“அனுஷ்காவுக்கு இருக்கலாம்.. செலினுக்கு கூடாதா?”; இப்படி ஒரு கண்டனம்!

மெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் உருவாக்கியுள்ள, கொரோனா தடுப்பு குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பெற்றுள்ளார். இவரது பூர்வீகம், தமிழகத்தின்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள துளசேந்திரபுரம் ஆகும்.

இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் பலரும், “ செலின் தனது பெயருடன் சேர்த்திருக்கும்  கவுண்டர் என்கிற சாதி பெயரை நீக்கலாமே!” என கேள்வி எழுப்பி இருந்தனர்.  

இதற்கு அவர், “என் தந்தையே எனது பெயருடன் கவுண்டர் என்பதைச் சேர்த்தார். அது என்னுடைய வரலாறு. என்னுடைய அடையாளத்தின் ஒருபகுதி. நான் திருமணமான பின்னரும் கூட என்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.  இனியும் மாற்றமாட்டேன்!” என்றார்.

இதற்கு சிலர், “கவுண்டர் சாதியை பெருமையாக பெயருக்குப் பின்னால் சேர்த்திருக்கிறீர்கள்.  அமெரிக்கரை மணந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால், இதுவே தமிழகத்தில் இருந்துகொண்டு வேறு சாதி அல்லது இனத்தைச் சேர்ந்தவரை மணந்தால் உங்களை ஆணவக்கொலை செய்திருப்பார்கள்!”  என்று எழுதினர்.

இதையடுத்து சர்ச்சை ஏற்பட்டு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், “எங்கோ இருக்கும், செலின் கவுண்டர் பெயரைக் குறித்து ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். தமிழ் படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களால் சம்பாதிக்கும் நடிகைகள் பலர் தங்கள் சாதிப் பெயரை பெருமையுடன் சேர்த்துக் கொள்கின்றனரே..!” என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.

இப்படி கூறுவோர், “அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா ரெட்டி, மேக்னா நாயுடு, லட்சுமி மேனன், மாளவிகா நாயர், பார்வதி மேனன், ஜனனி அய்யர், அக்ஷரா கவுடா, அபர்னா நாயர், நவ்யா நாயர், அருந்ததி நாயர், காஜல் அகர்வால், மனீஷா யாதவ், கீர்த்தி ஷெட்டி, நித்யா மேனன், சமீரா ரெட்டி, சஞ்சனா சிங், ஷில்பா ஷெட்டி, ஸ்வேதா மேனன், யானா குப்தா, லட்சுமிமேனன், ஸ்வேதா மேனன், ரேணுகா மேனன், ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார்.. என்று பல நடிகைகள் இருக்கிறார்களே!” என்கின்றனர்.

இதில் ஆறுதலான விசயம்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த த்ரிஷா, சினேகா, விஜயலட்சுமி, மீனா, தன்ஷிகாவோ, வரலட்சு, ப்ரியா ஆனந்த் போன்றவர்கள் சாதி அடையாளத்தைச் சேர்ப்பதில்லை.

தவிர, சாதி அடையாளத்தைச்  சேர்க்காத  நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் தான் இன்றுவரை கோடிகளில் சம்பளம் வாங்கும் நெம்பர் ஒன் நடிகைகளாக இருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகைைப் பொறுத்தவரை நடிகர்கள் தங்கள் சாதிப் பெயரை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என்று  சில இயக்குநர்கள் தங்களது சாதிப் பெயரை சேர்த்தே வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இதில், படங்கள் இயக்கத் தொடங்கியபோது தன்னை ஒரு மலையாளியாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல் கெளதம் என்ற பெயரை மட்டுமே போட்டு வந்தார். கொஞ்சம் வளர்ந்து பிரபலமானவுடன் மேனனை துணைக்குச் சேர்த்துக் கொண்டார்.

இது குறித்து முன்பே ஒரு படவிழாவில், இயக்குநர் கரு பழனியப்பன் பேசினார்.

‘உறுமீன்’ என்ற படத்தின் ஆடியோவிழாவில் அவர்,  ”இந்தப் படத்தின நாயகி,  ரேஷ்மிமேனனை குறும்பட காலத்துல இருந்தே நான் பார்த்துக்கிட்டிருக்கேன். அப்பத்திலிருந்து இப்போ வரைக்கும் அவருக்குரிய இடத்துக்கு அவர் வரல. அவரோட இடத்துக்கு வரலேன்னா என்ன அர்த்தம்?

ரேஷ்மிமேனன் தன் பேர்ல இருக்கிற மேனனை கழட்டிட்டாப் போதும். நல்லா வந்தாலும் வந்துடும். ஏன்னா, இந்தியாவுலேயே தமிழ்நாட்டுல மட்டும் தான் இன்னும் பேருக்குப் பின்னால ஜாதியை போடாம இருக்காங்க.

அதுக்குக் காரணம் பெரியார்ன்னு ஒரு கிழவன் கையில மூத்திர வாளியை துக்கிக்கிட்டு தெருத்தெருவா பேசுனதுனால வந்த விளைவு.

ஆனா மேனனை தூக்கினா மாற்றம் வரும்னு நம்புறேன்!” என்று வெளிப்படையாகவே பேசினார்.

இதே போல ஒரு படவிழாவில், இயக்குநர் தங்கபச்சான், “சாதி பெயர்களை சேர்த்துக்கொள்பவர்களை படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது” என தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை கேட்டுக்கொண்டார். இயக்குநர்கள் பாலா, சேரன் போன்றவர்களும் இதே கருத்தை  தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடிகைகள் தங்கள் சாதிப் பெயரை விடுவதாக இல்லை.

-சோமு

Related Posts