கர்நாடகாவில் களத்தில் இறங்கிய காவேரி கூக்குரல் இயக்கம்!
மைசூரு; காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக தொடங்கப்பட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கம் கர்நாடகா மாநில வனத் துறையுடன் இணைந்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியை நேற்று (பிப்.14) தொடங்கியது.
கர்நாடகாவில் வேளாண் காடு வளர்ப்பு தொடர்பான முதல் கருத்தரங்கு மைசூருவில் உள்ள வித்யநாராயணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில வனத் துறையின் தலைமை வன பாதுகாவலர் திரு.ஹிராலால், உதவி வனப் பாதுகாவலர் திரு.மஹாதேவ், கோட்ட வன பாதுகாவலர் திரு.பிரசாந்த், பெங்களூருவில் உள்ள வேளாண் காடு வளர்ப்பு மையத்தின் செயலாளரும் முன்னாள் வனத் துறை அதிகாரியுமான திரு.ஏ.எம். அன்னையா மற்றும் முன்னோடி மரப் பயிர் விவசாயிகள் பங்கேற்று பேசினர்.
இந்நிகழ்ச்சியில், மைசூரு, மாண்டியா, தும்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாண் காடு வளர்க்க விரும்பும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். வனத் துறை அதிகாரிகளும், முன்னோடி விவசாயிகளும் மரம் சார்ந்த விவசாயத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
தலைமை வன பாதுகாவலர் திரு.ஹிராலால் க்ருஷி ஆரண்யா ப்ரோத்ஷஹனா யோஜன் என்ற திட்டத்தின் மூலம் மரம் சார்ந்த விவசாயத்துக்கு அரசு வழங்கும் ஆதரவு குறித்து விரிவாக பேசினார். மேலும், காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டதற்கு பிறகு அம்மாநிலத்தில் மரக் கன்று உற்பத்தி பெரியளவில் அதிகரித்து இருப்பதையும் குறிப்பிட்டு பேசினார்.
ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி பெண் விவசாயி திருமதி. கவிதா உமாசங்கர் மிஸ்ரா பேசுகையில், “விவசாயத்தை அறிவியல்பூர்வமாக செய்வதன் மூலம் ஒரு நடுத்தர வர்க்க விவசாயியின் விவசாய சொத்து மதிப்பை 12 முதல் 17 ஆண்டுகளில் 7 கோடிக்கும் மேல் அதிகரிக்க முடியும்” என்றார்.
இக்கருத்தரங்கில், கர்நாடகா மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு.அஸ்வத் நாராயண், மைசூரு, மாண்டியா பகுதிகளின் இயற்கை வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிப்படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் ஆகும்.