இளையராஜா இப்படி செய்யலாமா?: எஸ்.பி.பி. ரசிகர்கள் ஆதங்கம்!
‘மக்கள் மனதில் பதிந்துவிட்ட மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நண்பரான இசையமைப்பாளர் இளையராஜா இப்படி செய்யலாமா?’ என எஸ்.பி.பி. ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் இளையாராஜாவும் திரைத்துறைக்கு வரும் முன்பே மேடைக் கச்சேரிகள் பலவற்றை இணைந்து நடத்திய நண்பர்கள். இருவரது கூட்டணியில் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தன.
இந்நிலையில், தனது இசை அமைப்பில் உருவாகிய பாடல்களை மேடையில் பாடினால், தனக்கான காப்பிரைட் தொகை அளிக்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் இளையாராஜா.
இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் அமெரிக்காவில் மேடைக் கச்சேரிகள் நடத்தி வந்த எஸ்.பி.பி., “இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.
என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். ‘எஸ்.பி.பி.50’ என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம்.
கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன்!” என்று வருத்தத்துடன தெரிவித்தார்.
மேலும், “இந்த விஷயம் பற்றி எவரும், எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்” என்றும் விரக்தியில் தெரிவித்தார்.
அதன் பிறகு மேடையில், இளையராஜா இசையில் தான் பாடிய பாடல்களை எஸ்.பி.பி. பாடுவதில்லை.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் எஸ்.பி.பி. அனுமதிக்கப்பட்டார். அப்போது இளையாராஜா, ‘மீண்டுவா, பாலு!’ என உருக்கத்துடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எஸ்.பி.பி. மறைந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியதாக, படம் ஒன்றை இளையராஜா வெளியிட்டார்.
மேலும், “பாலு.. எங்கே போனே கந்தர்வர்களுக்காக பாடுவதற்கு போயிட்டியா.. சொல்றதுக்கு வார்த்தையில்லே.. என்ன சொல்றதுன்னே தெரியலை..!” என்று உருக்கமாக பேசி வீடியோவை வெளியிட்டார்.
தவிர, எஸ்.பி.பி.க்கு இசையஞ்சலி செலுத்தும் விதமாக, பாடல் ஒன்றையும் இளையராஜா வெளியிட்டார். ஆனால் இதையும் காப்பிரைட் உரிமையின் கீழ் பதிவு செய்துள்ளார்.
“இதனால் பிறர் இந்த வீடியோவை பகிரவோ, மேடைகளில் பாடவோ முடியா நிலை ஏற்பட்டுள்ளது!” என்று எஸ்.பி.பி. ரசிகர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான கோடங்கி (எ) ஆபிரகாம் லிங்கன், தனது முகநூல் பதிவில், “இசையால் நண்பன் பாலுவுக்கு அஞ்சலி என இசைஞானி இளையராஜா ஒரு அஞ்சலி ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இது இசை ஆல்பம் அல்ல. ஆனால் இதையும் காப்பிரைட் சட்டத்தில் இணைத்துள்ளார் இளையராஜா.
ஏற்கனவே காப்பிரைட் சிக்கலில்தான் உயிர் நண்பனான எஸ்.பி.பி உடனான தோழமையை இழந்து நீண்ட பஞ்சாயத்துக்கு பின் இப்போது தான் மீண்டும் நட்பு துளிர்த்தது உலகம் அறியும்.
ஆனால், அப்படிப்பட்ட உயிர் நண்பன் பாலு மறைவுக்கு இளையராஜா வெளியிட்ட அஞ்சலி ஆடியோவுக்கு கூட காப்பிரைட் கிளைம் கேட்கிறது ஒரு நிறுவனம்.
மறைந்த எஸ்.பி.பி., தொடர்பான அஞ்சலி விஷயங்களை பயன்படுத்த அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள்.
அப்படி இந்த அஞ்சலி இசைக்குக்கூட வியாபார நோக்கில் காப்பிரைட் போட்டு வெளியிட்டு காசு பார்க்கும் அவலத்தை என்ன சொல்வது!” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
“அஞ்சலி இசைப்பாடலுக்குக் கூடவா, பண ரீதியான காப்பிரைட் விவகராத்தை இழுக்க வேண்டும்? இளையராஜா இப்படி செய்யலாமா?” என பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.