“பேய் பங்களாவின் பேரமைதி..!” : கொரோனா சிகிச்சை பெறும் மனுஷ்யபுத்திரன்  

கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.   இன்று சிகிச்சைக்காக,  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 தனக்கு சிகிச்சை அளிக்கப்படும் இடம், பேய் பங்களாவின் பேரமைதி போல இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றுதான் விரும்பினேன். அதற்குள் எப்படியோ வாட்ஸப் க்ரூப்களில் செய்தி பரவ ஆரம்பித்து நண்பர்கள் பலரும் கவலையுடன் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அதற்காகவே இதை பொதுவில் பகிர்கிறேன்.

எவ்வளவோ கவனமாக இருந்தும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல். சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிட்சை செய்திருப்பதால் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என என் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அட்மிட் ஆகியிருக்கிறேன்

இந்த நான்கு மாதத்தில் கொரோனா பற்றி எவ்வளவோ எழுதிவிட்டேன். ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.

கொரோனா வார்டின் முதல் நாள் அனுபவமே வெகுசிறப்பாக உள்ளது. பாத்ரூமில் வீல்சேர் நுழையவில்லை. ‘ இப்படி ஒரு பிரச்சினையை இப்போதுதான் எதிர்கொள்கிறோம்’ என்கிறார்கள். ஒரு தலையணை கேட்டு ஐந்து மணி நேரத்திற்குப்பிறகு இப்போதுதான் கிடைத்தது. ஒரு பேய் பங்களாவின் பேரமைதி. இவ்வளவு வசதியின்மைக்கு நடுவே என்னை நானே கவனித்துக்கொள்ளவேண்டும். கொரோனாவைவிட அதுதான் கொடுமையாக இருக்கிறது.

பத்திரமாக இருங்கள். இந்த முறையும் மீண்டு வந்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.