”நான் மேயர் ஆன கதை…!”:  மனம் திறக்கும் சைதையார்!

சென்னை பெருநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி அவர்களின் பதவிக்காலத்தை, மாநகரின் பொற்காலம் எனலாம்.

புதிய பாலங்கள், சாலைகள், குடி நீர் திட்டங்கள் என மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும், பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்தார் சைதையார்.

அவரது பணிகள் சென்னையைக் கடந்து தமிழகம் எங்கும் பாராட்டுக்களைப் பெற்றன; இப்போதும் அவரது பணிகளை நினைக்காதவர் இல்லை.

அப்படிப்பட்ட சைதையார், சென்னை மேயர் ஆனது எப்படி?

இதோ, அவரே சொல்கிறார்:

“நான் மேயர் ஆன கதையைச் சொன்னால் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும்.

1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக, சைதாப்பேட்டை தொகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன்; எதிர்க் கட்சியினரின் கள்ள வாக்குகளால் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன்.

ஆனால், அண்ணா திமுக, தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார்.

என்னையும், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’   ஆசிரியர் ராமகிருஷ்ணன் அவர்களையும் அழைத்த எம்.ஜிஆர், ‘இவன் வெற்றி பெற்றுவந்தால்,   நல்ல இத்தில் உட்காரவைக்க நினைத்தேன்;  ஆனால் தோற்றுவிட்டு வந்து நிற்கிறான்!’ என்றவர், என்னைப் பார்த்து, ‘சரி,  விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்த இருக்கிறேன். நீதான் அண்ணா திமுகவின், ’முதல் மேயர்’ ஆகப்போகிறாய்!’ என்றார்.

அவர் சொன்னது 1980-ம் ஆண்டு!

புரட்சித் தலைவர் உயிரோடு இருக்கும் வரை, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் சென்னையில் நடைபெறவே இல்லை.

அதற்குப் பிறகு 2011-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ‘மாநகராட்சி தேர்தலில் உங்களை நிற்க வைத்து மேயர் ஆக்குகிறேன்!’  என்று சொன்னார்.

அதைப் போலவே பல சவால்கள் –  சூழ்ச்சிகள் –  சதிகளுக்கு மத்தியில் என்னை வேட்பாளராக அறிவித்தார்.

31  ஆண்டுகளுக்கு முன்பு, ‘நீ தான் அண்ணா திமுகவின் முதல் மேயர்!’  என்று சொன்னார் என் தலைவர் எம்.ஜி.ஆர். அது அப்படியே நடந்தது.

புரட்சித் தலைவர்தான், எப்படிப்பட்ட தீர்க்கதரிசி!

துமட்டுமல்ல..  2011-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் இன்னொரு அதிசயமும் நடந்தது.

மாகராட்சியில் இருந்த 200 வார்டுகளில் 169 வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி  பெற்றார்கள். (எதிர்க்கட்சிகள், 31 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றன.)

இதில்,  அ.தி.மு.க. கவுன்சிலர்கள்,தி.மு.க.வினரைவிட  கூடுதலாக பெற்ற வாக்குகள், 1,59,000.  ஆனால் தி.மு.கவைவிட நான் பெற்ற கூடுதல் வாக்குகள், 5,19,000!

அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ‘ஒரு வரலாற்று சிறப்பு  மிக்க  வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறீர்கள், மிஸ்டர் சைதை. உங்கள்  பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன்!’ என்று சொன்னார்: சொன்னபடியே வருகை தந்து சிறப்பித்தார்.

ஒரு முதலமைச்சர், முதன் முதலாக ஒரு மேயர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்து அமர்ந்து, அவர் முன்னணியில் பதவி ஏற்பு என்ற வரலாற்றை உருவாக்கினார், அம்மா.

சென்னை மேயராக 5 ஆண்டு காலம் ஊழல் அற்ற ஓர் சிறப்பான நிர்வாகத்தை அளித்தேன்.

ஓர் அரசாங்கம் திட்டம் தீட்டுவதைப் போலவே, சென்னை மாநகராட்சியில் 207 புதிய திட்டங்களை தீட்டினேன். இந்தியாவில், ‘நம்பர் ஒன் பெருநகர மாநகராட்சி’ என்ற புகழை சென்னை மாநகராட்சி அந்த காலகட்டத்தில் என்னால் பெற்றது.

நான் ஐந்து ஆண்டுகாலம் மேயராக  பணியாற்றிய போது எனது வீட்டில் இருந்துதான் காலை, மதியம், மாலை உணவு கொண்டுவந்து சாப்பிடுவேன்.

மாநகராட்சி மேயர் அலுவலகத்திற்கு வரும்  அனைவருக்கும் என்னுடைய வீட்டில் தாயாரிக்கப்பட்ட கருபட்டி, சுக்கு மல்லி காபி கொடுக்கப்பட்டது.

அந்த காலகட்டத்தில் நான் அமெரிக்கா, சிங்கப்பூர் சென்று வந்தேன்;  சீனாவிற்கு பாரத பிரதமரோடு சென்றுவந்தேன்,

தவிர, இந்தியா முழுதும்  உள்ள மாநிலங்கள் பலவற்றுக்கு சென்று வந்தேன்.

ஆனால்  எந்த பயணச் செலவையும் மாகராட்சியிடம்  நான்  பெறவில்லை. அத்தனை பயணங்களையும் என் சொந்த செலவிலேயே மேற்கொண்டேன்.

மேயருக்கான சலுகைகள் பல உண்டு… ஆனால் எந்த ஒரு சலுகையையும் நான் பெறவில்லை!

உதாரணமாக மேயருக்கு வாகனம் உண்டு;  இரண்டு மூன்று ஓட்டுனர் என்று உண்டு. இச்சலுகைகள் உட்பட எந்த சலுகைகளையும் நான் பெறவில்லை.

என் சொந்த நிதியில் மேயராக பணியாற்றி வந்தேன்.  மாநகராட்சி நிதியில் இருந்து என்னுடைய செலவுகளுக்காக, ஒரு ரூபாய் கூட பெறவில்லை.   அப்படி,  ஊழலற்ற மேயராக, நாளொன்றுக்கு பத்தொன்பது மணி நேரம், பணியாற்றினேன்.

இந்த அர்ப்பணிப்பான உழைப்பின் சான்றாக,   எனது  பணிகளைப் பற்றிய சிறு குறிப்புகளை சொல்ல விரும்புகிறேன்..

எனக்கு முன்  மேயராக இருந்தவர் 1996 – 2001 வரை ஐந்து ஆண்டுகளில், கள ஆய்வு செய்தது 447 முறை.

2006 – 2011 வரை  ஐந்தாண்டுகளில் கள ஆய்வு செய்தது 793 முறையாகும்.

1996-2001 வரை 8000 பணிகள் நடந்தன.

ஆனால் நான் பதவி ஏற்ற 2011 முதல் 2016 வரை நடந்த பணிகள் 3,02,878 ஆகும்!

2006 – 2011வரை 5000 புகார்கள் பொது மக்களிடம் இருந்து வந்தன: அவற்றில், நடவடிக்கை எடுத்தது  எவ்வளவு என்று  பதிவு செய்யப்படவில்லை.

ஆனால்  எனது ஐந்து ஆண்டுகாலத்தில், பெறப்பட்ட புகார் 5,69,000 புகார் மனுக்கள் தொலைபேசி, மற்றும் மனுக்களாக வந்தன.

அந்த ஐந்தாண்டு காலத்தில் எத்தனை மணிநேரம் உழைத்திருப்பேன் என்று யூகிக்க முடிகிறதா? 26,910 மணி நேரம் உழைத்திருகிறேன்.

அந்த காலகட்டத்தில் நான் கொடுத்த ஆலோசனைகள் 35,263!

மீண்டும்  எனது நேர மேலாண்மை பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.   அது அனைவருக்கும் பயன்தர தக்கதாக இருக்கும்.

நேரமேலான்மையை பயன்படுத்தி உழைத்ததாலேயே இத்தனை மக்கள் பணிகளைச் செய்ய முடிந்தது.  இந்தஅளவுக்கு உழைத்த, திட்டங்கள் தீட்டிய, செயல்படுத்திய  மேயர்  இந்தியால் வேறு எவரும் இல்லை.  

இத்தனை பணிகளைச் செய்ய, நாள் ஒன்றுக்கு 19 மணி நேரம் உழைத்திருக்கிறேன்.

இரவு 11 மணிக்கு படுத்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து விட்டு யோகா பயிற்சி செய்து 5.30 மணியில் இருந்து பர்வையாளர்களை பார்த்து 7 மணிக்கு பிறகு கள ஆய்வு செல்வேன். தொடர்ந்து மாநகாரட்சி பணிகள்.

இப்படித்தான் எனது நேர மேலாண்மையை பின்பற்றுகிறேன்!”

–  சைதையாரின் சேவை மனப்பான்மையும், அதற்காக அவர் எடுக்கும் முயற்சியும் உழைப்பும் வியக்க வைக்கின்றன.

  • யாழினி சோமு