சென்னை-நெல்லை வந்தே பாரத்:  கட்டணம் அதிகம்! பயணிகள் ஆதங்கம்!

  சென்னை-நெல்லை வந்தே பாரத்:  கட்டணம் அதிகம்! பயணிகள் ஆதங்கம்!

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை  துவங்க உள்ள நிலையில், கட்டணம் அதிகமாக உள்ளதாக பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக – சொகுசாசு ரயிலாக வந்தே பாரத் இயங்கி வருகிறது. தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்களை இயங்கும்.

இந்நிலையில், தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் நாளை  24ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதனை ஒன்றிய தலைமை அமைச்சர்  மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

சென்னை டூ நெல்லை சென்றடைய 10 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். ஆனால், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் ஏழரை மணி நேரத்தில் செல்வதால் பயணியர் மகிழ்ந்தனர். இந்த மகிழ்ச்சியில் தற்போது பங்கம் விளைந்துள்ளது.

அதாவது, ‘பொதுவாக மற்ற ரயில்களில் சென்னை- நெல்லை படுக்கை வசதி கட்டணம் 350 ரூபாய்தான். ஆனால் வந்தே பாரத் ரயிலில் முழுதும் ஏ.சி.சேர்கார் பெட்டிதான். இதற்கு கட்டணம்,  ரூ.1,620. அதே போல இருக்கும் ஒரே ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ. 3,025.

ஆகவே ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல.. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த ரயிலில் பயணிக்க முடியாது. ஆகவே இந்த ரயிலில் உள்ள ஆடம்பர வசதிகளை குறைத்து, சாதாரண கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

உதாரணமாக இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே பயணிகளுக்கு சைவ, அசைவ உணவு பற்றி கேட்டு பதிவு செய்யப்பட்டு,  2 வேளை உணவு வழங்கப்படும்.  மேலும் டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவையும்  அளிக்கப்படும். இவற்றுக்கும் சேர்த்து டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக 300 ரூபாயும், எக்சிகியூட்டிவு சேர்கார் பயணிகளுக்கு 370 ரூபாயும் வசூலிக்கப்படும்.

ரயில் உணவின் தரம் எப்படி இருக்கும் என்பது அனனைவரும் அறிந்ததே. பகலில் செல்வதால், பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தே, நல்ல ஓட்டல்களில் இருந்தோ உணவு எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆகவே கட்டாயமாக உணவுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். தேவைப்படுவோர் வேண்டுமானால் ரயில் உணவை வாங்கட்டும்.

இதன் மூலம், ரூ. 300  முதல், ரூ. 370 கட்டணத்தில் குறையும்” என்கின்றனர் பயணிகள்.