அந்தகன்: விமர்சனம்
படத்தில் இரண்டு ஹீரோக்கள்.
நீண்ட நாட்கள் கழித்து அசத்தலா கம்பேக் கொடுத்திருக்கும் பிரசாந்த் ஒருவர்…..
இன்னொருவர்.. மாஸான படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி, மாஸ் +கிளாஸ் ஆக அளித்திருக்கும் இயக்கநர் தியாகராஜன்!
நடிப்பில் பிரசாந்த் அசத்தி இருக்கிறார் என்றால், திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் தியாகராஜன்.
கதைக்கு வருவோம்..
லண்டன் சென்று பியானோ இசைக் கலையில் புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறார் பிரசாந்த். பார்வையற்றவராக வலம் வரம் அவர் மீது பிரியா ஆனந்த்துக்கு காதல்.
இந்த நிலையில், பிரசாந்தை சந்திக்கும் கார்த்திக் தன் திருமண நாளில் வீட்டிற்கு வந்து தன் பாடலை பியானோவில் இசைக்கும்படி கேட்கிறார். குறிப்பிட்ட நாளில் கார்த்திக் வீட்டுக்கு பிரசாந்த் செல்ல.. அங்கே கார்த்திக் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார்.
அவரை கொன்றவர்களுக்கு, பிரசாந்துக்கு பார்வை இருக்கிறதோ… தாங்கள் செய்த கொலையை பார்த்துவிட்டாரோ என்கிற பயம். அதனால் கொடூரமான விசயம் ஒன்றை செய்கிறார்கள்.இதற்கிடையே பிரசாந்த்தை டாக்டர் குழு ஒன்று கடத்திச் சென்று கிட்னி திருட முயற்சி செய்கிறது.
கார்த்திக்கை கொன்றது யார்.. அவர்கள் பிரசாந்தை என்ன செய்ய திட்டமிடுகிறார்கள்.. கிட்னி திருடர்களிடம் இருந்து பிரசாந்த் தப்பித்தாரா.. குற்றவாளிகள் பிடிபட்டார்களா, பிரசாந்துக்கு பார்வை கிடைத்ததா என்பது சுவராஸ்யமான மீதிக்கதை.
இளமைத்துள்ளலுடன் நடித்து உள்ளார் பிரசாந்த். காதல் காட்சிகளிலும் சரி, ஆக்சன் காட்சிகளிலும் சரி அசத்துகிறார்.
வழக்கம் போல் சிறப்பான நடிப்பையும் அளித்து உள்ளார். அதற்கு உதாரணமாக ஒரு காட்சி…
கார்த்திக் சுட்டுக் கொல்லப்பட்டதை பார்த்துவிடுகிறார் பிரசாந்த்… ஆனால் அங்கிருக்கும் சிம்ரன், சமுத்திரகனி ஆகியோரிடம், தான் பார்வையற்றவன் என நடிக்க வேண்டிய நிலை.. கொலையால் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டமல் முகபாவனையை அமைதியாக வைத்துக் கொள்கிறார் பிரசாந்த்.. அற்புதமான நடிப்பு.
அவருக்கு இணையாக மிரட்டுகிறார் சிம்ரன். ரகளையான நடிப்பு. கணவனிடம் அன்பு காட்டுவது போல பேசுவது.. இன்னொரு புறம் காதலனிடம் நேசம் காண்பிப்பது… அன்பாக பேசி பிறகு பிரசாந்த்தை டார்ச்சர் செய்வது.. மிரட்டுகிறார் சிம்ரன்.
அதே போல நாயகி பிரியா ஆனந்த், கார்த்தி, சமுத்திரகனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அவ்வளவாக எடுபடவில்லை. அது குறையாகவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாடல்கள் இல்லாத படமாகவே அந்தகன் வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
ரவி யாதவ் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
2013ல் இந்தியில் வெளிவந்த அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் இது. ஆனால் ஏற்கெனவே சொன்னது போல, படத்தை ரீமேக் செய்யாமல் ரீமேட் செய்து இருக்கிறார் தியாகராஜன்.
மிரட்டும் த்ரில்லர்!