அமரன்: ‘அந்த’ டயலாக்கை கவனிச்சீங்களா? நைசாக தனது கருத்தை புகுத்திய கமல்!

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியானது.
வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 42 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படம், 2014ல் காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகி இருக்கிறது.
காஷ்மீர் பகுதியில் மோதல்கள் – பலி எனதொடர்ந்து செய்திகள் வருகின்றன.
அதன் வரலாற்றை சுருக்காக பார்ப்போம்..
வெள்ளையர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறிய 1947ல், காஷ்மீர் (பகுதியும்) தனி நாடாக விளங்கியது. அப்பகுதி மன்னர் தொடர்ந்து தனி நாடாகவே இருக்க விரும்பினார்.
பாகிஸ்தானில் இருந்து ஆயுதக்குழு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த, மன்னர் இந்திய உதவியை நாடினார். “இன்னொரு நாட்டுக்காக நாங்கள் போரிட முடியாது. எங்களுடன் இணையுங்கள்.. உங்களுக்காக வருகிறோம்…” என்றது இந்தியா. அவரும் ஒப்புக்கொண்டார்.
அதோடு, “இந்த ஒப்பந்தம் தற்காலிகமானதே. காஸ்மீர் பகுதி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களது விருப்பம் நிறைவேற இந்தியா ஒத்துழைக்கும்” என்றும் இந்தியா சொன்னது.
பாக் ஆதரவு படையை இந்தியா விரட்டியது. அதோடு பிரச்சினையை ஐ.நா.வுக்கு கொண்டு சென்றது. அந்தந்த படைகள் அங்கங்கே நிற்கட்டும் என்றது ஐ.நா.
அதன்படி, காஷ்மீரின் பகுதிகளை இந்திய – பாகிஸ்தான் ராணுவ வசம் வந்தன. அடுத்து தன் வசம் இருக்கும் காஷ்மீரில் இருந்து ஒரு பகுதியை சீனாவுக்கு அளித்தது பாகிஸ்தான். தவிர இந்திய வசம் இருக்கும் காஷ்மீரின் ஒரு பகுதியையும் சீனா கைப்பற்றியது.
“பாகிஸ்தான் வசம் இருக்கும் காஸ்மீர் பகுதிகளில் இருந்து அந்நாட்டு ராணுவம் வெளியேற வேண்டும். எங்கள் வசம் இருக்கும் காஸ்மீர் பகுதிகளில் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை ஏற்கிறோம்” என்ற இந்தியா.
இரண்டும் இன்று வரை நடக்கவில்லை.
தனி நாடு கோரி போராட்டம் இன்றும் அங்கே தொடர்கிறது. இந்திய படைகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக இந்திய படைகள் மீதான விமர்சனங்கும் தொடர்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகிலேயே அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்த வருடம் ஜூலையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக 6 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,
பொதுவாகவே இந்திய ராணுவ பட்ஜெட்டில், காஷ்மீர் பாதுகாப்புக்கு கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது.
இதிலிருந்தே அந்த பகுதியின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.
2019ல் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், ம.நீ.ம. கட்சி தலைவருமான கமல்ஹாசன், “காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற – இந்தியாவின் அந்தக்கால – உறுதிமொழியை நினைவுபடுத்திப் பேசினார்.
அவர், “காஷ்மீரில் ஏன் இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த மறுக்கிறது? ஏன் அரசு பயப்படுகிறது? அப்படி வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் முடிவு வேறு மாதிரி இருக்கும்.
ஆசாத் காஷ்மீர் பகுதியில், ஜிகாதிகளை ஹீரோவாக சித்தரிக்கின்றனர். அது முட்டாள்தனம். அது மாதிரியான ஒரு முட்டாள் தனத்தை தான் இந்திய அரசும் செய்கிறது.
இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தினாலே எந்த ராணுவ வீரரும் பலியாக மாட்டார்கள்” என்றார்.
“காஸ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” என இந்தியா கூறி வரும் நிலையில், அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பிரிவினை வாதம் என்று கண்டனங்கள் எழுந்தன. வாக்கெடுப்பு நடத்தினாலும் மக்கள் இந்தியாவுக்குத்தான் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றுதான் கமல் பேசினார். ஆனாலும் அவர் பேசியது சர்ச்சையானது.
தவிர, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியை இங்கே, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்ற அழைப்பார்கள். பாகிஸ்தானியர்கள்தானா ஆசாத் (சுதந்திர) காஷ்மீர் என கூறுவார்கள்.கமல் தனது பேச்சில், “ஆசாக் காஸ்மீர்” என குறிப்பிட்டதும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
வட இந்தியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி, இந்த விசயம் குறித்து சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்ப.. விவகாரம் அகில இந்திய அளவில் பற்றிக்கொண்டது.
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில்,”கமலஹாசனின் கருத்து திரித்து கூறப்பட்டு இருக்கிறது. . ஒட்டுமொத்த காஷ்மீரும், இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதியே. துணை நிற்கும் சுய நலமின்றி நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கும், பாதுகாப்பு படைக்கும் எப்போதும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான இந்திய வீரர் முகுந்த வரதராஜன் வாழ்க்கை வரலாறாக உருவாகி உள்ள அமரன் படத்தைத் தயாரித்தார் கமல். (படத்திலும் ஆசாத் காஸ்மீர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.)
படத்தில் ஒரு வசனம் இடம் பெறும்.
முகுந்த் (சிவகார்த்திகேயன்) தந்தையுடன் பயணிப்பார். அப்போது தந்தை,
“காஷ்மீர் ல ஏண்டா பிரச்சனையா இருக்கு” என்பார்.
அதற்கு முகுந்த், “பேச வேண்டிய வங்க பேசணும்.. நாம் ஏம்பா பேசிக்கிட்டு” என்பார்.
அதாவது பேச்சுவார்த்தை மூலம் அங்கே அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற தனது கருத்தையும் படத்தினூடே கமல் நுழைத்துவிட்டார்!
பார்ப்போம்… எப்படியாவது அங்கு அமைதி திரும்ப வேண்டும்!
– டி.வி.சோமு