“நீட் மூலம் உயிர்களை பறித்ததற்காகவே பாஜகவை அகற்ற வேண்டும்!”:  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முழக்கம்

“நீட் மூலம் உயிர்களை பறித்ததற்காகவே பாஜகவை அகற்ற வேண்டும்!”:  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முழக்கம்

“நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை பாஜக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நீட் தேர்வைக் கொண்டு உயிர்களைப் பறித்ததற்காகவே பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றியாக வேண்டும்” என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், முதுநிலை நீட் தேர்வுக்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண் பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை இடங்கள் அதிகமாக காலியாக இருப்பதால்இதுபோன்று அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:

‘நீட் தேர்வின் பலன் பூஜ்யம்தான் என்பதை மத்திய பாஜகஅரசே ஒப்புக் கொண்டு இருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்யம்தான் என்று வரையறுப்பதன் மூலம் நீட் என்றால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பதில் தகுதி என்பதற்கு பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். கோச்சிங் சென்டர்களில் சேருங்கள். நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.

ஆக, நீட் – பூஜ்யம் என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கின்றனர். நீட் என்ற பலி பீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறித்ததற்காகவே இந்த பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும்’ –  இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Posts