மின் விளக்குகளை ஒரே நேரத்தில் அணைத்தால் ஆபத்து!: சி.பி.எம். எச்சரிக்கை!

“நாட்டில் உள்ள அனைவரும் மின் விளக்குகளை ஒரே நேரத்தில் அணைத்தால் ஆபத்து” என  சி.பி.எம். கட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.

“கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் வகையில் இன்று (05.04.2020) இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள்!” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது குறித்து  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எல்லா வீடுகளிலும் ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஒரே நேரத்தில் ஒளிரவிடப்பட்டால்,  மின் அழுத்தம் அதிகரிக்கும். 15% முதல் 20% மின்சார அழுத்தம் அதிகரித்தால் கூட , மின் இணைப்புகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் நாடு முழுதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உண்டு. இதே போன்று கடந்த 2012ம் ஆண்டு நடந்ததை நினைத்து பாருங்கள். கொரோனா பீதி காலத்தில் மின்வெட்டும் ஏற்பட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், “இந்த அறிவிப்பை மோடி, திரும்பப்பெற வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிலர் பொத்தாம்பொதுவாக, “அரசியல் கட்சி அறிக்கைதானே.. வேண்டுமென்றே  சொல்வார்கள்” என நினைக்கக்கூடும்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை உண்மைதான் என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அது தன் ஊழியர்களுக்கு, “அனைத்து செயற்பொறியாளர்களும் போதுமான பணியாளர்களுடன் இன்று இரவு 8 மணியில் இருந்து 10.30 மணி வரை தலைமையிடத்தில் மின் கருவிகள் செய்யும் கருவிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மிக துரிதமாக செயல்படும் மின்சாதன தொகுப்ப கருவிகளை கண்காணிக்க வேண்டும். சரியான மின் அழுத்தத்தை வழங்குவதற்கு மின் மாற்றிகளில் உள்ள கருவிகள் மூலம் மின்சாரத்தை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்1” என உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே நாடு கலவர சூழலில் இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தேவையற்ற  முறையில் மின் விளக்கை அணைக்கச் சொல்லிவிட்டாரே என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.