‘அங்கீகாரம்’ படத்துக்கு அங்கீகாரம் தேவை!: நெகிழ்ச்சியுடன் கோரிக்கை வைத்த டீம்!
முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் ஆண்டனி: “விளையாட்டு வீரர்கள் கிராமப்புறங்களில் சந்திக்கும் போராட்டங்களை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்; இது அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தரும்.”
நடிகை வசுந்தரா: “சினிமாவுக்காகத் தேவையில்லாத மிகைப்படுத்தல்களைச் சேர்க்காமல், வாழ்க்கைக்கு நெருக்கமான முறையில் முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். கே.ஜெ.ஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்; அவருடைய மாற்றமும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைத்தது.”
இசையமைப்பாளர் ஜிப்ரான்: “ஒரு கதைக்குள் மனிதர்களின் உணர்வுகளை இயல்பாகக் கொண்டு வருவது மிகவும் கடினம். அதை இயக்குநர் தென்பாதியான் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் எழுத்து மிகவும் வலுவாக உள்ளது.”
சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்: “புதுமுக ஹீரோ கே.ஜெ.ஆர் மீது எனக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருந்தது. ஒரு தடகள வீரராகத் திரையில் இயல்பாகத் தோன்றுவதற்காக அவர் எடுத்த உழைப்பு, உடல்மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு சாதாரணமானது அல்ல.”
எடிட்டர் தினேஷ்குமார்: “ஸ்போர்ட்ஸ் காட்சிகள் சினிமாத்தனத்தை மீறாமல் இயல்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் அமைந்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.”
தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர்: “இந்தக் கதைக்காக இயக்குநர் நிறைய ஆய்வுகள் செய்தார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காகப் பல இடங்களுக்குப் பயணம் செய்து, மிகுந்த உழைப்பைச் செலவிட்டார்.
நடிகை இசபெல்லா: “அங்கீகாரம்” எனக்கு கிடைத்த முதல் அடையாளம். இதுவரை மேடையேறிப் பேசியதே இல்லை; முதன்முறையாக இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார். என்னை இவ்வளவு அழகாகத் திரையில் காட்டிய எடிட்டர் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத்: படத்தின் முதல் கியூப் (Cube) திரையிடலைப் பார்த்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். இயக்குநரை கட்டிப்பிடித்து, ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என்று உணர்வுப்பூர்வமாகச் சொன்னேன். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் முதல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இயக்குநர் தென்பாதியான்: இந்தக் கதையைச் சொன்னபோது ஒரு பெரிய ஹீரோவின் மூலம் நடக்கவில்லை. ஆனால், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கே.ஜெ.ஆர் முன்வந்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக என் குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தோம். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது.
தயாரிப்பாளர் அருள் முருகன் (குரு-சீடர் பந்தம்): நான் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, இன்றைய கதாநாயகன் கே.ஜெ.ஆரிடம் மேனேஜராகத்தான் என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அன்று மேனேஜராக இருந்த நான், இன்று தயாரிப்பாளராக இந்த மேடையில் நிற்பது அந்த மனிதரின் அர்ப்பணிப்பால் மட்டுமே. எங்களை நம்பி இரண்டு வருடங்கள் உழைத்ததற்கு நன்றி சார்.
தயாரிப்பாளர் & நடிகர் கே.ஜெ.ஆர்: இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை, மீடியம் தான். எனக்குத் தெரிந்த திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே ‘வேறு கதை எடுத்திருக்கலாம், வேறு ஹீரோ நடித்திருக்கலாம்’ என்று பேசினார்கள். ஆனால், இன்று மக்கள் தரும் வரவேற்பு எனக்கு 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப்படத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள், சம்பளம் எதிர்பாராமல் எனக்காகப் பணியாற்றினார்கள். இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன், என்னை நம்பிய இந்தத் தயாரிப்பாளர்களைக் கைவிடமாட்டேன்.
இந்த நிகழ்வு, வெறும் வெற்றி விழாவாக மட்டுமல்லாமல், ஒரு தடகள வீரனின் போராட்டத்தைப் போலவே, படக்குழுவினரின் உழைப்பும் போராட்டங்களும் அங்கீகரிக்கப்பட்ட உணர்ச்சிகரமான களமாக அமைந்தது.

