இட்லி சாப்பிட்ட காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது கே.பாக்யராஜ் கேள்வி?
ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.அதில் சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் கலந்து கொண்டார்.
இயக்குநர் பாக்யராஜ்;
இப்படத்தின் தலைப்பு ‘பரமபதம் விளையாட்டு’ அருமையான தலைப்பு. இத்தனை காலம் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது.
அந்த தலைப்பை வைத்த இயக்குநர் திருஞானத்திற்கு பாராட்டுக்கள். டிரெய்லரைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதற்காக யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.
சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார்.நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. நேற்றுதான் என்னை அழைத்தார்கள். நடிகை ஜெயசித்ராவிற்காகத்தான் வந்தேன். ஏனென்றால், ஒரு விழாவிற்கு அழைத்தால், அப்படத்தைப் பார்த்தால் தான் அப்படத்தைப் பற்றி நல்ல விஷயங்களைக் கூறி வியாபாரத்திற்கு நன்மை செய்ய முடியும்.
தயாரிப்பாளர் கே.ராஜன் எப்போதும் மற்றவர்கள் பிரச்னைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவர். அதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் செய்த நற்செயல்களுக்கும் முதல் ஆளாகப் பாராட்டக்கூடியவரும் அவர்தான் என்றார்.
தயாரிப்பாளர் சிவா பேசும்போது,
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்க்கத் தோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.
இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவில்லை என்றால் அவரது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.