயகனும் அவன் குடும்பத்தினரும் இருந்தார்களா என்பது மீதிக்கதை.

சசிகுமார் தான் ஒரு அற்புத கலைஞன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அதே போல கதைத் தேர்விலும் மிகக் கவனமாக இருக்கிறார். அதற்கு இந்தப் படமும் உதாரணம்.

ஈழத்தில், தன் உறவுகளை சிங்கள காடையர்கள் ( போலீசார்) வன்கொடுமை செய்ததை அறிந்து ஆவேசமாக அவர்களை வெட்டித் தள்ளுவது, இங்கே வந்து சிறை பட்டு வதைபடுகையில் “நாங்க என்னய்யா தப்பு செஞ்சோம்” என்று ஆதங்கத்துடன் குமுறுவது என்று அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.

சசிகுமார், கொண்டாடத்தக்க கலைஞர் மட்டுமல்ல.. போற்றத்தக்க மனிதரும்கூட என்பது அவரது படத்தேர்வுகள் சொல்கின்றன.

அவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். கணவனைப் பிரிந்த அகதிப் பெண்ணின் வேடத்தை கண்களிலேயே வெளிப்படுத்துகிறார். “ராவணன் மட்டும் சீதையை கடத்தாம இருந்திருந்தா, நமக்கு பிரச்சினையே வந்திருக்காதுல்ல..” என்று அவர் ஆதங்கமும் அப்பாவித்தனமுமாக கேட்கும்போது கண்ணீர் வருகிறது.

கொடுமைக்கார காவல் ( சிறை) அதிகாரியாக வருகிறார் சுதேவ் நாயர், இதில் . பார்வை, நடை, உடை, பாவனை அனைத்திலும் குரூரத்தை வெளிக்காட்டுகிறார். சக கைதிகளைக் கொண்டே, மாறனைக் கொலை செய்ய அவர் போடும் திட்டம், உச்சம்.

வாய் பேச முடியாதவராக வரும், ‘பாய்ஸ்’ மணிகண்டன், சி.பி.ஐ. அதிகாரியாக வரும் ரமேஷ் கண்ணா, அகதி முகாம் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், வழக்கறிஞராக வரும் மாளவிகா, மு.ராமசாமி, சரவணன் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜிப்ரானின் இசை, படத்துக்கு பலம். பின்னணி இசை சோகத்தை, வலியை, துடிப்பை இன்னும் அதிகரிக்கிறது. தாலாட்டு பாடலும் நெகிழ வைக்கிறது.

ஜிப்ரான்

என்.எஸ். உதயகுமாரின் கேரமா, மிரட்டல். அகதி முகாம், சிறப்பு அகதி முகாம் (சிறை), சுரங்கம் என அனைத்தையும் கண் முன் நிறுத்தி அசரடிக்கிறது.

அதற்கு நிகராக சி.உதயகுமாரின் கலை இயக்கத்தைச் சொல்ல வேண்டும்.

ஶ்ரீகாந்த் என்.பி.யின் எடிட்டிங் கச்சிதம்.

வசனங்கள் ஈர்க்கின்றன.

“தற்கொலை படை புலிகள் இயக்கத்துலதான் இருக்கு அப்படின்னா ஜப்பான்ல 1947ல தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததே அங்கே விசாரிக்கணும்.. இங்கே வீரமங்கை வேலுத்தாயி படையில குயிலி தற்கொலை படை தாக்குதல் நடத்தினாங்க.. அதையும் விசாரிக்கணும்”

என்.எஸ். உதயகுமார்

“ஈழ அகதி ஒருத்தன்கிட்ட துப்பாக்கி இருக்குதேனு கேட்கிறியே.. இங்க காஷ்மீரிலும் துப்பாக்கி சர்வ சாதாரணமா புகழங்குதே.. அப்படித்தான்..”

“உடனே தீர்வு கிடைக்காதும்மா.. தமிழ்நாடு தனி நாடு இல்ல.. இங்கேனு சட்டதிட்டம் இருக்கு…”

“இன்னும் நரகத்துக்கு எங்க சார் அழைச்சுட்டுப் போயிருவீங்க… இந்த அகதி முகாம் என்ன எங்களுக்கு சொர்க்கமா..”

– வலியையும் வரலாற்றையும் சொல்லும் வசனங்கள்!

நேர்க்கோடு போட்ட மாதிரி, திசை மாறாமல் சீரான வேகத்தில் செல்கிறது திரைக்கதை.

சென்சார் பிரச்சினைகளுக்கு மத்தியில், மிகக் கவனமாக முக்கிய நிகழ்வை படமாக்கி பரபரப்பை மட்டுமல்ல.. பல்வேறு செய்திகளையும் அளித்துள்ள இயக்குநர் சத்ய சிவாவுக்கு பாராட்டுகள்.

சத்யசிவா

அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

தமிழின் பெயரால் இனப்படுகொலைக்கு ஆளானவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படத்துககு தமிழில் தலைப்பு வைத்து இருக்கலாம் என்பதைத் தவிர வேறு குறைகள் இல்லை.

மதிப்பெண்: 3.9/5

– டி.வி.சோமு

Related Posts