தமிழ்நாட்டு வானொலி நிலையங்களை முடக்க முயற்சி!: அன்புமணி கண்டனம்
“தமிழ்நாட்டில் ஐந்து வானொலி நிலையங்களை தரம் குறைத்து முடக்க மீண்டும் முயற்சி நடக்கிறது” என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
“. மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன!
. தமிழ்நாட்டு வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நான் கோரியிருந்த போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரசார்பாரதி விளக்கமளித்திருந்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன!
ஒரு மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் போதுமானது என்று பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் பண்பாட்டு பரவலையும், பகிர்தலையும் தடுக்கும். அப்படி செய்யக் கூடாது!
வானொலி நிலையங்கள் முடக்கப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். எனவே இந்த முடிவை கைவிட்டு, 5 வானொலி நிலையங்களும் இப்போதுள்ளவாறே தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்க வேண்டும்!” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

