29 / 829: சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தின் தொடர் சாதனை!
சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மனிதநேய பயிற்சி மையம் நடத்துவதும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இங்கு இலவச பயிற்சி அளிப்பதும் தெரிந்த விசயம். அதே போல, இந்த மையத்தில் பயிற்சி மாணவர்கள் பலர், வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இந்தியா முழுதும் பணி புரிவதும் தெரிந்ததே.
இந்த வருடமும் அந்த சாதனை தொடர்ந்திருக்கிறது.
இத்தேர்வில் நாடுமுழுதும் தேர்ச்சி பெற்ற 829 பேரில், 29 பேர், மனித நேய பயிற்சி மைய மாணவர்கள்!
இதுகுறித்து மனிதநேய இலவச கல்வி மைய இயக்குனர் மா.கார்த்திகேயன் தெரிவிவிக்கும்போது,
“பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் இயங்கும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம், தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு பயிற்சி அளித்து வருகிறது. அந்தவகையில் இங்கு பயிற்சிபெற்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற மத்திய அரசு பணிகளிலும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, குரூப்-2 போன்ற இதர பணிகளிலும் இதுவரை 3 ஆயிரத்து 505 பேர் வெற்றி அடைந்து பதவிகளில் உள்ளனர்.
அதன்படி, 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகள் தயாராகும் வகையில் அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டன. அதிலும் குறிப்பாக நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்றுனர்கள் மூலம் மாதிரி நேர்முகத்தேர்வு, மாணவ-மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை, டெல்லி சென்று வருவதற்கு விமான பயண கட்டணம் வழங்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி, மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 16 மாணவிகள், 13 மாணவர்கள் என மொத்தம் 29 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் அகில இந்திய அளவில் ஆர்.ஐஸ்வர்யா 47-வது இடத்தையும், எஸ்.பிரியங்கா 68-வது இடத்தையும், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பேத்தி எம்.பிரித்திகாராணி 171-வது இடத்தையும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி எம்.பூர்ணசுந்தரி 286-வது இடத்தையும் பிடித்தனர்!” என்றார்.
மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்ற 29 பேரிடமும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.
யாழினி சோமு