உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா ‘எறும்பு’ – நடிகர் சார்லி பேச்சு

உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா ‘எறும்பு’ – நடிகர் சார்லி பேச்சு

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், தயாரிப்பாளர் ரமணி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர்கள் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சக்தி ரித்விக், ஒளிப்பதிவாளர் கே. எஸ். காளிதாஸ், படத்தொகுப்பாளர் எம். தியாகராஜன், இசையமைப்பாளர் அருண் ராஜ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், அருண் பாரதி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சுரேஷ் குணசேகரன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சார்லி பேசுகையில், ” 2019 ஆம் ஆண்டில் இயக்குநர் சுரேஷ் என்னை சந்தித்து, ‘உங்களுக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன். ஒரே ஒரு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் அவருக்கு தற்போது ஒரு திரைப்படத்தை ஓ டி டி யில் இரண்டு மாதம் வரை பார்க்கிறார்கள் என்றேன். அதன் பிறகு தான் நான் இயக்குவது குறும்படம் என விளக்கம் அளித்தார். அதன் பிறகு படப்பிடிப்பு தளம் எங்கே? எனக் கேட்க, சிதம்பரம் அருகே உள்ள அறந்தாங்கி எனும் சிறிய கிராமம் என்றார். என்னுடன் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக்கும் நடித்தார். எங்களைப் பொறுத்தவரை இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் நாங்கள் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘ எறும்பு’. படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த கிராமமும் இயக்குநர் சுரேஷுக்கு உதவி செய்தது.

இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இயக்குநர் சுரேஷிடம் இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள் என்றேன். இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை சுரேஷ் தான் உண்மையான எறும்பு. அந்த எறும்பு தான்.. எங்களை எல்லாம் எறும்பாக மாற்றியது.

படத்தின் படப்பிடிப்பு 2021ல் நடைபெற்ற போது கொரோனா பிடியில் சிக்கி இருந்தது. படபிடிப்பு தளத்தில் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக் ஆன்லைனில் பாடத்தை கற்றுக் கொண்டே நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மற்றவரின் பாதிப்பு இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறார்கள். இதுதான் இதன் சிறப்பு. எறும்பு வழக்கமான படம் அல்ல உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா இதுதான்.

தாத்தா- தந்தை- தாய் ஆகியோரின் பெயரை.‌..பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார் இயக்குநர். தலைமுறையை மறக்காத படைப்பாளியான சுரேஷ், தன் மண்ணில் பெற்ற அனுபவத்தை எறும்பாக உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களின் வார்த்தைகளை ரசிகர்களும் முன்மொழிந்து, இப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

Related Posts