தமிழ்வழி கல்விக்கு ஆபத்து!
தமிழ்வழி பொறியியல் படிப்பை முழுதுமாக நிறுத்திவிட அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
நீண்டகாலமாகவே, “தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை, தமிழில் பயிற்றுவிக்க வேண்டும்!” என்ற கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து, 2010-ம் ஆண்டு தமிழ்வழி பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல் கட்டமாக இயந்திரவியல் பொறியியல் மற்றும் கட்டிடவியல் பொறியியல் பாடப்பிரிவுகள் தமிழில் தொடங்கப்பட்டன.
இதுகுறித்து அண்ணா பல் கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தபோது, “அண்ணா பல்கலைக்கழகத்தின் 12 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் மட்டும் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இங்கு . பிஇ இயந்திரவியல், பிஇ கட்டிட வியல் படிப்புகளுக்கு 1,300 இடங் கள் வரை உள்ளன.
ஆரம்பத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்தனர். ஆனால் காலப்போக்கில் மாணவர் சேர்க்கை குறைந்தது.
கடந்த (2019ம்) ஆண்டில், நூற்றுக்கும் குறைவானவர்களே தமிழ்வழியில் சேர்ந்தனர். அதிகபட்சமாக திருச்சி உறுப்புக் கல்லூரியில் மட்டுமே 40 பேர் சேர்ந்தனர். மற்ற கல்லூரி களில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர் சேர்க்கை நடந்தது. ஆரணி, அரியலூர் உட்பட சில கல்லூரிகளில் ஒருவர்கூட சேர வில்லை. இதனால் சுமார் 1,100 இடங் கள் வரை காலியாகவே இருந்தன.
இதையடுத்து சேர்க்கை இடங்கள் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவும், ஒருவர்கூட சேராத கல்லூரிகளில் தற்காலிகமாக படிப்பை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த வருடம் நூறு பேர் மட்டும் சேர்ந்த நிலையில், இந்த வருடம் அதைவிடக் குறைவாக சேர்ந்தால், தமிழ்வழி பொறியியல் படிப்பை முழுமையாக நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை!” என்கிறது விபரமறிந்த வட்டாரம்.
“எங்களுக்கு உரிய வேலை வாய்ப்பு இல்லை. அதனால் அடுத்தடுத்து மாணவர்கள் சேர தயங்குகிறார்கள்!” என்கின்றனர், தமிழ் வழியில் பொறியியல் படித்த மாணவர்கள்.
உலகமே வியக்கும் பொறியியல் அற்புதமான தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டியவர்கள், தமிழர்கள்தானே! ஆனால், “தமிழ் வழியில் படித்தால் உரிய வேலைவாய்ப்பு இல்லை! ஆகவே மாணவர்கள் சேரவில்லை; முழுதுமாக இந்தக் கல்விவாய்ப்பு மூடப்படும்!” என்பது என்னவொரு கொடுமை!