கொரோனா மருத்துவர் மரணம்: நெகிழ வைத்த சித்த மருத்துவர் கா.திருத்தணிகாசலத்தின் அறிவிப்பு!
கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால், தொற்று ஏற்பட்டு மரணமடைந்த மருத்துவர்களை தங்கள் பகுதி சுடுகாட்டில் எரிக்க, மக்கள் எதிர்ப்பு காண்பித்து வரும் நேரத்தில், அந்த மருத்துவர்களை தனது தோட்டத்தில் எரியூட்ட தயார் என சித்த மருத்துவரும், சமூக கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவருமான கா.திருத்தணிகாகசலம் அறிவித்துள்ளார்.
சென்னை அரசு மருத்துவமனையில் 60 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கை அம்பத்தூர் மயானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு அம்பத்தூர் மயானம் பகுதி சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தங்களுக்கும் கொரோனா ஏற்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். கொரோனா கிருமி பரவாது என்று போலீசார், சுகாதாரப் பணியாளர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மக்கள் அதை ஏற்க முன்வரவில்லை.\nஇதைத் தொடர்ந்து அவரது உடலை திருவேற்காடு மயானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரா என்ற தகவல் தெரியவில்லை. ஆனாலும், கொரோனாவை தடுக்கும் பணியில் மருத்துவர்கள்தான் தற்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்களின் இந்த செயல் மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், சித்த மருத்துவர் கா.திருத்தணிகாசலம், தனது முகநூல் பதிவில், “கொரோனோவால் உயிரிழந்த மருத்துவர்களை என் தோளில் சுமந்து சகல மரியாதையோடு என் தோட்டத்தில் அடக்கம்செய்யத்தயார்
என் தோட்டம் இந்த மருத்துவ தெய்வங்களின் கோயிலாகட்டும்” என தெரிவித்துள்ளார்.
அவரது அறிவுப்புக்கு பலரும் நெகிழ்ந்த மனதோடு நன்றி தெரிவித்து வருகின்றனர்.