“சென்னையை தூக்கி பத்தடி மேலே வைக்கணும்!”: மீடியா & எதிர்க்கட்சிகளை கிண்டலடித்த எழுத்தாளர் சோ.தர்மன்
“வெள்ள பாதிப்பிலிருந்து சென்னைக்கு விடிவு காலம் வர வேண்டுமானால் சென்னை நகரத்தை ஒரு பத்தடி மேலேயும் கடலை ஒரு பத்தடி கீழேயும் தூக்கி வைக்கிற அதிசயம் நிகழ வேண்டும்” என்று எழுத்தாளர் சோ.தர்மன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“கடந்த ஒரு வாரமாக சென்னையில்தான் இருந்தேன்.இன்று காலை தான் ஊர் வந்தேன்.சென்னையின் மழைக்கும் புயலுக்கும் அங்கேதான் இருந்தேன்.ஊடகங்கள் பெரிசு படுத்தி பீதியை உண்டாக்கிய அளவுக்கு சென்னையில் பெரிய அளவில் ஒன்றும் நடக்கவில்லை.புயல் வந்தால் பெருமழை விடாத அடை மழை பெய்தால் தண்ணீர் தேங்குவதும் வெள்ளம் வருவதும் இயல்பான ஒன்று.ஆண்டாண்டு காலமாக நடப்பதுதான்.பத்து நாள் இருபது நாள் தொடர் அடைமழையில் எல்லாம் ஜனங்கள் வாழ்ந்த காலங்கள் உண்டு.
சென்னைக்கு விடிவு காலம் வர வேண்டுமானால் சென்னை நகரத்தை ஒரு பத்தடி மேலேயும் கடலை ஒரு பத்தடி கீழேயும் தூக்கி வைக்கிற அதிசயம் நிகழ வேண்டும்.கடல் மட்டமும் சென்னையின் தரை மட்டமும் சமமாக இருப்பதால் தண்ணீரை கடல் உள் வாங்குவது தாமதமாகிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.அந்த நகரின் அமைப்பே அப்படி.
அடுத்து நாம் அனைவரும் தண்ணீரை அப்புறப்படுத்துவதைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.தண்ணீரை தேக்குவது பற்றி யாருமே சிந்திப்பதில்லை.நம்முடைய நீர் மேலாண்மை முறையே பெரிய பெரிய அணைக்கட்டுகள் கட்டுவது மட்டுமல்ல.சின்னச் சின்ன குளங்கள்,குட்டைகள்,கண்மாய்கள், ஊருணிகள் ஏராளமாக உருவாக்கி தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை தக்க வைப்பதுதான்.
அந்தக் காலத்தில் மனித உழைப்பால் மட்டுமே பல்லாயிரக் கணக்கான நீர் நிலைகளை நம் முன்னோர்கள் உருவாக்கி தண்ணீரை தேக்கி சாதித்திருக்கிறார்கள்.இப்போது ஜே.சி.பி போன்ற நவீன எந்திரங்கள் வந்து விட்டன.சென்னையை சுற்றிலும் சுதந்திரமடைவதற்கு முன்னால் இருந்த நீர் நிலைகளை கண்டறிந்து தூர்வாருவதோடு புதிய நீர் நிலைகளை உருவாக்கினால் இது மாதிரி எத்தனை மழை வந்தாலும் வெள்ளம் வராது” – இவ்வாறு சோ.தர்மன் குறிப்பிட்டு உள்ளார்.