க/பெ ரணசிங்கம் பேசப்படும் அரியநாச்சி!
சென்னை; கொரொனா நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் இதுவரை தமிழகத்தில் திறக்கப்படவில்லை.
இதனால் பல பெரிய படங்களான பொன்மகள் வந்தாள், பெண்குயின், போன்ற படங்கள் OTT தளத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து தற்போது விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள க.பெ. ரணசிங்கம் படமும் OTTயில் வெளிவந்துள்ளது.
தற்போது வெளிவந்திருக்கும் க/பெ ரணசிங்கம் மக்கள் பிரச்சினையும் ஒரு மனைவியின் பிரச்சினையையும் ஒன்றாக இணைத்து சிந்திக்கவும், ரசிக்கவும் செய்து இன்றைய அரசியல் நிலவரத்தை கதையில் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் விரும்பாண்டி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கதை சுருக்கம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையில் தள்ளாடும் ஒரு கிராமத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஒரு இளைஞனாக வருகிறார் விஜய் சேதுபதி. இவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வருகிறது. தனது கணவர் விஜய் சேதுபதியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர போராடுகிறார் ஐஸ்வர்யா. அந்தப் போராட்டம் பத்து மாதங்கள் வரை நீடிக்கிறது. கடைசியில் அவரது போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகன் விஜய் சேதுபதி கதையுடன் ஒன்றி நடித்திருக்கிறார். கதையில் வரும் முதல் பாதியில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் இயல்பான கிராமத்துக் காதல் காட்சிகள் அழகாக கண்முன் காட்சி படுத்திருக்கிறார் இயக்குநர். மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் துடிப்பான இளைஞராக விஜய் சேதுபதி. ஆனால் இவரை விடவும் இந்த படத்தில் அதிகம் பேசப்படுகிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
தனது கணவர் ரணசிங்கத்தின் உடலை பல போராட்டங்கள் வந்தாலும் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் விடாது போராடும் சிங்கப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு க.பெ.ரணசிங்கம் பெயரைவிட கதாபாத்திரப் பெயரான அரியநாச்சி என்றே வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறார் ஐஸ்வர்யா. அரியாநாச்சி படத்தில் வாழ்திருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா தவிர படத்தில் ரங்கராஜ் பாண்டே மாவட்ட கலெக்டராக நடித்திருக்கிறார். விஜய்க்கும், ஐஸ்வர்யாவுக்கும் அவர் உதவி செய்வது போலவே ரசிகர்களுக்கு தோன்றினாலும் படத்தின் முடிவில் அவரும் சேர்ந்து அவர்களுக்கு துரோகம் செய்கிறவராக தோன்றுகிறது.
விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் பவானி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். காட்சிகளின் அழுத்ததைக் கூட்டியிருக்கிறது ஜிப்ரான் பின்னணி இசை. பாடல்கள் பேசப்பட்டிருந்தால் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும். ராமநாதபுர வறட்சியை தெளிவாக காட்சியில் பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். இந்த படம் ஆக்டோபர் 2ஆம் தேதி ஒடிடியில் வெளிவந்தது. இந்தப் படத்தை முதல் நாள் மட்டுமே 70 ஆயிரம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
இதன் மூலம் முதல் நாள் ரூ 1.4 கோடி வரை வசூல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-யாழினி சோமு