எக்ஸ்ட்ரீம்: திரைப்பட விமர்சனம்: அதிரடி த்ரில்லர்

சின்ன பட்ஜெட்டில் அதிரடி க்ரைம் த்ரில்லரை அளித்து உள்ளனர்.
தொலைக்காட்சி தொடர்களில் முத்திரை பதித்து வரும் ரட்சிதா மகாலட்சுமி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் மற்றும் ‘பிழை ‘,’ தூவல் ‘ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எக்ஸ்ட்ரீம்’ திரைப்படம் – ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சென்னையின் புறநகர் பகுதி ஒன்றில் ஒரு வீட்டின் கட்டுமான பணி நடைபெறுகிறது. ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு, அந்த வீட்டின் கட்டுமானத்திற்காக கட்டப்பட்ட கான்கிரீட் தூண் ஒன்றில் புதைக்கப்பட்டு இருக்கிறார். அதனை தொழிலாளிகள் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
காவல்துறையின் விசாரணை தொடங்குகிறது. அந்த கான்கிரீட் தூணில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார் என காவல்துறை அதிகாரி விசாரணையை தொடங்குகிறார். அவர் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் பணிப்பெண்ணாக பணியாற்றும் அபி நட்சத்திரா என தெரிய வருகிறது.
அந்தக் கொலையை யார் என புலனாய்வு விசாரணை தொடங்குகிறது. இறுதியில் கொலையாளியை என்பதை காவல்துறை எப்படி கண்டறிகிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
காவல் துறை அதிகாரிக்கு துணையாக விசாரிக்கும் பொறுப்பினை உதவி காவல் துறை அதிகாரியாக
நடித்திருக்கும் ரட்சிதா மகாலட்சுமி- அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். இனி இவரைத் தேடி காக்கி உடை கதாபாத்திரங்கள் அணி வகுக்கும்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ராஜ்குமார் நாகராஜும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இளம் காதலர்களாக நடித்திருக்கும் அனந்த் நாக் – அம்ரிதா ஜோடி ரசிகர்களுக்கு இளமை விருந்தை படைக்கிறார்கள்.
அப்பாவித்தனமான இளம் பெண் வேடத்தில் தோன்றி தன் வழக்கமான நடிப்பால் ரசிகர்களை பரிதாபப்பட வைக்கிறார் நடிகை அபி நட்சத்திரா. தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இளம்பெண் வேடத்தில் அபி நட்சத்திரா தொடர்ந்து நடித்து வருவதால் அவர் மீது ‘ ரேப் ஸ்டார்’ என்ற முத்திரை குத்தப்பட்டு விடுமோ..! என்ற அச்சமும் எழுகிறது.
ஒளிப்பதிவு- பின்னணி இசை- பாடல்கள் – கலை இயக்கம் – ஆகியவை ஓகேதான்.
இதுபோன்ற துப்பு துலக்கும் குற்ற சம்பவங்கள் தொடர்பான கதையில் திரைக்கதையை சற்று விறுவிறுப்பாக அமைத்து விட்டால் பார்வையாளர்களை கவர முடியும். இதில் இயக்குநர் ஓரளவிற்கு வெற்றியை பெற்றிருக்கிறார். கொலை செய்தது யார் என உச்சகட்ட காட்சியில் பார்வையாளர்களுக்கு தெரிய வருவது சுவாரசியமான ட்விஸ்ட்.
கொலை – விசாரணை மட்டும் திரைக்கதையில் இடம்பெற செய்யாமல்.. காவல்துறை அதிகாரியின் சொந்த பிரச்சனை – குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டிய இளம் காதலர்களின் அத்துமீறிய செயல்- என இயக்குநர் கதையை விவரித்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு இளம் பெண்கள் அணியும் கவர்ச்சியான ஆடையும் பொது வெளியில் அவர்கள் காதலிக்கும் ஆண் நண்பர்களுடன் காட்டும் நெருக்கமும் தான் காரணம் என இயக்குநர் விவரித்திருப்பது ஆணாதிக்க மனோபாவம் என்றாலும் அதுவும் ஒரு காரணி என சமூக ஆர்வலர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இதனால் இந்தத் திரைப்படத்தை ஒரு தரப்பு ரசிகர்கள் வரவேற்கவே செய்கிறார்கள்.