கேப்டன் பிரபாகரன்’: விமர்சனம்: சர்ச்சைகளும், சாதனைகளும்!
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படங்களில் ஒன்று, ‘கேப்டன் பிரபாகரன்’.
1991 ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை ஒன்று அன்று வெளியான இப்படம், வெளியாவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
விஜயகாந்தின் நூறாவது திரைப்படம், ஏற்கெனவே அவரது நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படமான ‘புலன் விசாரணை’ படத்தை இயக்கிய ஆர்கே செல்வமணியே மீண்டும் இப்படத்தில் இணைந்தது.. ஆகியவை திரைக் காரணங்கள்.
அதை மீறிய வேறு இரு காரணங்கள் இருந்தன..
முதல் காரணம்… ஈழ விடுதலைக்காகப் போராடி வந்த பிரபாகரன் பெயரை தலைப்பாக கொண்ட முதல் திரைப்படம்!
இரண்டாவது காரணம்.. “நூறு கோடி ரூபாய்க்கும் மேலுள்ள சந்தனக் கட்டைகளை கொள்ளையடித்தவர்… காவலர்கள் உட்பட நூறு பேருக்கும் மேலானவர்களை கொன்றவர்” என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட, சந்தன வீரப்பன் குறித்த முதல் திரைப்படம்.
தவிர, அப்போது வீரப்பனின் ஒளிப்படம்கூட யாரிடமும் இல்லை. அதாவது வீரப்பனின் முகமே யாருக்கும் தெரியாது.
மூன்றாவது காரணம்.. படத்தின் பட்ஜெட். அப்போதே ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. அதாவது படம் வெளியான 1991ல் ஒரு பவுன் தங்கத்தின் விலை, ரூ. 3,466.
தவிர, படத்தில் நடித்த நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த சம்பளம், பதினைந்து லட்ச ரூபாய்தான். மீதி ஒரு கோடியே முப்பத்தியைந்து லட்ச ரூபாயும் படத்துக்காக செலவழிக்கப்பட்டது.
அதனால்தான் நிஜமாகவே பிரம்மாண்ட திரைப்படமாக உருவானது.
படம் வெளியாகி பிறகு பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுதும் பல ஊர்களில் 300 நாட்களுக்கும் மேல் ஓடியது.
படத்தை ஐ.வி. சினி புரடக்சன்ஸ் சார்பில், விஜயகாந்தின் நண்பரான அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்தார்.
இப்போதும் படம் குறித்த பிரமிப்பு ரசிகர்களுக்கு உண்டு. இதையடுத்து 34 வருடங்கள் கழித்து மீண்டும் வரும் 22ம் தேதி தமிழ்நாடு முழுதும் 500 திரையரங்குகளில் ‘கேப்டன் பிரபாகரன்’ வெளியாகிறது.
பிலிம் விஷன் கம்பெனியின் ராமு படத்தினை 4கே தரத்தில் 7.1 சவுண்ட் மிக்ஸிங்கில்ன டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து கொடுத்துள்ளார்.
முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.
இதையடுத்து படத்தின் சிறப்புக்காட்சி, செய்தியாளர்களுக்காக இன்று திரையிடப்பட்டது.
படத்தின் விமர்சனம்…
கதை:
சத்தியமங்கலம் பகுதியில் சந்தன மரம் மற்றும் யானைத் தந்தம் ஆகியவற்றை கடத்தி வருகிறான், வீரபத்திரன். தன்னை பிடிக்கவரும் காவலர்களையும், காட்டிக்கொடுக்கும் ஊர் மக்களையும் கொடூரமாக கொல்கிறார்.
இச்சமயத்தில் சென்னையில் இருக்கும் இந்திய வனப் பணி அதிகாரி ராஜாராம் தனது சக நண்பன் பிரபாகரனுக்கு அமைச்சர் மகளை அவர்களது விருப்பப்படி கல்யாணம் செய்து வைக்கிறார். இதனால் அமைச்சர் ராஜாராம் மீது ஆத்திரமடைந்து, வீரபத்திரனை பிடிக்க ராஜாராமை அனுப்புகிறார். அங்கு ராஜாராம் பழங்குடி பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீரபத்திரனால் கொல்லப்படுகிறார்.
இதனால் ஆவேசமாகும் பிரபாகரன், தானே முன்வந்து வீரபத்திரனை பிடிக்க சத்தியமங்கலம் செல்கிறார்.
அவர் வீரபத்திரனை பிடித்தாரா, இந்த விவகாரத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சி என்ன என்பதையெல்லாம் சுவாரஸ்யமாக மீதிக்கதை சொல்கிறது.
நடிப்பு:
காக்கி வேடம் என்றாலே விஜயகாந்துக்கு மிகவும் பொருந்தும். அவரது உயரம், கம்பீர நடை என இதிலும் ஈர்க்கிறார். காவலர், ராணுவ அதிகாரி என 22 திரைப்படங்களில் நடித்து உள்ள விஜயகாந்த், வனத்துறை அதிகாரியாக நடித்தது இந்தப் படத்தில் மட்டும்தான்.
மக்களுக்காக அதிகாரிகளை எதிர்த்துப் பேசும்போது கம்பீர நடிப்பை வெளிப்படுத்தும் விஜயகாந்த், தாயின் மரணத்தின் போது கண் கலங்கி நெகிழ வைக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல தூள் பறத்துகிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளின் போது பல விபத்துகளில் சிக்கனார்.. ரத்தம் சிந்தினார். ஆனால் வழகக்போல டூப் போடாமல் தானே நடித்தார்.
வீரபத்ரனாக மிரட்டிய மன்சூர் அலி கான், இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். அசால்ட்டான நடை, உடை, பாவனை, அலட்சிய பேச்சு என ரசிகர்களை ஈர்க்கிறார்.
இந்த கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “வீரபத்திரன் கேரக்டரில் முதலில் கரிகாலனைத்தான் நடிக்க வைத்தேன். ஏனோ அவருக்கு முழு ஈடுபாடு இல்லை. வீரபத்திரன் குழுவில் ஒருவராக இருந்தார் மன்சூர் அலிகான். ஒரு நாள், படப்பிடிப்பில், ‘நான் யார் தெரியுமா.. வீரபத்திரன்’ என்று சொல்லி, படக்குழு உறுப்பினரை அடித்துவிட்டார். அவர் அந்த கேரக்டராகவே மாறியிருந்தார். உடனே அவரை பிக்ஸ் செய்தோம்” என்றார்.
படத்தில் பிரபாகரன் (விஜயகாந்த்) நண்பராக சரத்குமார் நடிக்கிறார். அதுவரையில் வில்லனாகவும், இரண்டாவது நாயகனாகவும் நடித்து வந்த அவருக்கு இதில் முக்கிய வேடம். அவரும் வனத்துறை அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.
அவரது காதலி பூங்கொடியாக – பழங்குடி இன பெண்ணாக வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அழகு, அற்புத நடிப்பு. அதுவும் காதலனுடன் நெருக்கமான காட்சியில் கொள்ளை கொள்கிறார்.
இந்த கதாபாத்திரத்தில் முதலில் சில நாட்கள் நடித்தவர் சரண்யா பொன்வண்ணன்தான். “காடு மலை எல்லாம் ஏறி நடிக்க முடியாது என விலகிவிட்டார்” என்று மன்சூர் அலிகான் ஒரு விழாவில் கூறினார். அதே நேரம், “செக்ஸியான அந்த கதாபாத்திரத்தை விரும்பாமல் விலகிவிட்டார்” என்றும் சொல்லப்படுகிறது.
விஜயகாந்தின் தாயாக நடித்த காந்திமதி, மனைவியாக ரூபினி, அமைச்சராக வரும் வி.எம்.ஜான், இன்னொரு கடத்தல்காரராக வரும் லிவிங்ஸ்டன் என்று பலரது பாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எம்.என். நம்பியாரும் முக்கிமான பாத்திரத்தில் வருகிறார்.
படத்தில் ஈர்க்கும் முக்கிய விசயம்.. லொகேசன்!
பரந்த காடு, பிரமிக்க வைக்கும் அருவி….!
இதற்காக காரிலேயே இந்தியா முழுதும் 40 ஆயிரம் கி.மீ. சுற்றி வந்தார் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி. இறுதியில் கேரளாவின் சாலக்குடி காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை நடத்தினார். அங்கு படக்குழுவைச் சேர்ந்த இருவர் மரணடைந்தனர்.
ஆகவே தயாரிப்பாளர் இப்ராகிம்ராவுத்தர் தமிழ்நாட்டின் நெல்லை பகுதிக்கு படப்பிடிப்பை மாற்றினார். இங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் ஆர்.கே.செல்வமணி பிடிவாதமாக, மீண்டும் படப்பிடிப்பை சாலக்குடியிலேயே நடத்த வேண்டும் என சொல்ல.. அங்கு லொகேசன் மாறியது.
இந்த படத்துக்கு முதலில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் ஏ.ரமேஷ்குமார். சில நாட்களில் அவருக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியுடன் மனஸ்தாபம் ஏற்பட… சொல்லிவிட்டு விலகிவிட்டார். ஆனாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை. படத்தின் டைட்டிலில், ஏ.ரமேஷ்குமாருக்கும் நன்றி கார்டு போட்டிருக்கிறார்கள். உயர்ந்த உள்ளம்!
அதன் பிறகு படம் முழுமைக்கும் ஒளிப்பதிவு செய்தவர் ராஜராஜன். காடு, அருவி ஆகியவற்றை கண் முன் நிறுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக ரயிலைத் துரத்திச் செல்லும் குதிரைகள்… அதைத் தொடர்ந்த சண்டைக் காட்சி.. அசத்தல்!
இசை : இளையராஜா .
படத்தில் இரண்டே பாடல்கள்தான். இதில், ‘பாசமுள்ள பாண்டியரே..’ பாடலை கங்கை அமரன் எழுத, மனோ, சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.
‘ஆட்டமா தேரோட்டமா..’ பாடலை, பிறைசூடன் – சுவர்ணலதா பாடியுள்ளனர்.
இரண்டு பாடல்களையும் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கிறோமே…! பிறகு தனியாகச் சொல்லவா வேண்டும்?
இளையராஜா, சில நிமிடங்களில் டியுன் போடக்கூடியவர். ஆனால் ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு இருபது டியுன்கள் போட்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு திருப்தி இல்லை.
“நான் ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்கிறேன். எனக்கு மெகபூபா மாதிரி ஒரு பாடல் வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
அதன்பின்னர் இளையராஜா டியூன் போட்ட பாடல் தான் ஆட்டமா தேரோட்டமா!
பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் இளையராஜா. குறிப்பாக விஜயகாந்தின் அறிமுகக் காட்சி, அவர் காடுகளுக்குள் பயணிக்கும் காட்சி, வீரபத்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு என குறிப்பிடத்தக்க பிரத்யேக பின்னணி இசையை படம் முழுக்க கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார்..
வசனம்: லியாகத் அலிகான்
“உனக்கு யாருய்யா அதிகாரம் கொடுத்தது?”
”நானே எடுத்துக்கிட்டேன்!
– லியாகத் அதிரடிக்கு ஒரு துளி உதாரணம் இது.
(ஆனால் இரு இடங்களில், “கற்பு போச்சுன்னா யாருய்யா கொடுப்பா” என்று வரும் வசனங்கள், “வேதம் படித்த ஐயர் தப்பு செஞ்சா இரு மடங்கு தண்டனை.. இந்திய சட்டமே மனுதர்மப்படிதான் அமைஞ்சிருக்கு..” என்கிற வசனங்கள் எல்லாம் அறியாமை!)
சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்
காவல் நிலையத்தில் நடக்கும் சண்டை, காட்டில் நடக்கும் சண்டை, ரயில் சண்டை என பலவித சண்டைக் காட்சிகளில் தூள் பறத்தி இருக்கிறார் சுப்பராயன்.
நடனம் சலீம்
ஆட்டமா தேரோட்டமா பாடலைவிட வேறு என்ன சொல்வது.. அற்புதம்!
ஜே.கே.வில் கலை இயக்கம், ஜி. ஜெயச்சந்திரன் – வி. உதயசங்கர் ஆகிய இரட்டையர்களின் படத்தொகுப்பு(ம்), படத்துக்கு ப லம்.
முப்பத்திநான்கு வருடங்களுக்கு முன்பே இப்படத்தில் பல புதிய யுக்திகளை கையாண்டு இருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.
கதையிலுள்ள முக்கியப் பிரச்சனை, வில்லன் பின்னணி, களத்தில் இருக்கிற வினோதமான அம்சங்களே முதல் இருபத்தியைந்து நிமிடங்களுக்கு வரும். அதன் பிறகே கதாநாயகனின் என்ட்ரி.
அதே போல வில்லன் இறந்த பிறகும் படம் தொடரும்.. சுவாரஸ்யம் குறையாமல்.
முக்கியமாக பாராட்ட வேண்டியது…
“காட்டில் வாழும் வீரபத்திரனுக்கு பணத்தேவை இல்லை. அவனை வைத்து நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான் சம்பாதிக்கின்றனர். அவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்” என்கிற கருத்து.
அதே நேரம், கற்பு, மனு நீதி என வலியுறுத்துவது தேவையில்லாதவை.
இந்தப் படம் வெளியான போது, அதற்கும் வெகு காலத்துக்கு முன் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் வீரப்பன் படம்தான் போலீசிடம் இருந்தது. அதுதான் பத்திரிகைகளிலும் வரும். பின்னாட்களில்தான், பத்திரிகையாளர் சிவசுப்ரமணியன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் வீரப்பனை சந்தித்து படம், வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
ஆனால் நிஜ வீரப்பன் போலவே, படத்தில் வீரபத்திரன் கதாபாத்திரத்துக்கு பெரிய மீசை, அனைவருக்கும் ராணுவ உடை… இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.
அதற்கு, நேற்று விடை அளித்து இருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அதாவது, இந்தப் படம் வீரப்பனை இழிவு செய்கிறது ஆகவே ரீ ரிலீஸ் செய்யக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ஆர்.கே.செல்வமணி, “வீரப்பனை குறைத்து மதிப்பிடவில்லை. படம் எடுக்கும் முன்பு அவரை சந்தித்தேன்” என்று தெரிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில்.. 1991 சம்பவங்களை சமீபத்தில் எடுத்த புதுப்படம் போல பிரம்மாண்டம் குறையாமல் வியக்க வைக்கிறது கேப்டன் பிரபாகரன்.
– டி.வி.சோமு
