அனந்தன் காடு: விமர்சனம்: ஓர் அதிரடிப் பயணம்!

அனந்தன் காடு:  விமர்சனம்: ஓர் அதிரடிப் பயணம்!

90-களின் பிற்பகுதியில் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழீழப் போராளியான நாயகன், கேரளாவின் நிழல் உலகக் கும்பலுடன் இணையும் பின்னணியில் படம் பயணிக்கிறது.

கதையோட்டம்:

இலங்கை ராணுவத்திடம் இருந்து தப்பி கேரளாவிற்கு வரும் ஆர்யா, அங்கிருக்கும் குடிசைப் பகுதி குற்றக்கும்பலிடம் அடைக்கலம் பெறுகிறார். இதற்கிடையே, கேரள முதல்வர் தனது அரசியல் எதிரிகளை ஒழிக்க, காவல்துறை உயர் அதிகாரி மூலம் அந்தக் கும்பலைப் பயன்படுத்துகிறார். முதல்வரின் திட்டத்தைச் செயல்படுத்தும் முன்னரே, ஆர்யா அந்தத் திட்டத்தில் குறிவைக்கப்பட்ட ஒரு செல்வந்தரைக் கொடூரமாகக் கொலை செய்கிறார். இந்தத் திடீர் கொலைக்கான காரணம் என்ன? அதன் பிறகு ஆர்யா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

நடிப்பு:

  • ஆர்யா: தமிழீழப் போராளியாகத் தனது உடல்மொழி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் நூறு சதவீதம் உழைப்பைத் தந்திருக்கிறார். குறிப்பாக அவரைக் கொல்ல சிங்கள ராணவ அதிகாரி முற்படும் நேரத்தில், மரண கோபத்தை வெளிப்படுத்துும் காட்சியில் அற்புதமான நடிப்பை அளித்து இருக்கிறார்.

  • முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத்: இவர்களின் நால்வர் குழு நடிப்பு கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கிறது.

  • இதர நடிகர்கள்: சுனில், விஜயராகவன், நிகிலா விமல் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே தங்கள் பாத்திரங்களை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங்:

  • இசை: பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை, படத்தின் தீவிரமான காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது. ஈழத்தில் நடக்கும் கொடூரங்களின் போது பின்னணி காட்சியும் ஒரு கதாபாத்திரமாக கதறுகிறது.  மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் அஜனீஸ்.

  • ஒளிப்பதிவு: எஸ்.யுவா 90-களின் காலக்கட்டத்தைத் தனது கேமரா கண்களால் மிகத் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளார். அந்த கிராமம்,  ஊர் செட் அனைத்தையும் இயல்பாக கொடுத்து இருக்கிறார். முக்கியமாக ஆற்று படுகையில் வரும் இறுதிக் காட்சிகள் அற்புதம்.

  • எடிட்டிங்: ரோஹித் வி.எஸ்.வரியத்தின் படத்தொகுப்பு, படம் விறுவிறுப்பாக நகர்வதை உறுதி செய்கிறது. அதே நேரம், சில இடங்களில் நீளும் காட்சிகளில் கத்திரி போட்டிருக்கலாம்.

இயக்கம்: ஜியென் கிருஷ்ணகுமார் ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்தை மிக வேகமாக இயக்கியுள்ளார். மேக்கிங் முறையில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றாலும், கதைக்களத்தில் சில தேவையற்ற திருப்பங்களையும், சர்ச்சைக்குரிய கருத்தியல்களையும் திணித்திருப்பது இயக்குநரின் பலவீனமாகத் தெரிகிறது.

பைனல் கமெண்ட்: தொழில்நுட்ப ரீதியாகவும், ஆக்‌ஷன் காட்சிகளின் வடிவமைப்பு ரீதியாகவும் ‘அனந்தன் காடு’ ஒரு சிறந்த திரையரங்கு அனுபவத்தைத் தரும் படமாகத் தெரிகிறது.

மொத்தத்தில் அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.

Related Posts