சிம்பு ‘பீப்’ பாடலும், சீமான் ‘பீப்’ செயல்களும்! ஒப்பீடு!
டி.வி.சோமு பக்கம்:
‘ஆபாச – அருவெறுப்பான பேச்சு’ என்றாலே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நினைவுதான் வரும். அவரது பல ஆடியோக்கள், வீடியோக்கள், மேடைப்பேச்சுக்கள், செய்தியாளர் சந்திப்புகள் இதை உறுதிப்படுத்தும்.
ஆனால் ஒரே ஆடியோவில், அதீத அருவெறுப்பான நபர் என்கிற முத்திரையை பெற்றவர் நடிகர் சிம்பு. அது பேச்சு அல்ல, பாடல்!
2015ம் ஆண்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிரவைத்த சம்பவம் அது. அதுவரையில் இரட்டை அர்த்த திரைப்பாடல்கள் பலவற்றை கேட்டு வந்த தமிழ்த்திரு நாட்டு மக்களுக்கு, நேரடியான ஒரே அர்த்த பாடல் ஒன்றை பாடி அளித்தார் சிம்பு.
இணையத்தில் வெளியான அந்த பாடலில் பெண் உறுப்பை கொச்சையாகச் சொல்லும் ஒரு வார்த்தையை சிம்பு பாடியிருப்பார். அந்த இடத்தில் மட்டும், ‘பீப்’ ஒலி வைத்திருப்பார்கள். அதனால், ‘பீப் பாடல்’ என்ற திருநாமம் பெற்றது. ஆனாலும் பீப் ஒலியில் இருந்த அந்த கொச்சை வார்த்தையை அனைவரும் அப்பட்டமாக அறிய முடிந்தது.
இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள் சிம்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. அவரது படத்துக்கு செருப்பு மாலை; சாணிக்கரைசல் அபிசேகம்.. அவரது உருவ பொம்மை எரிப்பு என பரபரப்பு பற்றியது.
சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.
சிம்பு மற்றும் இசை அமைத்த அனிருத் மீது ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை காவல்துறையில் அளித்தனர். சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடமும், டி.ஜி.பி.யிடமும் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி புகார் அளித்தார்.
சிம்பு, அநிருத் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த நேரத்தில் கனடாவுக்கு சென்றிருந்த அனிருத், அங்கேயே தங்கிவிட்டார். இங்கே இருந்த சிம்பு தலைமறைவானார்.
அவர் மீதான எப்.ஐ.ஆர். – ஐ ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கம்போல, விளக்கம் அளிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை கிட்டதட்ட இரு வாரங்கள் ஒத்திவைத்தது.
அப்போது கனடாவில் இருந்த அனிருத், ஒரு ட்விட் செய்தார். அதில், “குறிப்பிட்ட பாடலை நான் எழுதவும் இல்லே.. இசையமைக்கவும் இல்லை” என்றார்.
அதோடு, “நான் பெண்களை மிகவும் மதிப்பவன்” என்று ஒரே போடாகப்போட்டு, கனடாவிலேயே கவிழ்ந்தடித்துவிட்டார்.
ஆனால் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தன் வழக்கமான எதுகை மோனை + பிள்ளை பாசத்துடன், “இதை சதி என்று சொல்லவா இல்லை விதி என்று சொல்லவா? கூடா நட்பு கேடாய் முடிந்தது!” என்று அழுதார். அதாவது, அனிருத்தால்தான், தன் அப்பாவி(!)ப்பையன் சிம்பு, பிரச்சினையில் சிக்கிக்கொண்டார் என்று அர்த்தம்.
ஆனால் அப்பாவின் தப்புத்தாளங்களுக்கு, வேறொரு விதத்தில் தப்புத்தாளங்களோடு பதிலடி கொடுத்தார் சிம்பு.
அவர், “இந்தப் பாட்டுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது நான் பாடிய பாட்டுதான். இது மாதிரி நிறைய்ய பாடியிருக்கேன்” என்று ஏதோ சாதனை படைத்ததைப் போல் சொன்னார்.
மேலும், “இந்தப் பாட்டுல அப்படி நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்? தவிர, நான் எனக்காக வச்சிருந்த பாட்டை, யாரோ திருடி, ரிலீஸ் பண்ணிட்டாங்க.. இதுக்காக ஏன் எல்லாரும் பிரச்சினை பண்றாங்க..?” என்று ‘அப்பாவியாக’ கேட்டு அதிரவைத்தார்.
ஆனால் அவர் அப்பா டி.ஆர் அசரவில்லை. அதற்கு முன்பாகவே, தனது மகன் நயன்தாராவின் உதட்டைக் கடித்துவைத்து அதை போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுதும் ஒட்டியபோதே அசராத ஏ.ஏ.ஏ. (அன்பான அறிவான அற்புதமான) தந்தை அவர். அப்போதே, “என் மகன் தைரியமானவன்.. எதையும் வெளிப்படையாக செய்வான்” என்று முடியை சிலுப்பியவர்.
ஆகவே தானே பீப் பாடலை பாடியதாக சிம்பு சொல்லியும் உடலை உதறிக்கொண்டு அடுத்தவேலையைப் பார்க்க போய்விட்டார், டீ.ஆர்..
சிம்புவின் அம்மா உஷாதான் பாவம், கலங்கிவிட்டார்.
அவர், “எங்க மகன் என்ன தவறு செய்தாரு… ப்ரன்ஸோட சேர்ந்து விளையாட்டா பாடியிருக்காரு… அதை பீப் போட்டு மூடி இருக்காரு.. தேவையில்லேனு தூக்கியும் போடடுட்டாரு! யாரோ வேண்டாதவங்க திருடிட்டு போயி வெளியிட்டுட்டாங்க. அவங்களை பிடிக்கச் சொல்லி போலீஸ்ல புகார் கொடுத்தோம். ஆனா, எங்க சிம்பு மேல கேஸ் போட்டுருக்காங்க.. அவரு சினிமாவுல முன்னேறுறது பிடிக்காம சதி பண்றாங்க.. ” என்று கண்ணீர் வீட்டு மக்களை அதிரவைத்தார்.
அதோடு, “பேசாம நாங்க இந்தியாவ விட்டே போயிடறோம்.இந்த மீடியாக்காரங்கள பாருங்க.. 24 மணி நேரமும் வீட்டு வாசல்ல கேமராவும் கையுமா நிக்கிறாங்க! சொந்த வீட்டு வாசல்ல நிம்மதியா ஒரு கோலம் போட முடியல!” என்றார்.
ஆனல் மீடியா பீப்புள்ஸ் அதிரவில்லை. தொடர்ந்து அவர் வீட்டில் மைக், கேமராவுடன் காத்திருந்தார்கள்.
இதற்கிடையே சிம்பு மீது பாமக மற்றும் விசிக சார்பில் கொடுக்கப்பட்ட புகார்கள் (டி.ஆர். மறைமுக வேண்டுகோளால்) வாபஸ் பெறப்பட்டன. ஆனால் ஜனநாயக மாதர் சங்கம், பால் முகவர்கள் நலச்சம் ஆகியவை கொடுத்த புகார்கள் அப்படியே இருந்தன.
ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது. மீண்டும் செய்தியாளர் முன், தலை சிலுப்பலும் ஆனந்தக் கண்ணீருமாகத் தோன்றிய டி.ஆர். “ஆபாசம் என்பது வேறு; கெட்ட வார்த்தை என்பது வேறு!” என்று தான் படித்த எம்.ஏ. லிட்டரேச்சர் அறிவை வெளிப்படுத்தி அசரடித்தார். அதோடு, “ஒரு பெட்டி கேஸ் விசயத்தை பெரிய விசயமாக்கிவிட்டார்கள். பாட்டுல சிம்பு என்ன கெட்ட வார்த்தை பயன்படுத்தினார் என்பதைக் கூட பெட்டிசனில் எழுத முடியவில்லை. அதாவது யாருக்கும் தெரியவில்லை. எனவேதான் அவருக்கு முன் ஜாமீன் கிடைத்தது ” என, தான் படிக்காத பி.எல். அறிவையும் வெளியே தள்ளினார்.
ஊர் உலகத்துக்கே தெரிந்த அந்த, ‘பீப்’ வார்த்தை துறை சார்ந்தோருக்குத் தெரியவில்லை போலும்!
டி.ஆருக்கு, ‘சிறந்த பக்திமான்’ என்ற முகமும் இருக்கிறது அல்லவா… “காஞ்சீபுரம் போயி மூன்று கோவில்கள்ல சாமி கும்பிட்டேன்; யாகம் வளத்தேன். பெசன்ட் நகர் சரச்சுக்குப் போயி பிரேயர் பண்ணேன்; அண்ணா சாலை தர்காவுல தொழுதேன்… இதோ.. நீதி கிடைச்சிருச்சு” என சொல்லி, மும்மத கடவுள்களையும் சங்கடத்துக்கு உள்ளாக்கினார்.
‘அருவெறுப்பான வார்த்தை கொண்ட அந்த பாடலை, கவன ஈர்ப்புக்காக சிம்பு செய்திருக்கிறார்’ என்றே பலரும் நம்பினர்.. பேசினர், எழுதினர்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கவன ஈர்ப்புக்காக இவ்வளவு கொச்சையாக..வக்கிரமாக.. அருவெறுப்பாகக் கூட சிந்திப்பார்களா.. அதை பொது வெளியில் பகிர்வார்களா… என்று தோன்றியது.
இப்படிப்பட்ட நபர்களின் மனநிலை என்ன, மனப்பிரச்சினை கொண்டவர்களா என மனோதத்துவ நிபுணர் ஒருவரிடம் கேட்டு, அப்போது நான் ஆசிரியராக இருந்த patrikai.com இதழில் வெளியிட நினைத்தேன்.
ஐடியாக தோன்றிய அடுத்த விநாடி, பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்களை தொடர்புகொண்டேன்.
இதோ அவரை நான் எடுத்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி…
“பிறர் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணத்தமனதில் வைத்து செயல்படுவவரே சராசரியான மனிதராக அறியப்படுகிறார். அந்த எண்ணம் இல்லாத.. சிம்பு, அனிருத் போன்றவர்களின் மனநிலை என்ன.. இன மன ரீதியான பாதிப்பா?”
“இது மனநோய் அல்ல. அப்படிச் சொல்லி ஓர் இழிசெயலில இருந்து தப்பித்தல் இன்னும் கேவலம். இது குறித்து எவ்வித வெட்கமோ குற்ற உணர்வோ இல்லை என்பது, இவர்களது தீவிர சுயநல வெறியையும் சமூகம் குறித்த அலட்சிய ஆணவத்தையுமே காட்டுகிறது.
இது வெறும் விடலைத்தன வெளிப்பாடு இல்லை. அவர்களின் அடிப்படை, இழி குணமாகவே தெரிகிறது.
பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் தனக்குச் சரியெனத் தோன்றுவதைச் செய்பவர்கள் பலர் உண்டு, அப்படிச் செய்த காரியத்தால் யாருக்கும் பாதிப்பு வராமல் இருக்க நினைப்பவரே நெறி பிறழாதவர், இவர்கள் அப்படியல்ல. ஆனால் இவர்கள் அப்படி அல்ல.
இது வெறும் ஒரு கவன ஈர்ப்போ விளம்பர உத்தியோ அல்ல, மனதில் இருக்கும், வக்கிரத்தின் ஆணவம் கலந்த வெளிப்பாடு!”
“தன்னை அதீத செக்ஸியான ஆளாக வெளிப்படுத்திக்கொள்வது என்பதும் ஒரு மேனியாக் என்பதாக படித்த நினைவு. அது உண்மையா?”
“நீங்கள் குறிப்பிடும் மனநிலையின் அடிப்படை அந்த மனிதனின் சுயமதிப்பீட்டுக் குறைவால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை. இதற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை!”
“குறிப்பிட்ட இந்த பாடல், பெண்கள் மீது வக்கிரமான பாலியல் தாக்குதலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதைக் கேட்கும் இளைஞர்களுக்கு மன ரீதியாக பாதிப்பு ஏற்படுமா?”
“இது பெண்களைப் பற்றி இவர்கள் என்ன எடைபோட்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இதைக் கேட்பதால் இளைஞர்களுக்கு மனரீதியாய் பாதிப்பு வராது. இவ்வகை வக்கிரத்தோடு ஒத்த கருத்துடையவர்கள் ரசிப்பார்கள், பிற இளைஞர்க்கு இது ஒர் அருவெறுப்பையே உருவாக்கும்.
“சிம்பு போன்றவர்களுக்கு என்ன வகையில் சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது.. அது நோயாக இருந்தால்..!”
“இது நோயல்ல சமூக அவமதிப்பு, திமிருடன் வரும் வக்கிரம். இது சிகிச்சையளிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல தண்டிக்கப்படவேண்டிய ஒன்று.”
(பின்குறிப்பு : இந்த நேரத்தில் இந்த பேட்டி ஏன் என்று நினைக்கிறீர்களா… சிம்பு என வரும் இடங்களில் சீமான் என்று பொறுத்திப் பாருங்கள், புரியும்!
– டி.வி.சோமு

