‘அம் ஆ’: திரைவிமர்சனம்: அற்புதம்!

‘அம் ஆ’: திரைவிமர்சனம்: அற்புதம்!

தாய்மையின் உச்சத்தைச் சொல்லும் உன்னதமான திரைப்படம்.

வனாந்திர மலை கிராமம்…   அங்கு சாலை அமைக்கப்போவதைகச் சொல்லி வருகிறார் ஒரு இளைஞர். அங்கு இருப்பவர்களிடம் நன்றாக பழகுகிறார். ஆனால் அவர் சாலை அமைப்பதற்காக வரவில்லை… அவர் காண்ட்ராக்டரும் இல்லை.

இன்னொரு பக்கம், அந்த கிராமத்துக்கு வருகிறார் ஒரு குழந்தையுடன் வருகிறார் ஒரு  முதிய பெண்மணி. குழந்தை தனது பேத்தி என்கிறார். ஆனால் அது அவரது பேத்தி இல்லை.

பார்வையற்ற ஒரு முதியவர் அந்த கிராமத்தில் இருக்கிறர். ஆனால் அவருக்கு எல்லாம் தெரிகிறது. முதிய பெண்மணி மீதும், குழந்தை மீதும் அலாதி பிரியம் வைத்து இருக்கிறார்.

அந்த இளைஞர் யார், அவர் வந்த நோக்கம் என்ன, அந்த முதிய பெண்மணி அங்கு ஏன் வந்தார்,  அவர் வளர்க்கும் குழந்தை யாருடையது என்பதே கதை.

குழந்தையின் பாட்டியாக தேவதர்ஷினி. எப்போதுமே சிறப்பாக நடிப்பவர். இந்தப் படத்தில் அதி சிறப்பு.  தேவதர்சினி என்றால் கடவுளின் பார்வை என்று அர்த்தம். கலைத்தாயின் பார்வை பட்டவர் இந்த தேவதர்சினி.

குழந்தை மீது செலுத்தும் பாசம், குழந்தையுடன் வேற்று நபர் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து சந்தேகமும் ஆக்ரோசமுமாய் பாய்வது.. அந்த இறுதிக் காட்சி… அழ வைத்து விடுகிறார் தேவதர்சினி.

சாலை அமைக்கப்போவதாகச் சொல்லிக்கொண்டு மலை கிராமத்துக்கு வரும் இளைஞனாக, திலீஷ் போத்தன். அற்புத நடிப்பு.  ஒவ்வொருவரையும் பார்வையாலேயே ஆழம் பார்ப்பது, குழந்தையின் பாட்டியிடம் கேள்வியால் துளைப்பது என்று அசத்துகிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் வரும் ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டிஜி ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.  குறிப்பாக அந்த குழந்தை… அற்புதம் அற்புதம்!

ஒளிப்பதிவு அனிஷ்லால் ஆர்.எஸ். 

மலை கிராமத்து அழகை  அப்படியே கண் முன் நிறுத்துகிறது இவரது கேமரா.

கோபி சுந்தரின் இசை, படத்துடன் ஒரு கதாபாத்திரமாகவே வந்து ரசிக்க வைக்கிறது.

பிஜித் பாலாவின் எடிட்டிங் கச்சிதம்.

வசனத்தை தமிழில் மொழிபெயர்க்காமல், உயிர்ப்பெயர்த்திருக்கிறார் எஸ்.ஆர்.வாசன். தமிழப்படம் பார்ப்பது போன்ற உணர்வே, படம் முழுதும்!

கதை, திரைக்கதை எழுதிய கவிபிரசாத் கோபிநாத் நெகிழ வைத்து இருக்கிறார்.  சக மனிதர் மீதான அன்பு அருகி வரும் காலத்தில்,  நேசத்தை வெளிப்படுத்தும் கதை.  அதை,  மலை கிராமம், மர்ம மனிதர்கள் என த்ரில்லராய் சொன்ன விதமும் சிறப்பு.. பாராட்டுகள்!

இன்று மக்களுக்கு… இன்னும் சொல்லப்போனால் வருங்காலத்தில் மக்களுக்கு மிக அவசியம் தேவைப்படும் ஒரு விசயத்தை மனதில் படும்படி சொல்லி இருக்கும் இயக்குநர் தாமஸ் செபாஸ்டியனை கொண்டாடலாம்.

இந்த டீம் விரைவில் நேரடி தமிழ்ப்படங்களுக்கு வரவேண்டும்!

ரேட்டிங்:  3.9/5

  • டி.வி.சோமு

 

 

 

 

 

Related Posts