அதிகாரத்தால் முடக்கப்படும் ‘அங்கீகாரம்’! : நீதியைத் தேடி, ஒரு மாராத்தான்!
ஆகப்பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத – அதிர்ச்சிகரமான – விஷயத்தை, துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படம். இதற்காக அறிமுக இயக்குநர் தென்பாதியான், தயாரித்த ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண் முருகன் ஆகியோருக்கு முதல் பாராட்டுகள்!
ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்துவிட வேண்டும் எனத் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் தடகள வீரர். அதிகார வர்க்கத்தால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, பதைபதைக்க வைக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அந்த முடிவு… இப்போதும் இதயம் வலிக்கிறது.
தடகள வீரராக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடித்துள்ளார். ஓட்டப்பந்தய வீரருக்கே உரிய உடலமைப்பு. இயல்பான நடிப்பும் சேர்ந்துகொள்ள, முதல் படத்திலேயே நம்மை ஈர்த்துவிடுகிறார்.
தாய், தங்கை மீது வெளிப்படுத்தும் பாசம், தன்னை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்திடம் கொட்டும் ஆதங்கம், அந்த இறுதிக் காட்சியில் வெளிப்படுத்தும் முகபாவம்.. சிறப்பு!
கூடுதலாக அவரைப் பாராட்ட இன்னொரு விஷயமும் இருக்கிறது.
கையில் கொஞ்சம் பணத்துடன் சில லட்சங்களில் திரைப்படம் என்கிற பெயரில், திராபைகளைக் கொட்டி, அதன் சண்டை, பாட்டு என நடித்து ஹீரோ ஆகத்துடிக்கும் நபர்களை நிறைய பார்த்துவிட்டோம்.
ஆனால் நடிகராக மலர்ந்திருக்கும் கே.ஜெ.ஆர், ‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். ஆனால் இந்தப் படத்தில், கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். பில்ட் அப் காட்சிகள் ஒன்றுகூட இல்லை.
அவருடன் தடகள வீராங்கனையான சிந்தூரி விஸ்வநாத் வருகிறார். அவரும் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். தன்னிடம் தவறாக நடக்க முற்படும் நபர் மீதான ஆத்திரத்தை, ஒற்றை அறைச்சில் வெளிப்படுத்தும் காட்சி ஒரு உதாரணம்.
அரசு வழக்கறிஞராக விஜி வெங்கடேஷ், விளையாட்டு அகடமி அதிகாரியாக அஜித் கோஷி, மைதான நிர்வாகத்தில் பணியாற்றுபவராக ஆண்டனி, அமைச்சராக மன்சூர் அலிகான், நீதிபதியாக மோகன்ராம், நாயகனின் தாய், தங்கை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
பொருத்தமான இடங்களில் வரும் பாடல்கள், கதையோட்டத்தை இயல்பாக இழுத்துச் செல்கிறது. அதுவும் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடல், சிலிர்ப்பு.
பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் முத்திரை பதித்திருக்கிறார் ஜிப்ரான். இசையும் ஒரு கதாபாத்திரம் போல் படம் கூடவே ஓடி வருகிறது.
வசனங்கள் எல்லாமே நிஜமான பஞ்ச் டலாக்குகள்தான். நாட்டின் நிலையை குத்திக் காட்டுகிறது.
“பயம் இல்லாம எப்ப தூங்கற வீட்டுக்கு எப்போ போறமோ, அப்பத்தான் நிம்மதி..”
“யார் கூடவாவது ஓடிப்போனா கூட ஒன்னும் சொல்லமாட்டாங்கபோல.. விளையாட்டுல ஓடுறதுதான் பிரச்சினையா இருக்கு..”
“நமக்கான அங்கீகாரம், வெறும் திறமை இருந்தா மட்டும் கிடைச்சிராது..”
“நாங்க போட்டிக்கு போனா ஜெயிச்சிருவோம்.. ஆனா போட்டிக்குப் போறதுதான் போராட்டமா இருக்கு..”
கலை இயக்கம் சிறப்பு. அந்த சேரிப்பகுதி, நீதிமன்றம் ஆகியவை செட்கள் என நம்பவே முடியவில்லை.
அறிமுக இயக்குநர் தென்பாதியான், முதல் படத்திலேயே நம் இதயத்திற்குள் நுழைந்துவிட்டார்.
நாட்டை உலுக்கிக்கொண்டு இருக்கும் ஒரு விஷயத்தை… அனைவரும் அறிய வேண்டியதை.. துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார். “உங்களுக்காக நான்.. உங்களுக்காகவே நான்..” என நீதி மன்றத்தில் அமைச்சர் பேசும் காட்சிகள், அங்கங்கே அரசியல் கொடி மற்றும் சின்னங்கள் வரும் காட்சிகள் என அவரது தைரியம் வியக்க வைக்கிறது. பாராட்டுகள்.
தவிர, படத்தில் மது, புகை காட்சிகள் இல்லை. ஆபாச வன்முறை காட்சிகள் இல்லை.
“கிரிக்கெட் என்பது விளையாட்டே அல்ல.. வெள்ளையர்கள் தங்கள் நாட்டில் குளிரை எதிர்த்து நிற்க.. வார்ம் அப் செய்துகொள்ள – கண்டுபிடித்த சிறுபிள்ளைத்தனம். இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது அரசுக்கானது அல்ல.. அது தனியார் நிறுவனம். தேசிய உணர்வு என்பதே மூடத்தனம்.. கிரிக்கெட்டில் தேசியத்தைத் தேடுவது அதனினும் மூடத்தனம்” என முப்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். பதினைந்து ஆண்டுகளாகப் பேசியும் வருகிறேன். “ஐ.பி.எல். அணி என்பது உள்ளூர் அணியோ, தேசிய அணியோ அல்ல. மொத்தத்தில் இது வெறும் சூதாட்டம். ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட்டை ஒழித்தால்தான் விளையாட்டுகள் வளரும்” என்பதையும் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
இவற்றையும், இவற்றைவிட இன்னும் பல விஷயங்களையும் அதி அற்புதமான திரைப்படமாக அளித்து உள்ளார் இயக்குநர் தென்பாதியான்.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார், பாஜக எம்.பி.யான, பிரிஜ் பூஷண் ஷரண் சிங். இதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். (நேர்மையான பாஜக கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய மகன் கரன் சிங் பூஷனுக்கு சீட் கொடுத்தது. இப்போது அவர் மாண்புமிகு எம்.பி.!)
இதை உணர்த்தும் காட்சிகளைச் சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பு.
அதே போல, “திரை நாயகன் என்றால் அடுத்தவருக்காகப் போராடுவான்” என்கிற மாய பிம்பத்தை உடைத்து இருக்கிறார். நாயகன், தனது – தனது குடும்பத்தின் முன்னேற்றத்துக்கா ( நேர்மையுடன்) போராடுவதைச் சொல்லி இருப்பது அருமை.
இந்தப் படத்துக்காக, தென்பாதியான் சேர்த்திருக்கும் தகவல்கள் மலைக்க வைக்கின்றன. இவரும், தன் குருவான பா.ரஞ்சித்தின் பெயரைக் காபாபற்றி இருக்கிறேன்.
அதே நேரம்..
தனிப்பட்ட முறையில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை பதிந்து இருக்கிறார். அதே நேரம், இப்படிப்பட்ட வீரர்கள் வெற்றி பெற்றவுடன், சாதி – மதம் சார்ந்து கொண்டாட வரும் நபன்களையும், அதன் பிறகு அவர்கள் அளிக்கும் பணப்பரிசுகளையும் வசனங்களில் கோடிட்டு காட்டி இருக்கலாம்.
இதைவிட கொடுமை.. வீரர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தராத அரசுகள், அந்த வீரர் சாதனை படைத்தவுடன் மக்கள் பணத்தில் கோடிக்கணக்கில் பரிசு அளிப்பதையும் சொல்லி இருக்கலாம்.
சாதனை படைத்த வீரருக்கு ஓரளவு பணப்பரிசு கொடுத்து, மீதி பெருந்தொகையில் அவரது பெயரில் விளையாட்டு மைதானங்கள் புதிதாக அமைப்பது, இருக்கும் மைதானங்களை மேம்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாமே என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன்.
இந்தத் திரைப்படத்தை, சமீப வருடங்களாக விளையாட்டுத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் – குறிப்பாக, கடந்த ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி, தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூன் ஆகியோர் பார்க்க வேண்டும். பார்க்கவைக்க வேண்டும்.
முக்கியமாக.. இந்தத் திரைப்படம் முழுமையாக மக்களிடம் சென்றடைந்து, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் எதிர்கால சந்ததி நலம் பெறும்.
-
டி.வி.சோமு

