‘BEEP’ : சிம்பு பாட்டு மாதிரி சர்ச்சை படமா?”: ஹீரோ ராகவ் உடைத்த ரகசியம்!

‘BEEP’ : சிம்பு பாட்டு மாதிரி சர்ச்சை படமா?”: ஹீரோ ராகவ் உடைத்த ரகசியம்!

‘எந்திரன்’, ‘நஞ்சுபுரம்’, ‘வேலாயுதம்’, ‘கல்யாண சமையல் சாதம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ராகவ். இவரது நடிப்பில் அடுத்ததாக ‘பீப்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தை, இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ளார்.

ஆபாச கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பாடலைப் பாடி, அந்த வார்த்தைகள் வரும் இடங்களில் பீப் சத்தத்தை ஒலிக்க விட்டு, ஒரு பாடலை வெளியிட்டார் சிம்பு. இது பெரும் சர்ச்சையானது. பல இடங்களில் அவர் மீது வழக்கு போடப்பட்டது. அப்போதுதான், தமிழ்நாட்டு மக்களுக்கு பீப் என்ற வார்த்தை தெரியவந்தது.

ஆகவே, “படத்தின் தலைப்பை பீப் என வைத்து இருக்கிறீர்களே..” என்று கேட்டோம்.

பதறிய அவர், “அய்யய்யோ.. இது வேற விஷயம் சார்” என விளக்க ஆரம்பித்தார்.

“நாம் ஒரு விஷயத்தைக் கேட்க வேண்டாம் அல்லது கேட்கக் கூடாது என அதை கட் பண்ண நினைத்தால் அந்த இடத்தில் ஒரு ‘பீப்’ போடுகிறோம். அதாவது துண்டிக்கப்பட்ட குரல்கள் என்று சொல்வார்களே அதுபோல! அப்படி சொல்லப்படாத சஸ்பென்ஸ் விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. அதனால்தான் ‘பீப்’ என டைட்டில் வைக்கப்பட்டது” என்றார்.

தொடர்ந்து படம் குறித்து பேச ஆரம்பித்தார்: “படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பைக் குறிவைக்கும் ஒரு க்ரைம் திரில்லர் இது. படம் பார்க்கும் ரசிகர்கள், அவர்களே கதைக்குள் இறங்கி சில விஷயங்களைக் கணக்கு போட்டு கண்டுபிடிப்பது போன்ற ஒரு சுவாரசியம் இந்த படத்தில் இருக்கிறது.ஒரு புதிய இயக்குநரின் படம் என்பதால் அதை அலட்சியமாக ஒதுக்காமல் படத்தில் கொஞ்ச நேரமாவது ஊன்றி கவனித்தால் நிச்சயமாக படம் உங்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும்.

இதில் இரண்டு பாடல்கள் தான் படத்தில் இருக்கின்றன. க்ரைம் திரில்லர் என்பதால் இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை படத்திற்கு ஒரு ஆன்மாவாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்தி செல்வதில் அதற்கு முக்கிய பங்கு இருக்கிறது” என்றார்.

அடுத்து தனது கேரக்டர் பற்றி பேசிய ராகவ், “படத்தின் ஹீரோவுக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கு என்றாலும் அவர் சூப்பர் மேன் கிடையாது. நான்கு டிஜிட் பெருக்கல் கணக்கைக் கூட சிலர் உடனடியாக விடை சொல்கிறார்களே.. அதுபோல இந்த ஹீரோவுக்கும் ஒருவிதமான சூப்பர் பவர் இருக்கு. அதேசமயம் சூப்பர் பவர் என்பது நார்மலான ரியல் லைஃபில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இதில் அழகாக உருவாக்கி இருக்கிறோம்.

என்னுடைய கதாபாத்திரத்தின் மேனரிசம் எதுவுமே எனது சொந்த உருவாக்கம் இல்லை. அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குநர் உருவாக்கியதை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். படத்தை பார்த்த என் மனைவியே உன்னை வேறு மாதிரி காட்டி இருக்கிறார் இயக்குநர் என்று ஆச்சரியப்பட்டார்.

ஒரு முக்கிய காட்சிக்காக 17 வது மாடியில் இருந்து கயிறு கட்டி பத்தாவது மாடி வரை இறங்குவது போல படமாக்கினார்கள். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மொத்தத்தில் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

Related Posts